அக் 26, 2012 12:00 AM
அக் 26, 2012 12:00 AM
மிகச் சிறந்த மதிப்பெண்களுடன் படிப்பை முடித்துவிட்டு, பல நேர்காணல்களுக்கு சென்றும் இன்னமும் பதவிக்கான அழைப்பு பலருக்கு கிடைப்பதில்லை. இதைவிட ஆச்சரியப்படத்தக்க அம்சம் என்னவென்றால் இவர்களைவிட குறைவான மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கு பதவிக்கான அழைப்பு வந்துவிடுவதுதான்.
அப்படியென்றால் வேலை கிடைக்காதவரிடம் என்ன குறை இருக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுவது இயற்கைதானே?
ஒரு நேர்காணல் என்பது வந்திருப்பவரிடம் என்ன திறன்கள் இருக்கிறது என்பதை அறிவதுடன் அவரிடம் என்ன திறன்கள் இல்லை என்பதையும் அறிவதுதான் இதனடியில் உள்ள உண்மையாகும்.
ஒரு நிறுவனத்தில் உள்ள வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை வைத்துக் கொண்டே அந்த நிறுவனத்தை மேம்படுத்த ஒரு தனி நபரிடம் சில முக்கிய குணங்கள் இருப்பது கட்டாயம் என்று பணி வாய்ப்பாளர்கள் கருதுகிறார்கள். அந்த முக்கிய அம்சங்களை உங்களுக்காக இங்கே தருகிறோம்.
1. தோற்றம் : ஒரு நேர்காணல் அறைக்குள் நுழையும் போது நமது தோற்றம் எப்படி இருக்கிறது என்பது நமக்கு அந்த வேலை கிடைப்பதற்கான அடித்தளமாகும். முதல் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற நமது மூதுரையையும், நம்மைப் பற்றிய முதல் பதிவை மாற்ற இன்னொரு முறை முதல் பதிவுக்கான வாய்ப்பு கிடைக்காது என்பதையும் இங்கே நினைவில் வைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பதவிக்கான தொழில்முறைத் தோற்றத்தை நாம் வெளிப்படுத்துமாறு நேர்காணலுக்கு செல்வது முக்கியத் தேவையாகும்.
2. உற்சாக மனப்பான்மை மற்றும் திறமை வாய்ந்த தன்மை: ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் இயங்கு தன்மை கொண்டவர்களாகவும், உற்சாக மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருந்தால் அந்த நிறுவனம் செழிக்கும் என்று பணி வாய்ப்பாளர்கள் கருதுகிறார்கள். ஒரு நேர்காணல் அறையில் நுழையும் போது பணி தேடுபவரின் உற்சாகம் மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் தன்மை எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கிறார்கள்.
3. வேலை செய்யும் மனப்பான்மை: ஒரு நிறுவனத்தில் பணி புரிபவர்களில் ஒரு சாரார் எப்படியாவது கொடுக்கப்பட்ட வேலையின் ஒரு பகுதியை மட்டும் செய்துவிட்டு முடிந்த வரை தப்பித்துக் கொள்கிறார்கள். நல்ல பணி புரியும் எண்ணம் கொண்டவர்கள் இயன்ற வரை அந்த வேலையை சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிரமங்களைத் தாண்டி பணி புரிகிறார்கள். எனவே பணி வாய்ப்பாளர்கள் நேர்காணலின் போது வந்திருபவரின் பணி புரியும் கலாசாரம் எப்படி இருக்கும் என்பதை அறிய முனைகிறார்கள். அதனால் நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு உணர்வு, உற்பத்தித்திறன், ஒத்துழைப்பு, நடத்தை போன்ற தனி நபர் குண நலன்களை வளர்த்துக் கொள்வது நமது நேர்காணலை வெற்றி பெற உதவும்.
4. உணர்வுரீதியான முதிர்ச்சி: ஒரு நிறுவனத்திற்கான ஊழியர்களைத் தேர்வு செய்யும்போது புத்திசாலித்தனத்திற்கான காரணியை (ஐ.கியூ.,)விட உணர்வுரீதியான காரணிக்கே (இ.க்யூ.,) அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஐ.க்யூ.,வில் சிறந்த ஊழியர்கள் தங்கள் குறுகிய காலத் தேவைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் ஒரு நிறுவனத்தில் நெடுங்கால இலக்குகளை அடைவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே உங்கள் உணர்வுரீதியான முதிர்ச்சி உங்கள் பணிக்கான உத்திரவாதமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
5. பணியைக் குறித்த நமது அணுகுமுறை : நாம் ஒரு பதவியை அடைய உண்மையாக விரும்பும் பட்சத்தில் நிச்சயமாக அதற்கான நேர்காணலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். சம்பளத்திற்காகவோ அல்லது ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் அதற்கான நேர்காணலை எதிர்கொள்ளும் போது நிச்சயமாக நமது எண்ணம் நாம் சொல்லும் பதில்களில் எதிரொளிப்பதை தவிர்க்க முடியாது. எனவே ஒரு நேர்காணலை எதிர்கொள்ளும் முன் இது குறித்த சுய ஆய்வையும், தேவைப்படும் மாற்று சிந்தனைகளையும் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
6. விசுவாசம்: ஒரு நிறுவனத்தில் பணி புரியத் தேவைப்படும் மிக முக்கிய ஒன்று அந்த நிறுவனத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசமாகும். உங்கள் விசுவாசத்தை சில சமயங்களில் வார்த்தைகளாகவும், பல சமயங்களில் உங்கள் செயல்கள் வாயிலாகவும் வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஒரு பொதுவான இலக்கை நோக்கிய ஒரு குழுவின் பயணத்தில் விசுவாசம் இருந்தால் மட்டுமே நிறுவனம் வெற்றிப்பாதையை நோக்கி செல்ல முடியும். எனவே உங்கள் விசுவாசம் குறித்த பரிசீலனையில் நேர்காணல் செய்பவர்கள் இறங்குவதை உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கலாம்.
7. ஒத்துழைப்பு/ஈடுபடும் தன்மை: தற்போது இருக்கும் சர்வதேச போட்டி அரங்கில் ஒரு நிறுவனம் வெற்றி பெற அங்குள்ள ஊழியர்களின் ஒத்துழைப்பு மற்றும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளும் தன்மை முக்கிய பங்காற்றுகிறது. எனவே உங்களிடம் உதவும் தன்மை, ஆதரவாக செயல்படும் தன்மை, திறந்த மனதுடன் இருத்தல் போன்ற குணங்கள் இருக்கிறதா என்று நிச்சயம் சோதிக்கப்படும்.
8. கோபத்தை கட்டுப்படுத்துதல்: ஒரு நேர்காணலின்போது உங்களின் முந்தைய பணி வாய்ப்பாளரைப் பற்றி நீங்கள் தரக்குறைவாகவோ அல்லது தவறாகவோ பேசுவது நீங்கள் உணர்வு பூர்வமாக முதிர்ச்சி அடையாதவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவதோடு இந்த வேலை உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் குறைத்துவிடுகிறது. ஒரு தனி நபருக்கு ஏற்படும் கோபம் போன்ற ஒரு குணத்தை முறைப்படுத்துவதன் மூலம் வேலையைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள திறன்களை வளர்த்துக் கொள்வது உங்கள் வெற்றிப் பாதைக்கான படிக்கட்டுகளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்களின் அடுத்த நேர்காணல் சிறக்க வாழ்த்துக்கள்.
