நவ 03, 2016 12:00 AM
நவ 03, 2016 12:00 AM
மருத்துவம் சார்ந்த படிப்புகளில் குறிப்பிடத்தக்க, அதேசமயம் சவாலான படிப்பு, ‘பர்பியூஷன் டெக்னாலஜி’!
முக்கியத்துவம்: இதய அறுவை சிகிச்சையின்போது மயக்கவியல் வல்லுனர்களுக்கும், அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் ‘பர்பியூஷனிஸ்ட்’ உதவுகின்றனர். அறுவை சிகிச்சையின் போது உடலின் ரத்த ஓட்டம் நின்றுவிடாமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும், ரத்த ஓட்டம் தொடர்ந்து சீராக செயல்படுகிறதா என்பதையும் இவர்கள் கண்காணிக்கின்றனர்!
பொறுப்புகள் எவை?
திறந்தநிலை இதய அறுவைசிகிச்சையின் போது இதயம் மற்றும் நுரையீரல் செயல்படாது. அதற்கு மாறாக தற்காலிமான கருவி நோயாளிக்கு பொருத்தப்படும். இதை பொருத்தி, இயக்க வேண்டியது ‘பெர்பியூஷனிஸ்ட்’-ன் பணி. மேலும், நோயாளியின் உடலில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைட் அளவை சீராக பாரமரிப்பது, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்காணிப்பதும் இவர்களது முக்கிய பொறுப்பு.
தேவையான திறன்:
மனித உடலின் ரத்த ஓட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இருதயம் மற்றும் நுரையீரலில் பொருத்தப்படும் கருவிகளை கையாளவும், கண்காணிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
படிப்புகள் மற்றும் தகுதிகள்: பி.எஸ்சி., பர்பியூஷன் டெக்னாலஜி படிப்புக்கு, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக பயின்று, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி., இயற்பியல் படித்த மாணவர்கள் நேரடியாக முதுநிலை படிப்பில் சேரலாம்.
முக்கிய கல்வி நிறுவனங்கள்:
ஜிப்மர், புதுச்சேரி - பி.எஸ்சி.,
எம்ய்ஸ், டெல்லி - எம்.எஸ்சி.,
போஸ்டு கிராஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரீசர்ச், சண்டிகர் -பி.எஸ்சி.,
செயின்ட் ஜான் மெடிக்கல் காலேஜ், பெங்களூரு - பி.எஸ்சி.,
சத்திய சாய் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் எஜூகேஷன், புட்டபருத்தி - பி.எஸ்சி.,
வேலை தயார்!
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால், இவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம். இந்த படிப்பை முடித்தவர்கள், பெரிய மருத்துவமனைகளில் அதிகளவில் தேவைப்படுகின்றனர். மேலும், கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவோ, ஆராய்ச்சியாளராகவோ பணியாற்றலாம்.
