sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

சோதனைகளை சாதனையாக்குங்கள்!

/

சோதனைகளை சாதனையாக்குங்கள்!

சோதனைகளை சாதனையாக்குங்கள்!

சோதனைகளை சாதனையாக்குங்கள்!


செப் 25, 2014 12:00 AM

செப் 25, 2014 12:00 AM

Google News

செப் 25, 2014 12:00 AM செப் 25, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானவில்லின் வண்ணங்கள் எப்படி இருக்கும்? பூ, பறவை, மலை, வானம் எப்படி இருக்கும்? இப்படி இயற்கையின் அழகை பார்த்து ரசிப்பதற்குத்தான் பார்வை தேவை... சாதனை படைக்க தன்னம்பிக்கையும், ஊக்கமும் இருந்தால் போதும்.

இதற்கு சரியான உதாரணம் தான், நாட்டின் உயரிய அரசு பதவிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில், சமீபத்தில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தை பெற்ற பெனோ ஷெபைன் என்ற 24 வயது பார்வையற்ற பெண். இவர் மட்டுமல்ல; இன்னும் எத்தனையோ பேர் தங்களது குறைபாடுகளால் சற்றும் மனம் தளராமல் வங்கி அதிகாரியாக, அரசு அலுவலராக, பேராசிரியராக, வழக்கறிஞராக இந்த சமூகத்தில் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றனர்.

சிரமங்களை கடந்து...

பார்வையற்ற மாணவர்கள் கல்வி கற்கும் சிரமத்தை போக்க பேரூதவி புரிகிறது பிரெயிலி எழுத்து முறை. இம்முறையில் பாடங்களை புத்தகங்களாகவும் தயாரிக்க பயிற்சி பெறுகின்றனர். ஒரு புத்தகத்தை பார்வையுடைவர்கள் (ரீடர்) வாசிக்க வாசிக்க அதே வேகத்தில் வார்த்தைகளை தங்களது வடிவில் பதிந்துகொள்கின்றனர். ஆறு புள்ளிகளை மட்டுமே வைத்து ஆங்கிலம், தமிழ், கணிதம் என அனைத்து பாடங்களையும் தொட்டுப் பார்த்தே கற்றுக்கொள்ள முடிகிறது.

வாய்ஸ் சாப்ட்வேர் மூலம் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள முடிகிறது. ஸ்மார்ட்போன் வரவால், அவர்களது கற்கும் திறன் மேலும் எளிதாகியுள்ளது. எனினும், கெமிக்கல் சார்ந்தவற்றை கற்பது அவர்களுக்கு இன்னும் சவாலான விஷயமாக உள்ளது. எனவேதான், உயர்கல்வியின் போது அவர்கள் தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற துறையையே தேர்வு செய்கின்றனர். கணிதம் இடம்பெறும் பொருளியல் துறையை இவர்களுக்கு வழங்குவதற்கு கல்லூரிகள் தயக்கம் காட்டுகின்றன. அதையும் மீறி தன்னம்பிக்கையிடன் தனக்கான துறையை போராடியும் பெறுகின்றனர்.

இளைஞர்களின் அர்ப்பணிப்பு

பார்வையற்ற மாணவர் தேர்வு எழுதும் சிரமத்தை போக்க ஒருவர் உதவுகிறார்; அவர் ‘ஸ்கிரைப்’ என்ற அழைக்கப்படுகிறார். கேட்கப்படும் வினாக்களுக்கு மாணவர் தரும் பதிலை அப்படி எழுத மட்டுமே ஸ்கிரைப் அனுமதிக்கப்படுகிறார். அரசின் பாடத்திட்டத்திலோ, வினாத்தாள்களிலோ எந்தவித வேறுபாடும் இல்லை. மற்றொருவரின் உதவியுடன் தேர்வு எழுதுவதால் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுவது மட்டுமே அவர்கள் பெறும் சலுகை.

ரீடர், ஸ்கிரைப் சேவைகளுக்கு மன திருப்தியுடன் பல்வேறு சமூக அமைப்புகளும், இன்றைய இளைஞர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தேடி வந்து தங்களை இணைத்துகொள்வது மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரியது.

பெற்றோரின் முக்கியத்துவம்

பொதுவாக, மாற்றுத்திறன் குழந்தைகள் மிகவும் புத்திசாலியாகவே இருக்கின்றனர். இவர்களுக்கு பெற்றோர் முதலில் உறுதுணையாக இருக்க வேண்டும். பார்வைக் குறைபாடு, செவித் திறன் குறைபாடு என எந்த குழந்தையையும் பெற்றோர் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அக்குழந்தைகளை எப்படி உருவாக்குவது என்று சிந்திக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன், பெற்றோர்களது ஒத்துழைப்பும், ஊக்கமும் இணைந்தால் யாராலும் சாதிக்க முடியும்.

மாற்றுத்திறனாளிகளை வீட்டிலேயே வைத்துக் கொள்வது மிகவும் தவறு. ஒவ்வொரு குழந்தையும் ஒரு சவால் தான். அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் சிறப்பு பள்ளிகள், அனைத்து மாவட்டங்களிலும் தற்போது உள்ளன. அங்கு அவர்களை சேர்க்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரியான திறன்கள பெற்றிருப்பதில்லை. குழந்தைகளிடையே கற்கும் திறன், ஐ.க்யூ., வேறுபடுகிறது. இவை அனைத்திற்கும் அப்பால், ஒவ்வொருவரும் சுயமாக வாழவே விரும்புகின்றனர். அனுதாபப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. மாறாக, அவர்களது உணர்வுகளை மற்றவர்கள் புரிந்து, அங்கீகரிக்கவே விரும்புகின்றனர்.

அரசின் பங்கு

குறைபாடுடைய குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்துகின்றன. சிறப்பு பள்ளிகளை அமைத்து, அங்கு தேவையான உபகரணங்களை பெரும் செலவில் அமைக்கின்றன. எனினும், அவற்றை முறையாக பயன்படுத்தவும், அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் உரிய முயற்சி எடுக்கப்பட வேண்டும். மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளுக்கு பாரபட்சம் இல்லாமல் உதவும் வகையில், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உதவிபுரிவதும் அவசியமாகிறது.

தன்னம்பிக்கையே வாழ்க்கை

வாழ்வில் அனைத்து வசதிகளும் இருந்தும் ஏதோ ஒன்றை காரணம் காட்டி, அதனால் தான் என்னால் வெற்றிபெற முடியவில்லை எனக் கூறும் அதே சமூகத்தில் தான், தங்களது வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு சிரமங்களை, தன்னம்பிக்கையுடன் எதிர்நோக்கி, அனைத்து சோதனைகளையும் சாதனைகளாக்கி, பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

-மார்க்ரெட், முதல்வர், லிட்டில் பிளவர் கான்வென்ட் பார்வையற்றோர் பள்ளி.






      Dinamalar
      Follow us