மே 07, 2018 12:00 AM
மே 07, 2018 12:00 AM
அமெரிக்க நாட்டின் கலாச்சாரம், கல்வி முறை, அரசாங்கம் குறித்தெல்லாம் நமக்கிருக்கும் பல கேள்விகளுக்கு 14 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களுடன் பதிலளிக்கிறது சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக நூலகம்!
எப்போதும் பரபரப்புடனே காணப்படும் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள இந்த அமெரிக்க துணை தூதரகத்தில் விசாக்காக நீண்ட வரிசையில் காத்து இருப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால், அந்த தூதரக கட்டடத்திற்குள் வேறு என்ன இருக்கிறது என்று யோசித்திருப்பவர்கள் வெகு சிலரே!
1947ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நூலகம் அமெரிக்க தலைவர்கள், அரசியல் வரலாறுகள், கொள்கை கோட்பாடுகள், கலை, இலக்கியம், பொருளாதாரம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 2000 தலைப்புகளின் கீழ் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டுள்ளது. மேலும், ‘வீடியோ வியூவிங்’ என்கிற தொழில்நுட்பத்தின் உதவியோடு ஆவணப்படங்களின் டி.வி.டி.,களை நூலகத்தின் ஒரு பகுதியில் இருக்கும் திறையில் இயர்போன் மூலம் பார்க்கும் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், இங்கு நூலக வாரம் ‘லைப்ரரீஸ் லீட்’ என்கிற தலைப்பில் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மத்தியில் நூலகத்தின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக இந்த நூலக வாரம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நூலகத்தில் வாசகர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
உறுப்பினர் அல்லாதோர் தங்களது அடையாள அட்டையை (ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பேன் அட்டை, பாஸ்போர்ட்) கொண்டு சென்றால் போதும், அனுமதி இலவசம். 16 வயதைக் கடந்த யார் வேண்டுமானாலும் இந்த நூலகத்தில் உறுப்பினராகலாம். ஒரு வருடத்திற்கு ரூ.400 மற்றும் இரண்டு வருடத்திற்கு ரூ.700 செலுத்தி அமெரிக்க துணை தூதரக நூலகத்தின் உறுப்பினர் அட்டையைப் பெறலாம்.
இந்த உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்தி இரண்டு வாரத்திற்கு இரண்டு பருவ இதழ்கள், நான்கு வாரத்திற்கு நான்கு புத்தகங்கள் மற்றும் இரண்டு வாரத்திற்கு ஐந்து டி.வி.டி.,கள் வரை எடுத்துச் செல்லலாம். தமிழ் நாட்டைத் தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கும் தொலைதூர உறுப்பினர் உரிமம் வழங்கப்படுகிறது.
புத்தகங்கள், பருவ இதழ்கள் மட்டுமின்றி அமெரிக்காவின் கல்வி நிறுவனங்கள், பாடப் பிரிவுகள், ஸ்காலர்ஷிப்புகள் பற்றிய விபரங்களையும் அதே தளத்தில் உள்ள அமெரிக்க-இந்திய கல்வி அறக்கட்டளை அலுவலர்களிடமிருந்து நாம் பெறலாம். ஆகையால், அமெரிக்காவில் உயர் கல்வி பயில் விரும்பும் மாணவர்களுக்கு இந்த நூலகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை!
விபரங்களுக்கு: https://in.usembassy.gov
