செப் 22, 2016 12:00 AM
செப் 22, 2016 12:00 AM
ஒருவரது சிந்தனையை தூண்டி, அவரது எண்ணங்களை மாற்றி அமைத்து, மனதில் எழுச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் எழுத்துக்கு என்றும் உண்டு!
அத்தகைய அழுத்தமான எழுத்தால், பிறரது சிந்தனையை தூண்டுவதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால், உங்களது படைப்பாற்றல் திறனை மேலும் மெருகேற்றிக் கொள்வதற்கான சிறந்த படிப்பு ‘கிரியேட்டிவ் ரைட்டிங்’. இந்த எழுதும் கலை கல்வியை, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் கல்வி உதவித்தொகையுடன் வழங்குவது கூடுதல் அம்சம் தானே?
* பிர்க்பெக் பல்கலைக்கழகம், லண்டன்
எம்.ஏ., கிரியேட்டிவ் ரைட்டிங், படிப்பு முழு நேரம் மற்றும் பகுதி நேரக் கல்வி முறையில் வழங்கப்படுகிறது. இப்படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து, ‘சோபி வார்ன் பெலோஷிப்’ எனும் திட்டத்தின்கீழ் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை: ரூபாய் 15 லட்சத்து 5 ஆயிரம்
விவரங்களுக்கு: www.bbk.ac.uk
* பால்மவுத் பல்கலைக்கழகம், இங்கிலாந்து
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் ‘கிரியேட்டிவ் ரைட்டிங்’ துறையில் படிக்கும் சிறந்த சர்வதேச மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக, (அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து) 62 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் தொகையை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆங்கில மொழி புலமைத் தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் 6.5 அல்லது 6 புள்ளிகளுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
விவரங்களுக்கு: www.falmouth.ac.uk
* கொலம்பியா கல்லூரி, சிகாகோ (அமெரிக்கா)
இளநிலை மற்றும் முதுநிலை ‘கிரியேட்டிவ் ரைட்டிங்’ படிப்பில், எழுதும் படைப்பாற்றலுடன் தகுதியும், திறமையும் ஒருங்கிணைந்து பெற்ற மாணவர்களுக்கு, ஜான் ஷூல்ஸ் மற்றும் பெட்டி ஷிப்லெட்டு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையை கொலம்பியா கல்லூரி வழங்கிவருகிறது.
உதவித்தொகை: தோராயமாக ரூபாய் 19 லட்சத்து 2 ஆயிரம்
விவரங்களுக்கு: www.colum.edu
* விக்டோரியா பல்கலைக்கழகம், வெலிங்டன்
நியூசிலாந்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான, விக்டோரியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., கிரியேட்டிவ் ரைட்டிங் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், ‘விக்டோரியா மாஸ்டர்ஸ்’ உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது சிறந்தது. இந்த உதவித்திட்டத்தின் கீழ், கிரியேட்டிவ் ரைட்டிங் கல்வியில் சிறந்த 30 மாணவர்களை தேர்வு செய்து, கல்வி உதவித்தொகை மற்றும் பரிசுகளையும் விக்டோரியா பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
உதவித்தொகை: ரூபாய் 99 லட்சத்து 7 ஆயிரம் (30 மாணவர்களுக்கும் சேர்த்து)
விவரங்களுக்கு: www.victoria.ac.nz
குறிப்பு: அனைத்து கல்வி நிறுவனங்களும், அவர்களது கல்விக் கட்டணத்தையே கல்வி உதவித்தொகையாக வழங்குகின்றன.
