அக் 26, 2012 12:00 AM
அக் 26, 2012 12:00 AM
இன்றைய காலத்தில், கேள்வி கேட்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை. அதற்கு சரியான பதில் சொல்ல நாம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த மழலைப் பருவத்தில் கேள்வி கேட்கும் துடிப்பு இயற்கையாகவே இருப்பதற்கு, கூச்ச சுபாவம் இல்லாததும் ஒரு காரணம். ஆனால், சற்று வளர்ந்ததும், கூச்சத்திற்கு பலர் இடம் கொடுத்து விடுகின்றனர்.
இது பள்ளி செல்லும் நாட்கள் முதல் கல்லூரி, அலு வலகம் என எதிர்காலம் முழுவதும் நீடிக்கிறது. இதனால், சரியான திறமை இருந்தும் வெளிகாட்ட முடியவில்லை. அவர்களது, திறமை அவர்களுடனே மக்கி போய்விடுகிறது.
கேள்வி கேட்பது ஒரு கலை. கேள்வி கேட்டால், அறியாமை வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் பலருக்கும் உள்ளது. கேள்வி கேட்பதற்கு, தினமும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தும், சிலரே சரியாகவும், துல்லியமாகவும் கேள்வி கேட்கின்றனர். சிறு வயதில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களில் கேள்வி கேட்கும் திறனும் ஒன்று. இத்திறன், அறியாதவற்றை அறிந்து கொள்வதற்கும், அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும்
உதவும்.
கேள்வி கேட்க சில ஆலோசனைகள்
* கேள்வி, சுருக்கமாக இருப்பது அவசியம். இதில் துவக்கம், முடிவு என பிரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.
* என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கேள்வி உணர்த்த வேண்டும். அதற்கு கேள்வி தெளிவாக இருக்க வேண்டும். விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம்; விதண்டாவாதத்திற்குரியதாக இருக்கக் கூடாது.
* தக்க நேரத்திலும், சரியான இடத்திலும் கேள்வி அமைவது அவசியம். உதாரணமாக, வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்திற்கு சம்பந்தம் உள்ள, தக்க சமயத்தில் கேட்கப்படும் கேள்வி, அனைத்து மாணவர்
களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
* படிக்கும் போது, எழுதும் போது,
வேறு ஒரு செயலில் ஈடுபடும்போது என பல சமயங்களில்
சந்தேகம் எழலாம். அதை தவறாமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
* கலந்துரையாடல் கூட்டங்களில், கேள்வி கேட்க இயலாமலோ, நேரம் கிடைக்காமலோ போகும்பட்சத்தில், உரிய நபரை தனியாக சந்தித்து பதில் பெற தயங்காதீர்கள். இருவர் மட்டுமே பங்கேற்கும் கலந்துரையாடல் சிறந்ததாகவே அமையும்.
