செப் 16, 2016 12:00 AM
செப் 16, 2016 12:00 AM
படிப்பறிவு, பட்டறிவு இரண்டிலிருந்தும் மனிதன் பாடம் கற்றுக் கொண்டாலும், பட்டறிவு என்ற அனுபவம் தான், மனித மனதில் ஆழமாகப் பதிந்து வாழ்வையே மாற்றும் தன்மையை பெற்றுள்ளது!
அனுபவங்கள் தான், நம் வாழ்க்கையை செம்மைப் படுத்தும். வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் நாம் தினசரி பாடம் கற்றுக் கொண்டுதானிருக்கிறோம்!
வாழ்க்கையில் பல துறைகளில் இருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாமே அத்தனை அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள நினைத்தால், ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!’ என்று சொல்வார்களே அது போல் தான்! ஒருபோதும் அது சாத்தியப்படாது! அதற்கு பல நூறு வருடங்கள் ஆகும்!
புத்திசாலிகள் எல்லாம் அவர்களைச் சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் மூலம் கிடைக்கும் பாடங்களை எல்லாம் தங்களுக்கு கிடைத்த பாடங்களாக மாற்றிக் கொள்வார்கள்! அதைத் தான் நாமும் கடைப் பிடிக்க வேண்டும்.
அதிகாரத்தில் இருப்பவர்களின் அனுபவம் நமக்கு நல்ல பாடம் கற்றுத் தராது! அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் தவறுகளை நியாயப் படுத்திக்கொண்டே இருப்பார்கள்! அதை நியாயம் என்றே பாமர மக்கள் நினைக்கும்படி ஒரு போலியான தோற்றத்தைக் கூடக் கொடுத்து விடுவார்கள்!
நீங்கள் ‘நீங்களாகவே’ எப்பொழுதும் இருங்கள்! போலியாக காட்டிக் கொள்ள ஒரு போதும் முயற்சி செய்யாதீர்கள்! அப்பொழுது தான் உங்கள் அனுபவம் தரும் பாடங்களின் முழுப் பயனும் உங்களுக்கு கிடைக்கும்!
எந்த விஷயமாக இருந்தாலும், உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம் நீங்கள் ஒரு உறுதியான நிலைப்பாடு எடுக்க பழகிக் கொள்ளுங்கள். புகழ் பெற்ற தலைவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் தான் என்பதை சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது!
நாம் வாழ்க்கையில் தேடிக் கொள்ளும் அனுபவ அறிவே நமக்கு நேர்மை, திறமை, தைரியம் போன்ற பண்புகள் கொண்ட மனிதனாக நம்மை மாற்றி விடும்! அனுபவங்களைத் தேடுங்கள்! அகிலத்தை வெல்லுங்கள்!
-துடுப்பதி ரகுநாதன்
