/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பயிற்சி மையங்கள்: மாணவர்களின் தேடலும், பயிற்சியாளர்களின் தேவையும்
/
பயிற்சி மையங்கள்: மாணவர்களின் தேடலும், பயிற்சியாளர்களின் தேவையும்
பயிற்சி மையங்கள்: மாணவர்களின் தேடலும், பயிற்சியாளர்களின் தேவையும்
பயிற்சி மையங்கள்: மாணவர்களின் தேடலும், பயிற்சியாளர்களின் தேவையும்
பிப் 10, 2014 12:00 AM
பிப் 10, 2014 12:00 AM
கல்வி நிலையங்கள் குறைவாக இருந்த காலத்தில் ஆசிரியர் பாடம் நடத்துவதே போதுமானதாக இருந்தது. மேலும், அதுவே தரமானதாகவும் இருந்தது. கல்வி நிலையங்களின் எண்ணிக்கையும், நுழைவுத்தேர்வுகளின் எண்ணிக்கையும் கூடுதலான பிறகு தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவதில் போட்டியும் ஏற்பட்டது. அதனோடு கல்வி நிலையங்கள் அதிகரித்ததன் விளைவாக திறன் வாய்ந்த ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.
பள்ளியில் படிப்பதே போதும் என்ற நிலை மாற்றம் பெற்று, "அதிகமாக படித்தால்தான் அதிகமாக மதிப்பெண்கள் பெற முடியும்" என்ற எண்ணம் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கு நகரமயமாக்கலும் ஒரு முக்கிய காரணம். நகரத்தில் வசிக்கும் குழந்தைகள், பள்ளி முடித்து வந்த பின்னர் அவர்களை வேலைக்கு செல்லும் பெற்றோரால் கவனிக்க முடியாத நிலை வந்தபோதும், குழந்தைகளால் தொலைக்காட்சியை தவிர வேறு எதற்கும் நேரம் ஒதுக்க முடியாத நிலை வந்த போதும் "டியூஷன் சென்டர்" எனப்படும் பயிற்சி மையங்களை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.
பயிற்சி மையங்களில் உள்ள ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்களை விட எளிதாகக் கற்றுத்தருபவர்களாக மாணவர்களால் பார்க்கப்பட்டனர். எத்தகைய சந்தேகங்களையும், துணிந்து பயிற்சியாளரிடம் கேட்கலாம் என்ற நிலையில், பயிற்சி ஆசிரியர்கள் இருந்ததும் ஒரு முக்கிய காரணம். பயிற்சி மையங்கள் தற்பொழுது சிறந்த ஆசிரியர்களை வரவழைத்து, கற்றுத் தருவதற்கென குறுகிய கால பாடத்திட்டத்தை உருவாக்கி மாணவர்களை படிக்க வைக்கின்றனர்.
பள்ளி, கல்லூரியில் வேலை பார்ப்பதை விட பயிற்சி மையங்களில் பணியாற்றுவது அதிகமாக வருமானம் தரக்கூடியதாக இருக்கிறது, என்பது ஆசிரியர்களின் கருத்தாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி பாடங்கள் தவிர கல்லூரி நுழைவுத்தேர்வுகளுக்கு முன் தயாரிக்கவும், அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்காகவும் பயிற்சி மையங்களை மாணவர்கள் தேடிச் செல்கின்றனர்.
தகுதி
பயிற்சி மையங்களின் எண்ணிக்கை அதிகமானதன் காரணமாக, ஆசிரியர்களின் தேவைப்பாடும் அதிகரித்துள்ளது. பயிற்சி மையங்கள் பொதுவான கட்டமைப்பு மற்றும் பயிற்சி முறைகளை கொண்டது கிடையாது. ஒவ்வொன்றும் தனித்தனியாக அவர்களுக்கென செயல் திட்டங்களை காலத்திற்கேற்ப மாற்றி செயல்படுகின்றன. இதன் காரணமாக கற்றுத் தரும் ஆசிரியரின் தகுதியும் ஒரே நிலையில் இருப்பதில்லை. முக்கியமாக மாணவர்கள் ஆசிரியரின் தகுதியை விட, கற்றுத்தரும் ஆசிரியரின் நடைமுறைகளைத் தான் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
பயிற்சியாளர்களுக்கான திறன்கள் என பார்க்கும்பொழுது எடுக்கும் பாடத்திற்கேற்ப பட்டயம், இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் என குறிப்பிட்ட துறையில் அதிகம் தெரிந்திருப்பதும், பாடங்களைப் புரிந்திருப்பதும் அவசியமாக இருக்கிறது.
தேவையான திறன்கள்
பல ஆண்டு ஆசிரிய பணி அனுபவம் இருந்தால் மாணவர்களின் தனிப்பட்ட முறையில் புரிந்துகொள்வதற்கு துணை புரியும்.
தனியாக பயிற்சி மையத்தை உடனடியாக தொடங்குவதை விட, வேறு மையங்களில் பணியாற்றிவிட்டு வருவது, சிறப்பாக நிர்வகிக்க உதவும்.
தேர்வுகள், பாடத்திட்டங்கள் போன்றவற்றில் வரும் மாற்றங்களை தெரிந்திருப்பது மிக மிக அவசியம். அதன் மூலம் கல்வி நிலையங்களின் ஆசிரியர்களுக்கு சமமாக பாடங்களை நடத்த முடியும்.

