மே 08, 2017 12:00 AM
மே 08, 2017 12:00 AM
இன்றைய உலகில் வேலைவாய்ப்பு இல்லை என்ற, பேச்சிற்கே இடமில்லை, அதற்கான தகுதிகளுடன் மாணவர்களை உருவாக்கவேண்டியது கல்வி நிறுவனங்களின் மிகப்பெரும் பொறுப்பு!
இதை உணர்ந்தே, தொழில்துறையுடன் இணைந்த கற்றல் முறையை எங்கள் கல்வி நிறுவனத்தில் பின்பற்றி வருகிறோம். வளர்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, மாணவர்களின் திறன்களை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், வேலைவாய்ப்பு எளிதாக்கப்படுகிறது. மாணவர்களுக்கு இணையாக, ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துகிறோம். ஒரு கல்வி நிறுவனத்தின் ஆணிவேர் திறமையான ஆசிரியர்களே என்பதையும் உணர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
முதலாம் ஆண்டு முதலே, மாணவர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, இறுதியாண்டில் திறனுள்ளவர்களை தேர்வு செய்து, நிதி உதவியும் வழங்கி வருகிறோம். தற்சமயம் மாணவர்களின், 47 புதிய படைப்புகள் காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளோம். அண்ணா பல்கலை அளவில், காப்புரிமை பதிவு பட்டியலில் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளோம்.
தொழில் நிறுவனங்களில் மாணவர்கள் நேரடியாக ஆய்வு செய்து, அங்கு செயல்முறையில் காணப்படும் சவால்களுக்கு, தீர்வு காணும் வகையில் இறுதியாண்டிற்கான ‘புராஜெக்ட்’களை வடிவமைத்துள்ளோம். போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முறையில் பாடத்திட்டங்களும், தேர்வு முறைகளும் ஆக்கப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மாணவர்களின் சிந்தனைகளை தூண்டும் வகையில், கல்விமுறை அமைந்தால், வேலைவாய்ப்புக்கென தனிப்பயிற்சிகள் தேவையில்லை.
கல்விமுறையும், கல்வி நிறுவனங்களும் இளைஞர்கள் மத்தியில் தேடல் என்ற விதையை விதைக்கவேண்டும். தேடல் உள்ள மனிதன் என்றுமே, தோல்வியை தழுவுவதில்லை. எங்கள் கல்லூரியில், மாணவர்களுக்கு வகுப்பறை தாண்டிய கற்றலுக்கு வாய்ப்புகளை வழங்கிவருகிறோம். கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதோடு, அதை சந்தைப்படுத்தவும் வழிகாட்டிவருகிறோம். குறிப்பிட்ட, சில கண்டுபிடிப்புகளை கல்லூரிகளின் தேவைகளுக்காகவும் பயன்படுத்தியுள்ளோம்.
நடப்பு கல்வியாண்டில் இதுவரை, 62 தொழில்நிறுவனங்கள், கல்லூரி வளாக நேர்காணலில் பங்கேற்றுள்ளன. இதன் மூலம், 97 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். 77 சதவீத மாணவர்கள், 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானத்தில் பிரபல நிறுவனங்களில் தேர்வு பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
வளாக நேர்காணல் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு, எதிர்கால வளர்ச்சிக்கு ஓர் திறவுகோல் மட்டுமே! நிலையான வெற்றிக்கு சுயகற்றல் என்பது அவசியம். தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கேற்ப, மாணவர்கள் தங்களது திறனை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்!
-சுதா மோகன்ராம், முதல்வர் மற்றும் இணை நிர்வாக அறங்காவலர், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, கோவை.
