ஆக 09, 2016 12:00 AM
ஆக 09, 2016 12:00 AM
தாழ்ந்த தரம் மற்றும் வேலை வாய்ப்பின்மை ஆகிய இந்த இரண்டு முக்கிய காரணங்களால் தான் பொறியியல் கல்வி காலி இடங்கள் லட்சத்தை தொடுகின்றன!
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பொறியியல் கல்வியில் பாடத்திட்டம் மேம்படுத்தப்படாதது, எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவது, பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு விலக்கப்பட்டது, பிளஸ் 1 வகுப்பிலும் பிளஸ் 2 பாடத்திட்டம் நடத்தப்படுவது, பாடத்தை புரிந்து படிக்க கற்றுத்தராமல் மதிப்பெண் பெற மட்டுமே ஊக்குவித்து மனப்பாடம் செய்வதற்கே மாணவர்களை பழக்கப்படுத்துவது, ஆகியவை பொறியியல் கல்வியில் தரம் குறைந்ததற்கு காரணங்கள்!
இந்நிலையில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பொறியியல் படிக்க வைத்தும் தங்களின் வாரிசுகளுக்கு வேலை கிடைக்காதபோது, பெற்றோருக்கு விரக்தி ஏற்படுவது நியாயம் தான். இத்தருணத்தில் புரிந்துகொள்ள வேண்டியது, தரமான கல்வி தான் வேலை வாய்ப்பை தீர்மானிக்கிறது என்பதே!
ஏனெனில், தரமான மாணவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். குறிப்பாக, முதல் 100 சிறந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடுகிறது. அவர்களுக்கு மட்டும் வேலை கிடைப்பது எப்படி?
கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதோடு, திறன் வளர்ப்பிற்கு தேவையான வசதிகளையும் கல்லூரிகள் செய்துகொடுக்கின்றன. இதன்மூலம், பாடத்திட்டத்தை கடந்து, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சிஸ்கோ, ஐ.பி.எம்., கிளவுட் கம்ப்யூட்டிங், பிக்டேட்டா போன்ற திறன்களை கூடுதலாக மாணவர்கள் வளர்த்துக்கொள்கின்றனர். வேலை வாய்ப்பை எளிதாக்கும், இத்தகைய கூடுதல் திறன் வளர்ப்பு படிப்புகளை பொறியியல் பாடத்திட்டத்திலேயே ஏன் சேர்க்கக்கூடாது?
உயர்கல்வியில் மட்டுமல்லாமல், அடிப்படையில் இருந்தே கல்வித் தரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதாவது, துவக்கப் பள்ளிகளில் இருந்தே தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். இன்றைய இளைஞர்கள் படிக்கும் படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் உள்ள இடைவெளி களையப்பட வேண்டும்.
பொறியியல் கல்வி தரம் மேம்பட நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் அல்லது பிளஸ் 2 வகுப்பை போன்று பிளஸ் 1 வகுப்பிற்கும் பிரத்யேகமாக பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். பொறியியல் மாணவர் சேர்க்கையில் பிளஸ் 1 மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
-எம்.வாசு, ஆலோசகர், பிரத்யுஷா பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்.
