செப் 14, 2017 12:00 AM
செப் 14, 2017 12:00 AM
படிப்பிற்கு ஏற்ற பணி கிடைக்கும் வரை காத்திருப்பதா? அல்லது கிடைத்த பணியை செய்வதா? இந்த இரண்டில் எது சரி என்ற குழப்பமான மனநிலை, இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் காணப்படுவதை பார்க்க முடிகிறது.
படித்த படிப்பிற்கு ஏற்ற துறையில் செயல்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அத்தகைய வாய்ப்பு அனைவருக்கும் அமைவதில்லை! நமது படிப்பிற்கு சம்பந்தமில்லாத ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது எப்படி கையாள்வது என்பது, சிந்தித்து செயலாற்ற வேண்டிய விஷயம்!
சமீபத்தில் ஈரோட்டில், புகைப்படத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு கலர் லேப்-ன் உரிமையாளரைச் சந்தித்தபோது, அவருடைய தொழில் பற்றி விசாரித்தேன். “ஆண்டுதோறும் சுமார் ரூபாய் 30 கோடிக்குமேல் வியாபாரம் செய்வதாகவும், நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் தன்னிடம் பணியாற்றுவதாகவும் திருப்பூர், கோபி, சேலம் என பல ஊர்களில் கிளைகள் இருப்பதாகவும் மகிழ்வுடன்”, கூறினார்.
“புகைப்படம் எடுத்தல் மற்றும் அச்சிடல் குறித்த தொழில்நுட்பப் படிப்பு படித்துள்ளீர்களா?” எனக் கேட்டேன். “நான் படித்தது எம்.எஸ்சி., வேளாண்மை. ஆனால், வேளாண்மை சம்பந்தமான துறையில் எனக்கு பணிவாய்ப்பு அமையவில்லை. புகைப்படத் துறையில்தான் எனது மாமனார் மூலமாக வாய்ப்புக் கிடைத்தது” என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவரைப் போல, இன்னும் எத்தனையோ பேர், படித்த படிப்பிற்கு சம்பந்தமான வேலைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாழ்க்கையின் நாட்களை கிழித்து வீசாமல் கிடைத்ததைப் பிடித்ததாக்கி, அதிலுள்ள நுணுக்கங்களைக் கற்று உயர்ந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள்?
வெற்றியாளர்களுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் இதுதான், பிடித்தது கிடைக்காதபோது, கிடைத்ததையே பிடித்ததாக்கி வெற்றிச் சிகரங்களைத் தொட்டுவிடுகிறார்கள்.
பிடித்த படிப்பு, பிடித்த வேலை, பிடித்த வாழ்க்கைத் துணை, பிடித்த மாதிரி குழந்தைகள் என எல்லாமும் எல்லோருக்கும் உறுதியாக அமையும் என்ற உத்தரவாதத்தை வாழ்க்கை உறுதி கொடுக்கவில்லை.
விழுகின்ற இடத்தில் முளைத்து எழுகின்ற விதையைப் போல கிடைப்பதைக் கொண்டு உயர்கின்ற வலிமையயும், வல்லமையையும் வளர்த்துக் கொள்பவர்களே சாதனை மனிதர்களாகிச் சரித்திரத்திற்குள் நுழைகிறார்கள். பிடித்ததுதான் வேண்டுமெனக் காத்திருப்பவர்களை வாழ்க்கை, பல சமயங்களில் நிராகரித்து விடுகிறது. நிம்மதியைக் கெடுத்துவிடுகிறது!
ஆகவே கிடைத்ததைப் பிடித்ததாக்குங்கள்! மேற்கிலும் உதயத்தை உருவாக்குங்கள்!
-முனைவர் கவிதாசன்.
