ஆக 03, 2016 12:00 AM
ஆக 03, 2016 12:00 AM
வாழ்க்கையில் பதட்டம் வரும் போதெல்லாம் பயம் நம்மையறியாமல் ஒட்டிக் கொள்கிறது; அது மன நடுக்கத்தை ஏற்படுத்தி நம் நினைவாற்றலை மழுங்க செய்கிறது!
ஒரு வேலையை செய்யும்போது ஏற்படும் பதட்டம், அவ்வேலையை தவறாக செய்து விடுவோம் என்ற பயத்தை உண்டாக்கிறது. மூளையை மேலும் சிந்திக்க விடாமல் செய்து, வேலையில் நமது முழுதிறன்களையும் வெளிப்படவிடாமல் தடுத்து, தோல்வியை ஏற்படுத்துகிறது.
பயம் நம் கற்பனைகள் மூலம் உருவாவது ஒரு வகை; மூளையில் உள்ள வேதிப்பொருள்களில் ‘சிரோடினின் டோபமின்’ சமநிலையில் இல்லாமல் இருப்பதும் மற்றோரு காரணம். பய உணர்வை சரியான முறையில் கையாள்வதன் மூலம் நாம் சிரோடினின் டோபமினை சமநிலைப்படுத்தலாம்!
தற்காலிகமாக ஏற்படும் பயம் அதிகமாகும் போது, ‘போபியா’வாக மாற வாய்ப்பு உள்ளது. பயம் நம்மிடம் நிரந்தரமாக தொற்றி மனதை பாதிக்கும் வாய்ப்பு அதிகம். ஆதலால், எது குறித்து பயம் ஏற்படுகிறது என்பதை துவக்கத்திலேயே கண்டறிந்து, அதனை போக்க வேண்டும். பொதுவாக இருட்டு, பேய், பூதம், கெட்ட கனவு, தனிமை, தேர்வு, நோய் மற்றும் மருத்துவர் குறித்து குழந்தைகளுக்கு பயம் ஏற்படுகிறது.
‘அம்மா! கொஸ்டின் பேப்பரை பார்த்தாலே பயமா இருக்கு. வேர்த்து கொட்டுது. படிச்சது எல்லாமே மறந்து விடுகிறது’ என குழந்தை தம் பயம் குறித்து முதல் முறையாக பேசும் போது, ‘அப்படி எல்லாம் எப்படி வரும்... பொய் பேசதே! நீ படிக்கலை என்று சொல்லு...’ என்று நாம் குழந்தைகளை புரிந்து கொள்ளாமல் அதட்டி, அவர்களின் பயத்தை புரிந்து கொள்ளாமல் நிரந்தமாக்கி விடுகிறோம்.
நாம் செய்யவேண்டியது: ‘அதனால் என்ன? மார்க் குறைந்தால் திட்டுவேன்னு நினைக்காத! நானும் முதல் முறையாக தேர்வு எழுதும் போது பயந்தேன். நீயாவது இவ்வளவு மார்க் வாங்கி இருக்க... நான் இதை விட கம்மி.. ’ என குழந்தைகளிடம் பேசி அவர்களிடம் உள்ள பயத்தை முழுமையாக அறிந்து முறையான பயிற்சிகள் அளிப்பதன் வாயிலாக பயத்தை போக்கலாம்!
தேர்வுக்கு மட்டுமல்ல இந்த உத்தி! நாம் எந்த வேலையை செய்யும் போதும், பயம் ஏற்பட்டால் அது வேலையை பாதித்து வெற்றியை பறிக்கும் என்பதை உணர்வோம். சரியான திட்டமிடல், மன ஒத்திகை மற்றும் முறையான பயிற்சிகளுடன் பயத்தை போக்குவோம்.
வாழ்வை சிற்பம் போல் செதுக்க, ஓவியம் போல் தீட்ட, மனதின் பயம் போக்குவோம்! தெளிவுடன் சாதிப்போம்!
-க.சரவணன், மதுரை.
