பிப் 08, 2017 12:00 AM
பிப் 08, 2017 12:00 AM
இடர்பாடுகளை கண்டு பயப்பட வேண்டாம். கொஞ்சம் சிந்தித்தால் போதும்; வாழ்வில் வரும் சிக்கல்கள், தடங்கல்கள், பனியை போல் விலகிவிடும்!
எண்ணங்களே வாழ்வின் சுவர்கள். தொடர்ந்து ஒர் எண்ணம் மனதில் இருந்தால் அதுவே செயலுக்கு நம்மை அழைத்துச் செல்லும். சாதாரண எறும்பு கூட, வரப்போகும் குளிர்காலத்தினை கருத்தில் கொண்டு சேமித்து வைக்கிறது. கொடிய பனிக்காலத்தை கடக்க, சைபீரியாவில் இருந்து வேதாரண்யம், கோடிக்கரை, வேடந்தாங்கலுக்கு வருகின்றன, பறவைகள்.
இப்படி சின்ன, சின்ன உயிரினங்கள் கூட சிக்கல்களை புரிந்துக் கொண்டு சிறப்பாக வாழும்போது, நாம் மட்டும் சிக்கல்களை கண்டு ஏன் நிலைகுலைகிறோம்; துவண்டு போகிறோம்; செயலற்றவர்கள் ஆகிவிடுகிறோம்; தடுமாறி போகிறோம்?
சிக்கல்கள் வரும் போது மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இயலாமல், வெடித்து வன்முறையில் இறங்கி, மேலும், மேலும் சிக்கலை வளர்த்துக் கொள்கிறோம். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்படும் தொல்லைக்கு பயந்து, வேறு ஊருக்கு மாறுதல் வாங்கி செல்கிறோம். நம் வாழ்க்கை, நம் கையில் இல்லை என்று புலம்பித் தவிக்கிறோம்.
சுவாமி விவேகானந்தர் ஒரு முறை காசி நகரில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, பெரிய குரங்கு தொடர்ந்து வந்தது. குரங்குக்கு அஞ்சி விவேகானந்தர் வேகமாக நடந்தார். குரங்கும் வேகமாக அவரைப் பின் தொடர்ந்தது. குரங்கு துரத்துவதை கண்டு, விவேகானந்தர் ஓட ஆரம்பித்தார். குரங்கும் அவரை துரத்தி ஓடி வந்தது. திடீரென்று விவேகானந்தர் ஓடுவதை நிறுத்தி, அப்படியே பின்னால் திரும்பி, குரங்கை உற்றுப் பார்த்தார். குரங்கும் அப்படியே நின்றதோடு அல்லாமல், திரும்பி ஓடிச் சென்றது.
ஆம்! சிக்கல்களைக் கண்டு அஞ்சி ஓடினால், சிக்கல்களும் நம்மை விடாமல் துரத்தும். ஆனால், துணிந்து நின்றால், சிக்கல்களை எதிர்கொண்டால், சிக்கல்கள் சிதறுண்டு போகும்!
தேனீக்கள் கொட்டுமே! என்று அஞ்சிக் கொண்டேயிருந்தால் என்றைக்கும் நம்மால் தேனின் சுவையை உணரவே முடியாது! அலைகள் ஓய்ந்த பின் கடலில் நீராடலாம் என்றால் என்றும் குளிக்க முடியாது! சிக்கல்களை உடனே தீர்க்க முயல வேண்டும். தைரியமாக சிக்கலை எதிர்க்கொள்ள வேண்டும். நமது முழு ஆற்றலை வெளிப்படும் வகையில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
“இருட்டாக இருக்கிறது என்று புலம்புவதை விட்டு, சிறு விளக்கை கொளுத்த முயல்வதே உயர்ந்தது” என்கிறார் தாகூர். சிக்கல்கள் என்ன என்பதை புரிந்து செயல்படுவோம். இதுதான் சிக்கல் என்று புரிந்து கொள்வதே, சிக்கலை தீர்க்க உதவும் எளிய வழி! எண்ணங்களை வளமாக்குவோம்... சிக்கல்களை தூள் தூளாக்குவோம்!
-க.சரவணன், மதுரை
