/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஆர்வத்தை கடன் வாங்காதீர்கள்...
/
ஆர்வத்தை கடன் வாங்காதீர்கள்...
டிச 03, 2014 12:00 AM
டிச 03, 2014 12:00 AM
என்ன செய்வது என்று திகைத்துப் போயிருந்தான் சம்பத். மேல்நிலை பொதுத்தேர்வில் 70 சதவீத மதிப்பெண்தான் அவனுக்கு கிடைத்திருந்தது. தேர்வு முடிவு வெளியானதற்கு மறுநாள், தன் தந்தையின் பெட்டிக் கடையில் போய் உட்கார்ந்திருந்தான்.
பெட்டிக் கடையில் பீடி, சிகரெட் விற்றுக் கொண்டிருந்தாலும், கால்குலசும், டிரிக்கோணமிட்ரியும் அவன் மனதில் இருந்து மறையவில்லை. தொலைதூரக் கல்வி முறையில் பட்டப் படிப்பு படித்தான். பிறகு, ‘டான்செட்’ தேர்வு எழுதி குறைந்த செலவில் எம்.சி.ஏ., படித்தான். இன்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் அவன் மென்பொருள் வல்லுநராக பணியாற்றுகிறான். ஒருமுறை இங்கிலாந்துக்கும் போய் வந்துவிட்டான்.
உண்மையான வலிமை
இன்றைய இளைஞர்கள் பலருக்கு, குடும்பச் சூழ்நிலையே பெரிய தடைக்கல்லாக தெரிகிறது. பெற்றோருக்கு படிப்பறிவில்லாததால், தாங்கள் வாழ்வில் உயர வழியில்லாமல் போய்விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் நிலை இன்று நம் நாட்டில் இல்லாமல் இருக்கலாம். சாதகமற்ற சூழ்நிலையினை உறுதியான மனதோடு கடந்துவர வேண்டும். அதுவே உண்மையான வலிமை. ஏக்கங்களையும், பொறாமையையும் தூக்கி சுமந்துகொண்டு அலைந்தால், அவை மனதை மட்டுமல்ல, உடல் நலத்தையும் பாதிக்கும். ஆகவே, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
மாற்றத்திற்கான வழி
ஏளனம், கடுஞ்சொற்கள் இவற்றைக் கடந்து வராத மனிதர்களே இல்லை எனலாம். உங்களை மட்டும்தான் அவமானம் துரத்துகிறது என்றெல்லாம் நினைத்துக் கொள்வது அறியாமை. இன்று, பெருமிதத்துடன் புன்னகைத்துக் கொண்டிருக்கும் அத்தனை முகங்களின் பின்பும், தழும்புகள் நிறைந்த மனம் இருக்கத்தான் செய்யும். இன்றைய உங்களின் குடும்ப சூழ்நிலை ஏழ்மையானதாக, குறைவான அந்தஸ்து கொண்டதாக இருக்கலாம். அதை மாற்ற ஒரு வழியுண்டு. அது கல்வி!
ஆர்வம்
எந்தப் படிப்பு என்றாலும், அதை ஊக்கமாகப் படித்தால், நிச்சயமாக நல்ல எதிர்காலம் உண்டு. அதைத்தான், ‘அகல உழுவதிலும் ஆழ உழுவது நல்லது‘ என்று கூறுகிறார்கள். உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகம்? அறிவியலா, கணிதமா, இலக்கியமா, பொருளாதாரமா - ஆர்வத்திற்கான அடிப்படை படிப்பை முடித்தால் போதும். அதன்பின், அந்த ஆர்வமே உங்களை உயரிய இடத்தில் கொண்டுபோய் சேர்க்கும்.
பகட்டான அலுவலகங்களையும், பரபரப்பான நகரங்களையும், நுனிநாக்கு ஆங்கிலத்தையும், வெற்று ஆடம்பரங்களையும் கண்டு, ஒருபோதும் திகைத்துப்போய் நின்று விடாதீர்கள். உண்மையான ஆர்வம் கொண்ட இளைஞனை இவை எதுவும் தடுக்க இயலாது.
நம்பிக்கை விதை
நம்பிக்கை, விதையாக உங்களுக்குள் கிடக்கட்டும். விதை உடனே முளைப்பதில்லை. தன்மேல் மிதித்துச் செல்லும் கால்களை அது சபிப்பதில்லை. பெய்யாத மழைக்காக அது புலம்புவதில்லை. போடப்படாத உரத்திற்காக அது ஏங்குவதில்லை. தனக்கான சமயம் வரும் வரை அது காத்திருக்கிறது. தனக்குள் உயிரை காப்பாற்றி வைத்திருக்கிறது.
மிதித்துச் செல்லும் மிருகங்களால், மனிதர்களால், அது இன்னும் நன்றாக பூமிக்குள் பதிந்து கொள்கிறது. பருவம் தப்பி மழைப் பெய்தாலும்கூட, அந்த தண்ணீரைக் கொண்டு, அது, தனக்குள் இருக்கும் உயிரை வெளிக்கொணர்கிறது. மெல்ல தளிர் விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வேர் விடுகிறது. யாருடைய உதவியுமின்றி பெரும் மரமாகிறது. அதுவே நாளடைவில், பல பறவைகளுக்கும் இருப்பிடமாக, மனிதருக்கு ஓய்விடமாக மாறி நிற்கிறது.
புதிய பாதை
உங்கள் ஆர்வம் எது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். இன்னொருவரிடமிருந்து, ஆர்வத்தை கடன் வாங்காதிருங்கள். இயற்கை, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு ஆர்வத்தை, திறமையை விதைத்திருக்கிறது. அதை மற்றவர்கள் உணர இயலாது.
நம்பிக்கையோடு இருங்கள். சூழ்நிலைகளைக் கண்டு திகைத்துப்போய் நிற்காதீர்கள். உங்களுக்குள் இருக்கும் ஆர்வம் அணைந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திருப்பங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்!
- டேவி. சாம் ஆசிர்

