செப் 21, 2017 12:00 AM
செப் 21, 2017 12:00 AM
வெளிநாட்டில் படிக்க உரிய தகுதியும், விருப்பமும் இருந்த போதிலும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு, அவர்களது குடும்ப பொருளாதார சூழல் முட்டுக்கட்டையாக அமைந்து விடுகிறது. அத்தகைய மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது தான் வெளிநாட்டு கல்விக் கடன்!
பல்வேறு பொது துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி வருவது, இங்கே குறிப்பிடத்தக்கது.
பொதுவான தகுதிகள்
வெளிநாட்டுக் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும், மாணவர்களின் வயது 16 முதல் 35க்குள் இருத்தல் வேண்டும். கடன் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் இந்திய குடியுரிமை பெற்றிருப்பது அவசியம். பல்கலை அல்லது கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற விவரம், கல்வி தகுதி, பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்றிதழ், வருமான வரி செலுத்தியதற்கான படிவங்கள் மற்றும் இதர ஆவணங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் கே.ஓய்.சி., படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
4 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய்க்குள், கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள், கல்விக் கடன் தொகையை திரும்ப செலுத்துவதற்கு, மூன்றாவது நபரின் உத்தரவாதம் அவசியமில்லை. 7.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் கல்வி கடன் பெற வேண்டும் என்றால், கடன் பெறும் தொகைக்கான உத்தரவாத்தை மூன்றாவது தனி நபர் வழங்க வேண்டும்.
10 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் பெற விண்ணப்பிப்பவர்கள், வங்கிகள் நிர்ணையம் செய்திருக்கும் தகுதி பட்டியலில் இடம் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு கடன் கொடுக்க, ஏதேனும் ஒரு நபர் பிணையம் (கொலாட்ரல்) வழங்க வேண்டும்.
படிப்புகள்
பொதுவாக, பொறியியல், மருத்துவம் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு மட்டும் தான் கல்வி கடன் பெற இயலும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. இதழியல், அனிமேஷன், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை பட்டப்படிப்புகளுக்கும், சில பட்டயப்படிப்புகளுக்கும் கல்விக் கடன் பெற முடியும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், வங்கிகள், மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ள கல்வி நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன, என்பதுதான்! உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் பட்சத்தில், வங்கிகள் கல்விக் கடனை விரைவாகவும், எளிதாகவும் வழங்குகின்றன என்பது செயல்முறையில் உண்மை!
