ஆக 11, 2016 12:00 AM
ஆக 11, 2016 12:00 AM
கல்லூரியில் விரும்பிய துறையில் சேர்ந்தாகிவிட்டது. இனி அடுத்த இலக்கு கனவு வேலை தானே?
மாணவர்களும் சரி, வேலை தேடும் பட்டதாரிகளும் சரி, தங்களுக்கு என்று ஒரு பட்டப்படிப்பு போதும் என்று நினைப்பதுண்டு. இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வேலைக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் தட்டச்சில் அல்லது சுருக்கெழுத்தில் ஒரு இளநிலை தேர்வு போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று எவ்வளவுக்கு எவ்வளவு வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறதோ, அந்த அளவுக்கு போட்டியும் அதிகரித்து வருகிறது.
‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது இந்த நிலையில் தான் பொருந்தும். பெரும் திரளில் நம்மை தனித்தன்மையுடன் காட்டிக் கொள்வது அவசியம். அதற்கு மென்திறன் உதவும்!
நாம் கற்கும் பட்டப்படிப்போ, விருப்பப் பாடமோ அல்லது தொழில் நுட்பத்திறனோ, ‘கடினத் திறன்’ எனப்படும். இதில் போட்டியாளர்கள் எல்லோருமே சம நிலையில் தகுதி பெற்றிருப்பார்கள். அதற்கும் மேல், ஒரு நிறுவன சூழ்நிலைக்கு ஏற்ற தனித் திறனையே நாம் ‘மென் திறன்’ என்கிறோம். மென் திறனே ஒருவரின் தன்னம்பிக்கை அளவை காட்டுகிறது. இன்றைய சூழலில் அனைத்து நிறுவனங்களுமே விண்ணப்பதாரர்களிடமிருந்து மென் திறனையும் அதிகம் எதிர்பார்க்கின்றன.
பொதுவாக, தகவல் தொடர்பு திறன், உடல் அசைவு மொழி, தலைமைப் பண்பு, நேர மேலாண்மை, செயல் ஈடுபாடு, கூட்டு முயற்சி, முடிவெடுக்கும் திறன், சிக்கல் தீர்க்கும் திறன், உடை நாகரீகம், மேஜை நாகரீகம், பொது இடப் பேச்சு நாகரீகம் ஆகியவை மென்திறன்களில் அடங்கும். இதில் தகவல் தொடர்புத் திறன் தான் அதிமுக்கியம். இதில் பேச்சுத் திறனும், எழுத்து திறனும் அடங்கும்.
இந்த மென் திறனுக்கேல்லாம் அடிப்படை மூலக்கூறு தன்னம்பிக்கை தான். எவரும் பிறக்கும் போதே மென் திறனோடு பிறப்பதில்லை. தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டாலே மென் திறன் வளர்ந்து விடும்.
இன்றைய வியாபார உலகில் பல நிறுவனங்களும் மென் திறன் கற்றுத் தர போட்டி போட்டுக் கொண்டு வந்தாலும், மென் திறன் என்பது நமக்கு நாமே பழகிக் கொள்வது தான். மென் திறனை வளர்த்துக் கொள்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்!
-எம். விக்னேஷ், மதுரை.
