தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்!

ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்!

ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்!


மார் 29, 2017 12:00 AM

மார் 29, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 29, 2017 12:00 AM மார் 29, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் தன்னாட்சி கல்வி நிறுவனங்களான, என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், திருச்சி என்.ஐ.டி., முன்னோடியாக செயல்படுவது மகிழ்ச்சிக்குரியது!  

ஜே.இ.இ., தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களின் முதன்மை தேர்வாக இக்கல்வி நிறுவனம் விளங்குவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் முழுக்க, முழுக்க திருச்சி என்.ஐ.டி., மாணவர்களே நடத்தும், ‘பிரக்யான்’ எனும் சர்வதேச தொழில்நுட்ப திருவிழா, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, அவர்களின் சமூக அக்கறையையும் வெளிக்கொணர்கிறது.

அனுபவமிக்க, தேர்ந்த பேராசிரியர்கள், கற்றலுக்கு ஏற்ற சுற்றுச்சூழல், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற இக்கல்வி நிறுவனம், மென்மேலும் உயரிய இடத்திற்கு செல்வதற்குரிய அனைத்து தகுதிகளையும், சிறப்புகளையும் பெற்றுள்ளது. அதேசமயம், கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகளில், புதுமைகளை புகுத்த வேண்டியதும் அவசியமாகிறது.

ஒரு கல்வி நிறுவனம் மென்மேலும் சிறக்க, அக்கல்வி நிறுவனத்தின் மீதான, பொதுமக்களின் பார்வை மிகவும் முக்கியம். அவ்வகையில், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆராய்ச்சிகளையும், செயல்பாடுகளையும் மேலும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது. மத்திய அரசிடம் நிதியை பெற்று, இன்னும் நிறைய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். இன்னும் நிறைய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட வேண்டும்.

சர்வதேச தரவரிசை

சர்வதேச தரவரிசையில் இந்திய கல்வி நிறுவனங்களும், சிறந்த இடத்தைப் பிடிக்க முதலில், தரவரிசையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் அம்சங்களை முழுமையாக புரிந்துகொண்டு அதற்கேட்ப, செயல்பாடுகளில் மாற்றங்களை புகுத்த வேண்டும்.

குறிப்பாக, சர்வதேச தரவரிசைக்கான அளவுகோள்களை உணர்ந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. அதிக நன்மை பயக்கும் ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, கட்டுரைகளை வெளியிடும்பட்சத்தில், நமது இந்திய கல்வி நிறுவனங்களும் சர்வதேச தரவரிசையில் பிரதான இடங்களை பிடிக்கும்!

இத்தருணத்தில், மாணவர்கள் ஆழமாக புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், மனப்பாடம் செய்து படிப்பது என்பது, உயர்கல்வியில், குறிப்பாக, ஆராய்ச்சிகளில் நிச்சயம் பயனளிக்காது. பள்ளிப் பருவத்தில் இருந்தே, மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்.

மேலும், மாணவர்கள் தங்களது ஓய்வு நேரத்தை முறையாக பயன்படுத்திக்கொண்டார்களேயானால், நிச்சயம் அவர்களால் உயரிய இடத்தை அடையமுடியும். நாட்டையும், உலக அரங்கில் உயரிய இடத்திற்கு அழைத்துச்செல்ல முடியும்!

-முனைவர் மினி ஷாஜி தாமஸ், இயக்குனர், தேசிய தொழில்நுட்பக் கல்விநிறுவனம், திருச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us