அக் 09, 2017 12:00 AM
அக் 09, 2017 12:00 AM
முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் முக்கிய தடை அவமானங்கள்! வாழ்க்கையில் எதிர்படும் அவமானங்களைத் தாங்கிக்கொண்டு முன்னேறுபவர்களே, சாதனை புரிகிறார்கள்!
மற்றவர்களை அவமானப்படுத்தி சந்தோஷப்படும் மனிதர்கள் நம்மைச் சுற்றியிலும் இருப்பதை நம்மால் ஒருபோதும் தவிர்க்க முடியாது! அதற்கு முக்கிய காரணம் பொறாமை! பொறாமை என்பது மனிதனின் பூர்விகச் சொத்து. மற்றவர்கள் நம்மை பார்த்து பொறாமைப்படுகிறார்கள் என்றால் அதற்காக வருத்தப் படக் கூடாது; மாறாக சந்தோஷப்பட வேண்டும்!
மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒரு திறமை நம்மிடம் இருக்கிறது. அதை அவர்கள் கண்டுபிடித்து விட்டததால் தான் பொறாமைப்படுகிறார்கள்! அந்தத் திறமையையே நாம் மேலும் வளர்த்துக் கொண்டு முன்னேறலாம்!
நம்மைவிட ஒருபடி மேலே இருப்பவர்களிடம், ஆதாயத்திற்காக தேடிப் போக வேண்டிய சந்தர்ப்பங்கள் நம் வாழ்க்கையில் நிறைய வரும். சில சமயம் அவர்கள் நம்மை கேலி செய்து அவமானப் படுத்துவதும் சகஜம் தான். அதற்காக எல்லாம் சோர்ந்து போய் விடக் கூடாது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஆரம்ப காலத்தில் சினிமாவுக்கு வாய்ப்புத் தேடி அலைந்த பொழுது, சில தயாரிப்பாளர்கள் “ இந்த முகத்தை வைத்துக் கொண்டு சினிமாவில் நடிக்க ஆசைப் படுகிறாயே!..” என்று கேலி செய்து அவமானப் படுத்தியது உண்டு! அதற்காக அவர் தன் முயற்சியை கை விடவில்லை!
அந்த முகம் தான் பிற்காலத்தில் திரையில் நவரசத்தை பிழிந்து கொடுத்தது! ஆரம்ப காலத்தில் அவமானப்படுத்திய, அதே தயாரிப்பாளர்கள் அவரின் கால்ஷீட் டிற்காக அவர் வாசற்படியில் நின்றதும் வரலாறு. இன்று அவருக்காக, அரசாங்கமே மணிமண்டபம் கட்டி, திறப்புவிழாவும் செய்துவிட்டது!
தற்பெருமை என்பது வேறு. நம்மைப் பற்றி நாமே உயர்வாக நினைத்துக் கொள்வது என்பது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு! நம்மைப் பற்றி உயர்வாக நாமே நினைத்துக் கொண்டிருப்பது என்பது, நம்மைப் பற்றி யார் தாழ்வாகப் பேசினாலும், அதை அலட்சியப்படுத்தி விட்டு நம் தகுதியின் மேல் நம்பிக்கை வைத்து வாழ்க்கையைத் தொடர்வது!
நம்மை பற்றி நாமே ஒருபோதும் தாழ்வாக நினைத்துக் கொள்ளாமல் இருந்தால், அவமானங்களைத் தாங்கும் மனப் பக்குவம் வந்து விடும்!
அதன்பின் அவமானங்களையே நமது வெற்றிக்கான வழிகாட்டியாக்கி, நம் பயணத்தை தொடரலாம்! அப்போது, வெகுமானங்கள் தானாகத் தேடி வரும்!
-துடுப்பதி ரகுநாதன்
