பிப் 12, 2018 12:00 AM
பிப் 12, 2018 12:00 AM
வாழ்க்கையில் வெற்றி பெற தேவையானவைகளில் மிக முக்கியமான ஒன்று, நாம் மற்றவர்களிடம் ஏற்படுத்திக் கொள்ளும் ‘தொடர்பு’கள்!
பலதுறைகளில் வல்லுநர்களாக திகழ்வோர், தங்கள் தொழில் துறையின் முன்னோடிகள், உடன் பணியாற்றும் நண்பர்கள், உறவினர்கள் என்று பல்வேறுபட்டவர்களிடம் நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரே நாளில் எந்தத் தொடர்புகளைளையும் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியாது. மெதுவாக காலப் போக்கில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, எல்லாத் தொடர்புகளும், மனப் பூர்வமாக நம்பும்படி மாற்றிக் கொள்வது, அவரவது திறமையைப் பொறுத்தது. அப்படி இறுக்கமாக மாறி விட்ட தொடர்புகள் தான் நமது செயல்களுக்கும், முயற்சிகளுக்கும் நல்ல ஆலோசனைகள் வழங்கி, உதவியாக இருக்கும்!
நமது தொடர்புகளில் வெற்றி பெற்ற மனிதர்கள் நிறைய இருப்பார்கள். அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டு, அவற்றை நமது அனுபவங்களாக மாற்ற முயற்சி செய்யவேண்டும். நிச்சயம் அது நமது வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டியாக அமையும்!
அவற்றில், சிலரது அனுபவங்கள் எச்சரிக்கை தருவதாக இருக்கும். அவைகளை இனம் கண்டு கவனமாக தவிர்த்து விட வேண்டும். சோர்வு அடையச் செய்து, விரக்திக்கு தள்ளக் கூடிய தொடர்புகள் எனத் தெரிந்தால் அவைகளை நீக்கி, மனதிற்கு தெம்பூட்டி தொடர்ந்து முன்னேற உதவும் தொடர்புகளையே வைத்துக் கொள்ள வேண்டும்!
அடுத்தவர்கள் வெற்றியைக் கண்டு பொறாமைப்படும் சில தொடர்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அவைகளை ஆரம்பத்திலேயே துண்டித்து விட வேண்டும்.
லட்சியப் பயணத்தில் வெற்றி பெற, பணத்தை ஒரு கருவியாகத் தான் பயன்படுத்த வேண்டும். பணமே பிரதானம் என்று ஒருபோதும் நினைத்து விடக்கூடாது. ‘பணத்தை கடவுளாக நினைத்தால், அது நம்மை பேயாகப் பிடித்துக் கொள்ளும்’, என்று ஒரு மேலை நாட்டு அறிஞர் சொன்னதை எப்போதும் மறந்துவிடக் கூடாது!
நாம் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் கூட, நாம் தேடிக் கொண்ட சொத்துக்கள் தான்! அவைகள் நமது வெற்றிப் பயணத்தில் உறுதுணையாக தோளோடு தோள் கொடுக்கும். முயன்று பாருங்களேன்!
-துடுப்பதி ரகுநாதன்
