தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஈட்டுதல் எளிது காத்தல் கடினம்!

ஈட்டுதல் எளிது காத்தல் கடினம்!

ஈட்டுதல் எளிது காத்தல் கடினம்!


மார் 22, 2017 12:00 AM

மார் 22, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 22, 2017 12:00 AM மார் 22, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பணமோ, புகழோ இன்று ஈட்டுதல் மிக எளிது. ஆனால், அவற்றைக் காத்தல் மிக மிகக் கடினம்! இன்றைய இளைய பாரதமே உடல் பருமன், மது, வலைத்தள மோகம், ஜங்க் உணவு மற்றும் நுகர்வோர் கலாசாரம் ஆகிய மோகங்களில் சிக்கி உள்ளதாக பல ஆய்வுகள் பறைசாற்றுகின்றன.

பிராந்திய மற்றும் பாரம்பரிய உணவுக் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, துரித உணவு, வறுத்தது, பொரித்தது என்று இன்று எங்கு எது கிடைக்கும் என்று தேடித் தேடி சாப்பிடும் வழக்கத்தைத் தொடங்கி விட்டனர். அதிலும், நடுநிசி உணவகங்களில் சென்று போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள். விளைவு உடல் பருமன் மற்றும் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் தொல்லைகள்! குறிப்பாக, பிட்சா, பர்கர் கலாசாரம் ரிப்ளெக்ஸ் மற்றும் குடல் புற்று நோயில் கொண்டுபோய் சேர்க்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுகம், சோகம் என்று காரணம் எதுவானாலும் குடிக்கும் பழக்கம் நோயில் கொண்டுபோய் சேர்க்கிறது என்பதும் கவலைக்கிடம். ‘வாராவாரம் ஆரவாரம்’ என்ற அடிப்படையில் நமது இளைஞர்கள் சனி, ஞாயிறுகளில் ‘மால்’களில் சுற்றி, படம் பார்த்து, அங்கேயே உணவருந்தி, தாமதமாக வீடு திரும்புகிறார்கள். இப்படி ஒரு நுகர்வோர் கலாசாரம் அவர்களைப் பேயாக ஆட்டி வைக்கிறது.

‘பார்த்ததை எல்லாம் வாங்க வேண்டும். அடிக்கடி கைபேசியை மாற்ற  வேண்டும். ‘லேட்டஸ்ட்’ என்று பிறருக்கு பறைசாற்ற வேண்டும். தேவை இல்லை என்றாலும் அழகு சாதனங்கள், நிறைய காலணிகள், வண்ண வண்ண கைக்கடிகாரங்கள் மற்றும் கண்கண்ணாடிகள் என்று வாங்கி குவிக்க வேண்டும். அழகு நிலையங்களுக்கு மாதம் இருமுறை செல்ல வேண்டும். இரு சக்கர வாகனத்தை மாற்ற வேண்டும்’ போன்ற மாய மரியாதைகளில் சிக்கியுள்ளனர். குறிப்பாக, ஆன்லைன் மூலம் மிக அதிகமாக செலவு செய்யும் ஒரு பழக்கம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு, செலவுக்கு மட்டும் பல திட்டங்கள் தீட்டினால், வரவுக்கு எங்கே செல்வது?

‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்பதைப் போல, ‘இன்று அவனைப் போல் நான்’, என்று போட்டி போட்டுக் கொண்டு நேரத்தையும், பணத்தையும் செலவு செய்யும் நபர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். இது தவிர சமூக வலைத்தள கலாசாரம் வேறு. நிமிடத்திற்கு ஒரு முறை முகநூலில் ‘ஸ்டேடஸ்’ மற்றும் ‘கமெண்ட்ஸ்’, செல்லும் இடமெல்லாம் ‘செல்பி’ எடுத்துக் கொண்டு அதனைப் பதிவேற்றம் செய்து எத்தனை ‘லைக்’ வந்தது என்று நொடிக்கு ஒரு தடவை பார்ப்பது என்பது, இன்று பலருக்கும் மனநோயாளித்தனம் வந்து விட்டதோ? என்று அஞ்சத் தோன்றுகிறது.

தொழில் நுட்பம் நல்லது தான்! அதனை வைத்துக் கொண்டு நமது முன்னேற்றத்திற்கு செலவிடுவது அல்லாது, நிறைய தேவையற்ற விஷயங்கள் பேச, மற்றவர்களிடம் பகிர, விடியோ காட்சிகள் பார்க்க, ஓயாமல் பாட்டு கேட்க என்று இருப்பது புதியதொரு ‘காட்ஜெட்’ நோயில் கொண்டு விடும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, நரம்புக் கோளாறு, கண்பார்வைக் கோளாறு, முதுகு மற்றும் கழுத்து எலும்புத் தேய்மானம் என்று அவஸ்தைக்கு இவர்கள் ஆளாகிடுவர் என்று மருத்துவர்களும், மன நல ஆலோசகர்களும் கண்டறிந்து அறிவுறுத்துகிறார்கள். இதனைக் கவனிப்பார்களா, இன்றைய இளையவர்கள்?

விவரம் அறிந்த இந்த நவீன சமூகம், விளைவுகள் அறிந்தவர்களாகவும் இருந்தால் நிச்சயம் மிக நல்லது! பணம் ஈட்டலாம்... அதனைக் காத்தல் அதைவிட அவசியம்!

- முனைவர் பாலசாண்டில்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us