மார் 23, 2017 12:00 AM
மார் 23, 2017 12:00 AM
மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நாடு முழுவதிலும், மத்திய அரசு, ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும், நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வுகள் தமிழகத்திற்கு அவசியமில்லாத ஒன்று. பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்துவதே சரியானது!
பல்வேறு மாநில பாடத்திட்டங்கள், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., கே.வி., என பள்ளி பாடத்திட்டங்கள், நாடு முழுவதும் வேறுபடுகின்றன. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில், தற்போது பின்பற்றப்படும் சமச்சீர் பாடத்திட்டத்தின் தரம், தாழ்ந்திருப்பது மறுப்பதற்கில்லை. முன்பு பத்தாம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 400 மதிப்பெண்கள் வாங்குவதே கடினமாக இருந்தது. இன்றைய மாணவர்களால், 500க்கு 500 மதிப்பெண்கள் எடுக்க முடிகிறது.
மொழிப்பாடத்தில் 100க்கு 100 யாராலும் பெறமுடியாமல் இருந்தது. தற்போது மொழிப்பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் சாதாரணமாக வழங்கப்படுவது அதிசயமாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு பாடத்தில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் படித்து, ஒரு மாணவனால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிகிறது. மாணவர்கள் எளிதாக மதிப்பெண் பெறும் வகையில் பாடத்திட்டங்கள் எளிமைப்படுத்துப்பட்டுள்ளன. வினாத்தாள் திருத்துவதிலும் தாராளம் காட்டப்படுகிறது. பிளஸ் 2விலும் இதே நிலைதான். இதனால், தமிழக கல்வியின் தரம் தாழ்ந்து வருவதாகவே நான் கருதுகிறேன்!
பெரும்பாலான பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பிலும், பிளஸ் 2 பாடங்களே நடத்தப்படுகிறது. மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளில், தமிழகத்தின் சமச்சீர் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களால் சரிக்கு சமமாக, போட்டியிட முடியாது. மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் பிற பாடத்திட்ட மாணவர்களின் கரமே ஓங்கி இருக்கும். அப்போது, தமிழக மாணவர்களால், மருத்துவ படிப்புகளில் சேர்வது மிக மிக கடினமானதாகிவிடும்.
வேண்டுமானால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையாக, சமச்சீர் பாடத்திட்டத்தின் தரமும் உயர்த்தப்பட்ட பிறகு, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளை தமிழகத்தில் அனுமதிக்கலாம். அதுதான் சரியானதாக இருக்கும். அதற்கு, தமிழக பள்ளி பாடத்திட்டக்குழு திறம்பட செயல்பட்டு, பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையென்றால், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவருவதுதான் தீர்வாக இருக்கும்!
அவ்வாறு இல்லையென்றால், நுழைவுத் தேர்விற்கான ‘கோச்சிங்’ என்ற பெயரில் தனியார் பயிற்சி நிறுவனங்கள், சம்பாதிப்பதற்கே வழிவகுக்கும். நுழைவுத்தேர்வில் தங்களது பிள்ளைகளை அதிக மதிப்பெண் எடுக்கச்செய்து, எப்படியாவது மருத்துவ ‘சீட்’ பெறவேண்டும் என்று பெற்றோர்கள் படும் அல்லல் தான் தொடரும்!
-முனைவர் கே.வாசுதேவன், தலைவர், பிரின்ஸ் கல்வி நிறுவனங்கள், சென்னை.
