தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தராசுகள் தேவையில்லை!

தராசுகள் தேவையில்லை!

தராசுகள் தேவையில்லை!


மார் 28, 2017 12:00 AM

மார் 28, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 28, 2017 12:00 AM மார் 28, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒருவரை பார்த்தவுடன், அவர் ‘நல்லவரா? கெட்டவரா’ என்று நமது எண்ணங்களை சீர் தூக்கி, அலசிப் பார்க்க தராசுகள் உண்டு நமது மனங்களில்...

‘மனிதர்கள் இல்லாத உலகில் குரங்கு, மயில், ரோஜா, சப்பாத்திக்கள்ளி, வானவில், கம்பளிப்புழு, வண்ணத்துப் பூச்சி எல்லாமே இருக்கும். ஆனால், அழகு, அசிங்கம், நல்லது, கெட்டது என்ற அபிப்ராயங்கள் மட்டும் இருக்காது’ என்றான் ஓர் அறிஞன்!

தலைமுடி, கண்ணாடி, உடை, கைபேசி, வீசும் சென்ட் மணம், என்று எதை எதையோ பார்த்து மனிதர்களை நாம் எடை போடுகிறோம். பேச்சை, அங்க அசைவை, செயல்களை, ஒவ்வொரு கணமும் நாம் காணுகின்ற அனைவரையும் அந்தந்த தராசில் நிறுத்தி எடை போடுவது அவசியம் தானா?

இவன் உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசுவான், இவன் சிரிப்புக்கு மயங்கக் கூடாது, இவன் ஆள் தான் அழகே தவிர வேலைக்கு லாயக்கு இல்லை, உயரமும் வெளுப்பும் போதுமா? ஆற்றல் இல்லையே, என்று ஆயுள் முழுவதும் பிறரை தராசில் நிறுத்தி எடை போட பிறக்கவில்லை நாம்!அப்படிச் செய்தால் நமது வாழ்நாள் முழுவதும் அதிலேயே வீணாகி விடும்!

பார்த்த உடனேயே, ஒரு சொல் கேட்ட உடனேயே, ஒரு செயல் கண்ட உடனேயே ஒருவரை மிகச் சரியாகக் கணித்து விட நாம் ஒன்றும் கடவுள் இல்லை. தப்பும், தவறுமாக அந்த தராசு வேலை பார்த்து, நம்மைச் சுற்றி இருக்கும் உலகை, நாமே நரகமாக்கிக் கொள்ள வேண்டுமா?

ஒருவரை அழகு என்றும், மற்றவரை அசிங்கம் என்றும், ஒருவரை புத்திசாலி என்றும், மற்றவரை மடையர் என்றும், உடனே சொல்ல வேண்டிய அல்லது எண்ண வேண்டிய காரணம் ஏதும் கிடையாது. பழகிப் பார்த்து, பகுத்தறிந்து, சீர் தூக்கி, முடிவு செய்தால் கூட நாம் யோசனை செய்வது சரியென்று, உறுதியாகச் சொல்லவிட முடியாது. ஒரு இடத்தில், ஒரு சூழலில் மிக அறிவாளியாக நடந்து கொண்ட ஒருவர், வேறு இடத்தில் அப்படியே தலைகீழாக நடந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. நாமும் அப்படித் தான்!

கடையில் நாற்றம் அடித்த மீன், குழம்பில் மணக்கிறதே! பொம்மைக்கு அழகாய் இருந்த ஆடை, நமக்கு பொருத்தம் இல்லாது இருக்கிறதே! என்று என்றாவது யோசித்துப் பார்த்ததுண்டா? நாம் யாரையும் தீர்மானிக்க வேண்டாம். பிறரும் நம்மை தீர்மானிக்க வேண்டாம். இந்தத் தீர்மானிக்கிற தராசு மனித குணம் மாறினால், நாம் கள்ளம், கபடம் அற்ற நல்ல நபராக ஆகி விடுவோம். இது வெறுமனே சொன்னால் புரியாது. உணர்ந்து கடைபிடித்தால் தான் புரியும்!

‘வெற்றி’ எந்தக் கதவு வழியாகவும் வரலாம்; எதிர்கொள்வது அவரவர் மனநிலை. இந்தக் கதவு சரியில்லை, இந்த வழி தவறானது, இந்த வேலை வெற்றி தராது என்று எப்போதும் எல்லா விஷயங்களிலும் எடை போடுவதை விடுத்து, கண், காது தவிர அறிவையும் திறந்து வைத்து சரியான முயற்சியில் ஈடுபட்டு கிடைக்கும் அனுபவம் மூலம் முடிவு செய்வது தான் அறிவாளியின் செயல்.

பிறரைப் பற்றி எடை போடுவது தவிர, பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ? என்கிற கவலையும் குழப்பமும் நம்மை முன்னேற விடாது. வீரனின் துணிவும், ஞானியின் தெளிவும், பாமரனின் ஆர்வமும் எப்போதும் நம்மிடம் இருக்கட்டும்! வாழ்வில் வெற்றி பிறக்கட்டும்!

-முனைவர் பாலசாண்டில்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us