ஏப் 27, 2019 12:00 AM
ஏப் 27, 2019 12:00 AM
’இண்டஸ்ட்ரி 4.0’ எனும் நான்காம் தொழில் புரட்சி, இயந்திரமயமாக்குதல் மற்றும் தகவல் பரிமாற்றைத்தைச் சார்ந்தது. இது, தற்போதைய நவீன உலகில், மனிதர்களின் வேலையை சுலபமாக்கி, பெரும்பாலான பணிகளை தானே செய்யுமளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது!
முக்கியத்துவம்
1760-ம் ஆண்டில் தொடங்கிய முதல் தொழில் புரட்சி, தற்போது நான்காம் நிலையில் அடியெடுத்து வைத்துள்ளது. இரண்டாம் தொழில் புரட்சியை தொழில்நுட்பப் புரட்சி என்றும், மூன்றாம் புரட்சியை டிஜிட்டல் புரட்சி என்றும் கூறிவந்த நிலையில், நான்காம் தொழில் புரட்சியை, அதிநவீன புரட்சி என்று கூறுகின்றனர் வல்லுநர்கள்.
பங்குபெறும் தொழில்நுட்பங்கள்
செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், இணையம், 3டி பிரிண்டிங், நானோ தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங், பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி. முதல் மூன்று தொழில் புரட்சி போல் இல்லாமல், நான்காம் தொழில் புரட்சி முற்றிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மனிதனின் வாழ்க்கையை மேலும் எளிதாக்கக்கூடியது. கல்வித் தகுதி
நவீன தொழில்நுட்பம் சார்ந்த இத்தகைய திறன் களை வளர்த்துக்கொள்ள குறிப்பிட்ட கல்வித் தகுதி ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அடிப்படையில், கம்ப்யூட்டர் அறிவியல், அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகையால், இப்பாடங்கள் சாரந்த இளநிலை பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, பி.எஸ்சி., பி.இ., பி.டெக்., ஆகியவை இத்துறையில் காலூன்ற உறுதுணையாக இருக்கும்.
கல்வி நிறுவனங்கள்
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வெகு சில கல்வி நிறுவனங்களில் ’இண்டஸ்ட்ரி 4.0’ ஒரு துறையாக கற்பிக்கப்பட்டு வருகிறது. எனினும், இது சார்ந்த தொழில்நுட்பங்கள் பல்வேறு இடங்களில் பரவலாக கற்பிக்கபப்டுகிறது.
கூடுதல் பாடப்பிரிவுகள்
* அரசு மற்றும் தர சேவை * கல்வி * கண்டுபிடிப்பு * ஸ்மார்ட் சிஸ்டம் * போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பம் * ஸ்மார்ட் பொருளாதாரம்
மையங்கள்
நான்காம் தொழில் புரட்சிக்கான பல்வேறு மையங்கள் இவ்வுலகில் பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது. அவற்றில், ஜப்பானில் டோக்கியோ, அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ, சீனாவில் பெய்ஜிங் ஆகிய நகரங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், நான்காம் தொழில் புரட்சிக்கான கூடுதல் மையங்கள் கொலம்போ, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள இம்மையங்கள் இந்தியாவின், ’நிதி ஆயோக்’ நிறுவனத்தையும் தனது பங்குதாரராக கொண்டுள்ளது.
வாய்ப்புகள்
ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகுத்துவருகிறது. அதனால், இத்துறையில் திறனை வளர்த்துக்கொண்டவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. உலகம் நவீனமயமாகிவிட்ட இக்காலத்திலும், எதிர்காலத்திலும் இத்துறைக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கவே செய்யும். இனி வரும் காலங்களில், மனிதர்கள் செய்யும் வேலைகள் அனைத்தயும் ரோபோக்களே செய்துவிடவும் வாய்ப்புள்ளது. அதேநேரம், அத்தகைய ரோபோக்களை உருவாக்க, மனித மூளை தான் தேவை என்பதும் மறுக்கமுடியாத உண்மை!
