/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
நிகழ்வுகளை உள்வாங்கினால் தான் நிர்வாகி
/
நிகழ்வுகளை உள்வாங்கினால் தான் நிர்வாகி
பிப் 09, 2014 12:00 AM
பிப் 09, 2014 12:00 AM
நிர்வாகம் என்பது நிர்வாகத்தை கவனித்து மேம்படுத்துவது என்ற நிலையில் பலராலும் பார்க்கப்படுகிறது. பணியாட்களை நிர்வகிப்பது மட்டும் நிர்வாகமல்ல. நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல், பொருளாதாரம், கண்டுபிடிப்புகள், காலநிலை மற்றும் சர்வதேச நிகழ்வுகள் போன்றவற்றையும், அதன் தாக்கங்களையும் அறிந்து நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்துவதும் நிர்வாகியின் பணியாகும்.
எந்த ஒரு நிறுவனமும் ஒரு நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் சார்ந்து இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. ஏனெனில் ஒரு நிறுவனத்தின் மனித வளம் என்பது பல்வேறு நிலைகளைக் கொண்டது. அம்மனித வளம் பல்வேறு சமூக, பொருளாதார, இன அடிப்படைகளைக் கொண்டது. அந்த அடிப்படைகள் உலகையும், உலகு சார்ந்த நிகழ்வுகளினால் ஏற்படும் தாக்கத்தையும் கொண்டது.
எனவே ஒரு நிர்வாகி நிறுவனத்தின் உள்ளே உள்ளச் சூழ்நிலைகளை மட்டுமல்ல, புறச்சூழலையும் கருத்தில் கொண்டு இயங்க வேண்டியது அவசியமாகிறது. அனைத்தையும் கவனத்தில் வைத்தால் தான் நிறுவனத்தின் வளர்ச்சி, நீண்ட தொலைநோக்குடன் கூடிய நிலையான வளர்ச்சியாக இருக்க முடியும்.
நிர்வாக முடிவுகளை மாற்றியமைத்த நிகழ்வுகளாக ஐந்து நிகழ்வுகளை நிர்வாக இயலாளர்கள் கூறுகின்றனர்.
1) 1771இல் கிராம்ஃபோர்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இது தான் நவீன நிறுவனங்களின் முன்மாதிரி என அழைக்கப்படுகிறது.
2)நிர்வாக மேம்பாட்டிற்காக 1911 இல் உருவாக்கப்பட்ட அறிவியல் ரீதியான விதிமுறைகள்.
3) ஜப்பானில் 1937 இல் ஆரம்பிக்கப்பட்ட டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனம்.
4) 1989 இல் இடிக்கப்பட்ட பெர்லின் சுவர் நிகழ்வு.
5) 1991 இல் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வு.
மேற்கண்ட ஓவ்வொரு நிகழ்வும் உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன. இந்நிகழ்வுகளை ஒரு சாதாரண விஷயமாகக் கருதியவர்கள், வளர்ச்சியில் பின் தங்கியவர்களாகிப் போனார்கள். கால தாமதமாக இந்நிகழ்வுகளின் பாதிப்பை உணர்ந்து, அது தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எப்படி உதவும் என ஆராய்ந்தவர்கள், தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.
உருவாக்கப்படும் கருவிகள், நிகழ்வுகளை உள் வாங்கிக்கொள்ளாத நிறுவனங்கள் காணாமல் போன வரலாறும் உண்டு. நிர்வாகிகளின் அலட்சியத்தால் நிறுவனம், நிறுவனத்தின் ஊழியர்கள், ஊழியர்களின் குடும்பங்கள் மட்டுமல்ல நிறுவனத்தை கருத்தில் கொண்டு உருவான சிறு கடைகள், நிறுவனம் இருக்கும் இடத்தின் வளர்ச்சி என பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
எனவே, நிர்வாகிகள் நிறுவனத்தின் மனிதவள நிர்வாகத்தை விதிமுறைகளின் படி பின்பற்றும், அதே நேரத்தில் நிறுவனத்திற்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளையும் ஆராயவேண்டியது அவசியம். இதற்கான முன் தயாரிப்புகளை தாங்கள் கல்வி கற்கும்போதே ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், தற்பொழுது பல நிறுவனங்களில் உள்ளவர்கள் செய்தித்தாள்களைப் படிக்காதவர்களாகவும், நாட்டு நடப்புகள், கண்டுபிடிப்புகள் போன்றவை குறித்த தெளிவற்றவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்நிலை நிர்வாகத்திற்கு நல்லது அல்ல.
மாணவர்கள் தங்கள் எதிர்காலம் நிர்வாகத் துறைதான், என்று முடிவெடுத்தவுடன் நிர்வாகப் பாடங்களோடு மாற்றங்களை உருவாக்கும் மாற்றங்கள் எது என கண்டுபிடிப்பதற்கும் தங்களை தயார்படுத்த தங்களைச் சுற்றி மட்டுமல்ல, இவ்வுலகெங்கும் நடக்கும் நிகழுவுகளையும் கூர்ந்து கவனியுங்கள்.

