ஜூன் 28, 2018 12:00 AM
ஜூன் 28, 2018 12:00 AM
பொறியியலிலோ, கலை அல்லது அறிவியலிலோ ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வேலைக்கு செல்ல வேண்டும் என்ற மனப்பான்மையையே இன்று பல மாணவர்களும் கொண்டுள்ளனர்! வேலை தேடுபவராக இல்லாமல், ஒரு சிறந்த தொழில்முனைவோராகி, ‘பிறருக்கு வேலை வாய்ப்பை வழங்குபவராக வர வேண்டும்’ என்ற எண்ணத்தை இன்றைய இளம் தலைமுறையினர் பெற வேண்டும்!
எந்த ஒரு தொழில் துவங்குவதற்கும் முன்பாக, ஒரு சிறந்த ‘ஐடியா’ அவசியம். அதனை அடிப்படையாகக்கொண்டு, முதலீடு, மனிதவளம், விற்பனை என பல்வேறு அம்சங்களை அதில் புகுத்தி, லாபம் ஈட்டவும் தெரிய வேண்டும். அதற்கு, பணியாளர்களை நிர்வகிக்கும் திறன், நிதி சார்ந்த அறிவு, சந்தைப்படுத்தும் திறன் உட்பட பல்வேறு திறன்கள் தேவைப்படுகின்றன.
ஒரு சிறந்த ‘ஐடியா’வைக் கொண்டு, அதற்கான தேவைகளையும், வாடிக்கையாளர்களையும் உருவாக்கிவிட்டால், அவரது வாழ்க்கையே மாறிவிடும். அமெரிக்கா, மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை விட, இதுபோன்ற புத்தாக்க சிந்தனைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
அமேசான் என்பது, ‘புத்தகத்தை ஆன்லைனில் விற்பது’ என்று ஒரு சிறு ஐடியாவால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். அந்த எண்ணமே அன்று ஒரு வித்தியாசமான முயற்சி தான். தற்போது, அந்த ‘ஐடியா’ பெரும் வளர்ச்சி கண்டு, இன்று புத்தகம் மட்டுமின்றி லட்சக்கணக்கான பொருட்களை, ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் மூலமாகவே விற்கும் அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது.
ஹோட்டல்களில் இருந்து உணவை பெற்று வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட, ‘ஸ்வங்கி’ எனும் ‘மொபைல் ஆப்’, ஒரு மிக பிரம்மாணடமான ஐடியா என்று சொல்லிவிட முடியாது. மனித வாழ்வை எளிதாக்கும் வகையிலான ஒரு சிறிய யோசனைதான்... ஆனால், அதனை முறையாக நடைமுறைப்படுத்தியதால், வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு, எந்த ஒரு ஐடியாவையும் செயல்படுத்தி, வெற்றிகாண, இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ், சாப்ட் ஸ்கில்ஸ், பப்ளிக் ஸ்பீக்கிங் ஸ்கில்ஸ், பிரசண்டேஷன் ஸ்கில்ஸ் என பல்வேறு திறன்களும் இன்று தேவைப்படுகின்றன. இவற்றை உணர்ந்தே, எங்கள் கல்வி நிறுவனத்தில் இப்பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கிறோம்.
எனினும், அனைத்து மாணவர்களுமே தொழில்முனைவோராவதற்கான ஆர்வமும், அடிப்படைத் தகுதியும் பெற்றிருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு மாணவருக்கு தொழில்முனைவோருக்கான அடிப்படைத் தகுதி உள்ளதா? என்பதை அறிந்தே அவர்களுக்கு மேற்கண்ட சிறப்பு பயிற்சிகளுக்கு பரிந்துரைசெய்கிறோம். வேலைக்கு செல்வதில், ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு அதற்கேட்ப, தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் அளிக்கிறோம்.
ஆகையால், எங்கள் கல்வி நிறுவனத்தில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும், வெறும் பட்டம் மட்டுமே பெறாமல், தொழில்முனைவோர்க்கான அல்லது வேலை வாய்ப்பிற்கு தேவையான திறன்களையும் சேர்த்தே பெறுகிறார்கள். எதிர்காலத்தில், தொழில்முனைவோர் படிப்பையே ஒரு பட்டப்படிப்பாக வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்!
-ஆர்.இ. நடேசன், இயக்குநர், எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் டிரைனிங் அண்ட் டெவலப்மெண்ட், சென்னை.
