மே 16, 2017 12:00 AM
மே 16, 2017 12:00 AM
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்காக, யு.பி.எஸ்.சி., நடத்தும் இந்தாண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில், ‘பிரீலிமினரி’ எனும் முதல் நிலைத் தேர்வு, அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு என்ன தான் ஆண்டுக் கணக்கில் பயிற்சி எடுத்துக் கொண்டாலும், தேர்வுக்கு முந்தைய 30 நாட்களில் மேற்கொள்ளும் பயிற்சி மற்றும் தேர்வில் பின்பற்றப்படும் யுத்திகள் மட்டுமே வெற்றியின் அருகே உங்களை அழைத்துச்செல்லும். தேர்வுக்கு முந்தைய 30 நாட்களிலும் சரி, தேர்வுக்கு முந்தைய நாளிலும் சரி, தேர்வு நாளிலும் சரி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறது இக்கட்டுரை.
தேர்வுக்கு முந்தைய 30 நாட்களில் செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்:
சுய பரிசோதனை
பரீட்சைக்கு தயாராகி விட்டீர்களா என்பதை அறிய, உங்களை மதிப்பீடு செய்து கொள்வது அவசியம். தேர்வுக்குரிய பாடப் பகுதிகளில், உங்களின் பலம் மற்றும் பலவீனங்களைக் அறிந்து கொள்ள, முந்தைய ஆண்டு தேர்வு தாள்களை எழுதி பாருங்கள்.
பலவீனத்தை போக்கும் வழிகள்
நீங்கள் பலவீனமாக கருதும் பாடங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்தி தேர்வுக்கு திறம்பட தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பலவீனமான பாடங்களில் திரும்ப திரும்ப மாதிரி தேர்வு எழுதிப்பார்க்கலாம்.
உண்மையான தேர்வு அறையை போன்ற சூழலை ஏற்படுத்தியும் மாதிரி தேர்வு எழுதிப்பார்க்கலாம். பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படும் மாதிரி யு.பி.எஸ்.சி., தேர்வில் பங்கேற்றும் கால அளவை கணக்கிட்டு, தேர்வை எதிர்கொள்ளும் முறைகளை கையாள கற்றுக் கொள்ளலாம். இம்முறைகளால், தேர்வறையில் ஏற்படக் கூடிய வீண் பதட்டத்தை தவிர்க்கலாம்.
புதிய புத்தகங்கள் வேண்டாம்
இந்த 30 நாட்களில் புதிய புத்தகங்கள் அல்லது புதிய பயிற்சி புத்தகங்களை பயன்படுத்த வேண்டாம். உங்கள் மேல் நம்பிக்கை வரும் வரை, ஏற்கனவே நீங்கள் படித்த பாடப் பகுதிகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை திரும்ப படித்தல் சிறந்தது.
9 மணிநேர பயிற்சி
வாட்ஸ் ஆப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களுக்கு நேரம் ஒதுக்காமல், குறைந்தது 9 மணி நேரம் முழு கவனத்துடன் படித்து பயிற்சி பெற வேண்டும். மன அழுத்தம் மற்றும் படிக்கும் நேரங்களை சமநிலைப்படுத்தி கொள்ள வேண்டும்.
8 மணிநேர ஓய்வு
9 மணிநேரம் பயிற்சி பெறுவதற்கு இணையாக, குறைந்தது எட்டு மணி நேர உறக்கம், அரை மணிநேர உடற்பயிற்சி மற்றும் சரியான வேலையில் சத்தான உணவு உட்கொள்ளுதல் ஆகியவையும் அவசியம்.
கேள்விகளின் எண்ணிக்கை
* பொதுவாக, கேட்கப்படும் 100 கேள்விகளில் 50 கேள்விகளுக்கு ஒருவரால் பதில் அளிக்க முடியும். எனவே, கேள்விகளை நன்கு புரிந்து, அதற்கு ஏற்ற சரியான பதிலை எழுத வேண்டும்.
* பெரும்பாலும் 20 கேள்விகளுக்கு பதிலளிப்பது சாத்தியமற்றதாக இருக்கும். மீதம் உள்ள 30 கேள்விகளுக்கு, சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் இருக்கும். குறைந்தபட்சம் 80 கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க முயற்சி செய்ய வேண்டும்.
பதில் எழுதும் யுத்திகள்
உங்களுக்கு நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். பின்னர், சந்தேகம் உள்ள கேள்விகளை குறித்து வைத்து கொண்டு மீண்டும் அதற்கு விடை அளிக்க முயற்சியுங்கள். தெரியாத கேள்விகளை குறித்து கொண்டு, நேரம் இருந்தால் மட்டும் அதை பற்றி சிந்தித்து விடை எழுதுங்கள் இல்லையெனில் தவிர்த்து விடுங்கள்.
உதாரணத்திற்கு, கணிதப் பகுதியில் கேட்கப்படும் 10 கேள்விகளில் 50 சதவீத விடை உங்களுக்கு தெரியும் எனில், மீதம் உள்ள 5 கேள்விகளுக்கு தவறானதாக இருக்கும்.
5 சரியான பதிலுக்கு = 5 x 2 = 10 மதிப்பெண்
5 தவறான பதிலுக்கு = 5 x .66 = 3.3 மதிப்பெண்
10 - 3.3 = 6.7 மதிப்பெண் பெறலாம்.
ஆனால், நீங்கள் சந்தேகிக்கும் கேள்விகளை தவிர்த்தால் ஒரு மதிப்பெண் கூட வாங்க முடியாது. எனவே, கேள்விகளை நன்கு புரிந்து, கால அளவை கணக்கிட்டு தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!
-விஜய்
