மார் 01, 2018 12:00 AM
மார் 01, 2018 12:00 AM
இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை... எதற்குமே ஒரு விலை உண்டு! நமது லட்சியங்களுக்கும் இது பொருந்தும்! உரிய விலையை கொடுக்க தயாராக இருப்பவர்களுக்கு மட்டும்தான் ‘வெற்றி’யும் அதன் பலனை திரும்ப கொடுக்கும்!
நமது முன்னோர்கள், தியாகத்தை விலையாக கொடுத்தார்கள்; நம் நாடு சுதந்தரம் அடைந்தது. அதுபோல, நாம் நினைப்பது நடக்கவேண்டும் என்றால், அதற்கு ஒரு விலை உண்டு! தேர்வில் நிறைய மதிப்பெண் பெற்று சமூகத்தில் சிறந்தவர்களாக மதிக்கப்பட வேண்டும் என்றால், அதற்கும் ஒரு விலை உண்டு!
அனைவருக்கும் பொதுவான விலைகள் இரண்டு உண்டு... அவை
ஒழுக்கம்: கல்வி கற்பதிலும், திறன் வளர்ப்பிலும் ஒரு ஒழுக்கம் வேண்டும். நூலகத்தில் விசாலமான அறிவு கிடைக்க ஏதுவாக எத்தனையோ புத்தகங்கள் உள்ளன. அவற்றை படிப்பதிலும், சேதப்படுத்தாமல் திருப்பி கொடுப்பதிலும் ஒரு ஒழுக்கம் வேண்டும். சக மனிதர்களுடன் பழகுவதில் ஒரு ஒழுக்கம் வேண்டும். இதுபோன்ற ஒழுக்க குணம் தான் வாழ்விலும் நம்மை உயர்த்தும். ஒழுக்கமாக வாழ்பவர் எதிலும் தவறு செய்ய தயங்குவார் என்பது இயற்கை விதி!
உழைப்பு: எந்த ஒரு லட்சியத்தையும் அடைய உண்மையான உழைப்பை விலையாக கொடுக்க வேண்டும். சோம்பல் இல்லாமல், ‘எதையும் பிறகு செய்வோம் என்று தள்ளிப்போடாமல்’, கடினமாக, கருத்தோடு உழைக்கும்போது தான் ‘வெற்றி’ எனும் கோப்பை நம் கைகளில் தவழும். இல்லையென்றால் அனைத்தும் அதன் இயல்புக்குத்தான் நடக்குமே அன்றி, நமது விருப்பத்திற்கு எதுவும் நடக்காது!
இயல்பு நடக்க வேண்டுமா? அல்லது நாம் நினைத்தது நடக்க வேண்டுமா? என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் நினைத்தது நடக்க அதற்கான விலையை கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
அதற்கான எளிய பயிற்சி முறை இதோ...
* உங்களது லட்சியத்தை ஒரு தாளில் எழுதுங்கள். உதாரணமாக, ‘நான் ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.’
* அந்த லட்சியத்தை அடைய என்ன விலையை கொடுக்கப் போகிறீர்கள் அதாவது, எப்படி தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் எழுத வேண்டும். அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
நினைவில் கொள்வோம்... முழு மனதுடன் கடினமாக முயன்று செயல்பட நமக்கு விருப்பம் இல்லை என்றால், அது ‘நமக்கு தேவையே இல்லை‘’ ன்று தான் அர்த்தம்! எனவே, விலை கொடுக்க தயாராக இருப்போம்! வெற்றியை வரவேற்கவும் தயாராவோம்!
-மித்திரன் ஸ்ரீராம், கோவை.
