நவ 10, 2017 12:00 AM
நவ 10, 2017 12:00 AM
நடிப்பை முறையாக கற்று கொண்டு, கலைத் துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கான கல்வி நிறுவனம் தான் ‘தேசிய நாடகப் பள்ளி’!
உலகிலுள்ள சிறந்த நாடகப் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கும், என்.எஸ்.டி.,(நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா) எனும் இந்நிறுவனம், சங்கீத் நாடக அகடமியால் 1959ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், 1975ம் ஆண்டு மத்திய அரசின் கீழ் தன்னாட்சி கல்வி நிறுவனமாக மாறியது.
சிறப்பம்சம்
நாடகத்துறையில் மாணவரின் அடிப்படை திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும், இத்துறைக்கு ஏற்றார் போல் தகுதியானவர்களை உருவாக்கும் நோக்கிலும், பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் உள்ளார்ந்த படைப்புத்திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு, சரியான முறையில் அதனை வெளிப்படுத்தும் யுத்திகளை கையாளும் முறைகளை நேர்த்தியாக ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர்.
கோட்பாடு மற்றும் நடைமுறை பயிற்சிகள் மூலம் நாடகத் துறையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் விதமாக மிகவும் விரிவான வகையில் சிறப்பான பாடத்திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாடகத்துறைகளில் உள்ள உதாரணங்களை மேற்கோடிட்டு இருப்பதும், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்பட்ட மற்றும் பின்பற்றப்படும் நாடக அம்சங்கள் மற்றும் நவீன யுக்திகள், இந்திய நாடகத்துறையின் நவீன யுக்திகள் போன்ற பலவிதமான அம்சங்கள் இப்பாடத்திட்டத்தில் உள்ளடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு மாதம் ரூபாய் எட்டு ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும்.
பயிற்சிகள்
மூன்று ஆண்டுகள் கொண்ட ‘டிப்ளமோ இன் டிராமாடிக் ஆட்ஸ்’ எனும் நாடகக் கலை பட்டப்படிப்பில், நவீன இந்திய நாடகம், பாரம்பரிய இந்திய நாடகம், உலக நாடகம், திரையரங்கு வடிவமைப்பு, கலாச்சாரம், நடிப்பு, குரல் மற்றும் பேச்சும் திறன், யோகா, நாடக இசை, நடிப்பு மற்றும் மேம்பாடு, திரைக்கதை இயக்கம், ஒளி வடிவமைப்பு, ஒப்பனை, அழகிய வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தனித்துவமான செயல்முறை பயிற்சிகள் மாணவர்களுக்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் மொழியில் கற்றுத்தரப்படுகிறது.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
சேர்க்கை முறை: மாணவர் சேர்க்கையில் இரண்டு விதமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. முதல் நிலை - செயல்முறை தேர்வில் வெற்றி பெறவேண்டும். இரண்டாம் நிலை - ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சி தேர்வில் பங்கேற்க வேண்டும். இவ்விரு நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக, நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு செய்ப்படுவர்.
விபரங்களுக்கு: https://nsd.gov.in
