/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
நீங்கள் பணிமாறுவதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம்...
/
நீங்கள் பணிமாறுவதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம்...
நீங்கள் பணிமாறுவதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம்...
நீங்கள் பணிமாறுவதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம்...
செப் 28, 2014 12:00 AM
செப் 28, 2014 12:00 AM
தற்போது நமது பணியில், நாம் செய்வதைவிட, நம்மால் அதிகமான விஷயங்களை செய்ய முடியும் என்று தோன்றும்போதோ, அலுவலகம் செல்வதற்கே பிடிக்காமல் போகும்போதோ, தினமும், எப்போடா, பணி முடியும் என்ற நினைப்பு வரும்போதோ, கடுமையாக உழைத்தும், சரியான ஊதியமும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை எனும்போதோ, அலுவலகச் சூழல் இனியும் நமக்கு சரிப்பட்டு வராது என தோன்றும்போதோ, நாம் தற்போது இருக்கும் பணியிலிருந்து வேறு பணிக்கு மாறியாக வேண்டிய சூழல் எழுகிறது.
வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டங்கள் அல்லது வரங்கள் என்னவெனில், தனக்குப் பிடித்த படிப்பை படிப்பதும், தனக்குப் பிடித்த வேலையை பார்ப்பதும்தான். ஆனால், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், இந்த அற்புதமான வாய்ப்புகள் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை என்பதுதான் ஒரு மாபெரும் சோகம்.
எதைப் படித்தால் வேலை கிடைக்குமோ, அதைப் படிக்க வேண்டியுள்ளது. எப்படியாவது வாழ்ந்தாக வேண்டுமே என்ற கட்டாயத்திற்காக, ஏதோ ஒரு வேலையைப் பார்க்க வேண்டியுள்ளது. பிடித்த ஒரு உணவை உண்பதற்கு பதிலாக, பசியைப் போக்க வேண்டுமே என்று, கிடைத்த ஏதோவொன்றை, ருசியறியாமல், அனுபவிக்காமல் சாப்பிடுவது போன்றதாகும் இது.
எனவே, நாம் தற்போது பார்ப்பது விரும்பிய வேலையோ அல்லது விரும்பாத வேலையோ, குறைந்தபட்சம், நாம் செய்யும் பணியில் அல்லது பணிபுரியும் நிறுவனத்தில் நமக்கு திருப்தியும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில் பணியிலிருந்து விலகி, வேறொரு பணிக்கோ அல்லது நிறுவனத்திற்கோ நாம் கட்டாயம் மாறியே ஆக வேண்டும்.
இங்கே, சில மன அறிகுறிகள் தரப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் உங்களிடமும் ஏற்பட்டால், நீங்கள் பணி மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
குறைவான ஆர்வம்
நீங்கள் செய்யும் பணியில் ஆர்வம் குறைந்தாலோ அல்லது ஆர்வத்தை இழந்துவிட்டாலோ, நீங்கள், அப்பணியில் எதை சாதிக்க நினைத்தாலும், அது எதிர்மறையாக போய்விடும். மேலும், பணியில் அதிக கவனக்குறைவும், கவனச் சிதறலும் ஏற்படுதல், எப்போது அலுவலகம் முடியும் நேரம் வரும்; எழுந்து வீட்டிற்கு ஓடலாம் என்ற நினைப்பு வருதல் போன்றவை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
பணம் என்பது மிகவும் முக்கியம். அதற்காக, அதை சம்பாதிக்க, எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விடலாம் என்று முடிவெடுத்துவிட முடியாது. நாம் செய்யும் பணியே, நமது சிந்தனையை, ஆர்வத்தை, ஆற்றலை மற்றும் எதிர்கால நோக்கத்தை உயிரோட்டமாக வைத்திருக்க உதவும் ஒன்றாகும் என்பதை மறக்கலாகாது.
காலையில் எழும்போதே...
ஒருவர், தான் செய்யும் பணியை விரும்பினால், அவருக்கு காலையில் எழும்போது, உற்சாக மனநிலை ஏற்படும். மாறாக, அவர் காலையிலேயே, சோம்பலாகவும், மனச்சோர்வுடனும் இருந்தால், பிரச்சினை அவரது பணியிலோ அல்லது அலுவலகத்திலோ இருக்கிறது என்று அர்த்தம்.
காலையில் ஒருமுறை கடிகாரம் அலாரம் அடித்தாலே எழுந்துவிட வேண்டும். மாறாக, நேரத்தை சிறிதுசிறிதாக அதிகரித்து, பல குட்டித் தூக்க விளையாட்டுக்களை மேற்கொள்ள உங்களுக்கு ஆர்வம் இருந்தால், உங்களுக்கு பணியில் ஆர்வம் இல்லை என்பதற்கான அறிகுறிகளில் அதுவும் ஒன்றாகும்.
பிறர் பார்க்கும் பணிகளைப் பற்றி கவலைப்படுதல்
உங்களின் உறவினர் அல்லது நண்பர் பார்க்கும் வேலையை நினைத்து ஏங்கி, அதைப்போல் நமக்கு அமையவில்லையே என்று மனதில் கருதினால், பணி மாறுதலைப் பற்றி கட்டாயம் யோசிக்கத் துவங்க வேண்டும். மேலும், உங்களுக்குத் தெரிந்தவர்கள், உங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறார்களே, நம்மால் முடியவில்லையே என்று நீங்கள் கருதினாலும், நீங்கள் பணிமாற வேண்டிய நேரம் வந்துவிட்டதென அர்த்தம்.
அன்றாடம் புகார்கள்
உங்களின் பணியில், தினந்தோறும் உங்களுக்காக ஒதுக்கப்படும் assignment -கள் அல்லது task -களின் மீது நீங்கள் அடிக்கடி அல்லது எப்போதும் குறை சொல்லியவாறே இருந்தால், நீங்கள் தவறான பணியைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
உடன் பணிசெய்வோருடன்...
ஒரு நல்ல பணிச்சூழல் என்பது, உடன் பணிசெய்வோருடன் ஒருவருக்கு இருக்கும் ஆரோக்கியமான உறவை பெரிதும் சார்ந்ததாகும். உடன் வேலை செய்வோரிடம் முறைத்துக்கொண்டோ அல்லது பெரும்பாலோரிடம் சண்டையிட்டு, சிலரிடம் மட்டுமே நல்லுறவை பேணிக்கொண்டோ இருப்பது, ஆரோக்கியமான பணிச்சூழல் ஆகாது.
உங்களால் பிறரை எளிதாக அணுக இயல வேண்டும் அல்லது உங்களை பிறர் எளிதாக அணுக இயல வேண்டும். நிலைமை வேறாக இருந்தால், எங்கு உங்களால் நல்ல சூழலை பெற முடியும் என்று நினைக்கிறீர்களோ, அங்கே சென்றுவிடுவதே உசிதம்.
ஆரோக்கியம்
உங்களது பணியின் மூலம் ஏற்படும் மன அழுத்தம், உங்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதிப்பதாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு, பணியின்போது டென்ஷன் அல்லது சலிப்பு உள்ளிட்ட காரணிகளால், அடிக்கடி தலைவலி ஏற்பட்டாலோ அல்லது தலைசுற்றல் போன்ற உணர்வு ஏற்பட்டாலோ, நீங்கள் உடனடியாக வேறு வேலை தேடுவதே சிறந்தது.

