மார் 25, 2017 12:00 AM
மார் 25, 2017 12:00 AM
கடினமான தேர்வு என எல்லோராலும் கருதப்படும், இந்தியக் குடிமைப் பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி., ) நடத்துகிறது. நடப்பாண்டில் காலியாக உள்ள 980 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தேர்வின் மூலமே நாட்டின் உயரிய ஆட்சிப் பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்பது நாம் அறிந்ததே! அதேசமயம், அதிக அதிகாரம் படைத்த இத்தகைய பணியிடங்களுக்கு ஆசைப்படாதவர்களும் மிகக்குறைவே!
தேர்வு முறை:
முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்) மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளை கொண்ட இத்தேர்வானது கிட்டத்தட்ட ஒரு வருடம் நடக்கும். ஒவ்வொரு நிலை தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவது மிகவும் சவாலானது என்பதால் தேர்வர்கள் பல்வேறு யுத்திகளை தேர்வில் பயன்படுத்த வேண்டும்.
முதல்நிலை தேர்வில் ஜி.எஸ்.,(ஜெனரல் ஸ்டடீஸ்) எனும் பொது அறிவுத் தாள் மற்றும் பகுப்பாய்வு திறன்களை சோதிக்கும் ’சிசேட்’ (ஆப்டிடியூட்) ஆகிய இரண்டு தாள்கள் உள்ளன. இரு தாள்களிலும் தலா 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், ஜி.எஸ்., பகுதியில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தேர்ச்சி பட்டியலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இருப்பினும் ’சிசேட்’ பகுதியில் 33 சதவீத மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். அதாவது 66 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே முதல்நிலை தகுதி தேர்வில் தேர்ச்சி பெறமுடியும்.
இதில், தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் நிலை மெயின் தேர்வினை எழுத வேண்டும். ஏழு தாள்களை கொண்ட மெயின் தேர்வில், ஒவ்வொரு தாள்களிலும் 250 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1750 மதிப்பெண்களுக்கு, இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த நிலை தேர்வில் தகுதி பெறுவதற்கு, ‘இந்திய மொழி தாள்’ மற்றும் ‘ஆங்கில மொழி தாள்’ ஆகிய தேர்வுத் தாள்களில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஆனால், இதில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
இரண்டாம் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அவர்கள் 275 மதிப்பெண்களுக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். மொத்தம் 2025 மதிப்பெண்களுக்கு நடைபெறும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தகுந்த திட்டமிட்டு, முறையான பயிற்சியை மேற்கொள்வதும் அவசியம்.
தேர்வு எப்போது?
இந்தாண்டிற்கான முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது.
திட்டமிடுதல்
சிவில் சர்வீசஸ் தேர்வினை எழுத தீர்மானித்தவுடன், இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் முந்தைய ஆண்டு தேர்வு முறைகள் பற்றின விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் பாடங்களின் அடிப்படையில் இருந்து கேட்கப்படுவதால் பாடங்களை நன்கு புரிந்து படிக்க வேண்டும். படிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் புத்தங்கள், இ-லேர்னிங் மற்றும் தேர்வுக்கு பிறர் பரிந்துரைக்கும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றில் தனி கவனம் செலுத்துவது அவசியம்.
கடந்த பத்து ஆண்டு பொதுஅறிவுத் தாள்களைக் கொண்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பேட்டிகளில், அவர்கள் மேற்கொண்ட பயிற்சி மற்றும் படிக்கும் முறைகளை அறிந்து, உங்களை திறம்பட தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
’நீ திட்டமிடத் தவறினால், நீ தோல்வியடைய திட்டமிடுகிறாய்’ என்ற வாசகம் இத்தேர்வுக்கு சாலப்பொருந்தும். குறைந்தது நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 மணி நேரம் படிப்பிற்கு செலவிட வேண்டும். படித்த பாடங்களை முறைப்படுத்தி நினைவில் வைத்து கொள்ளுதல் அவசியம். அதனால், ஏதாவது ஒரு நாளில், 18 மணி நேரத்தை திரும்ப படிக்க செலவிட வேண்டும். அதற்கு அடுத்த நாள் படிப்பதை தவிர்த்துவிடலாம்.
கால அட்டவணை அவசியம்
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கால அட்டவணையை தயாரித்து படிக்க வேண்டும். அனைத்து பாடங்களையும் படித்து மனப்பாடம் செய்ய தேவையில்லை. முந்தைய தேர்வு தாள்களை கொண்டு மாதிரி தேர்வுகளை எழுதிப்பார்த்து, அதில் தவறுகள் இருந்தால் அவற்றை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பயிற்சிகளை மேம்படுத்தினால் போதும். ஒருமுறைக்குப் பல முறை மாதிரி தேர்வுகளை எழுதுவதன் மூலம் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற தெளிவை அடைய முடியும்.
கடினமான பாடப்பகுதிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் தேவைப்படும் பட்சத்தில் பயிற்சி நிறுவனங்களை அணுகலாம் அல்லது இணையதளத்தில் இத்தேர்வுக்கு என்றே பிரத்யேக வலைத்தளங்கள், மாதிரி தேர்வுகளை வழங்குகின்றன அதிலும் பங்குபெற்று தீர்வு கானலாம்.
நேர்மறை சிந்தனை தேவை
யு.பி.எஸ்.சி., தேர்வினை எதிர்கொள்ள நேர்மறையான அணுகுமுறை தேவை. ஒரு ஆண்டு முழுக்க நடைபெறும் தேர்வினால் சில நேரங்களில் வெறுப்பு மற்றும் சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் எதிர்மறை எண்ணங்கள் வந்து விட கூடாது. கடின உழைப்பிற்கான பலன்களை அனுபவிக்க பொறுமை மற்றும் விடாமுயற்சியும் இணைந்து இருக்க வேண்டும். நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி.
- பூனம் தலால் தாகியா, ஐ.ஆர்.எஸ்.,
