ஏப் 29, 2019 12:00 AM
ஏப் 29, 2019 12:00 AM
இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப, தேவைப்படும் மருத்துவர்களை உருவாக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், பல் மருத்துவர்கள், பிற மருத்துவத்துறை சிகிச்சையளிப்போர் மற்றும் மருத்துவ சிகிச்சை நிர்வாகிகள் ஆகியவர்களின் தற்ப்போதைய எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது.
சுமார் 12 லட்சம் மாணவர்கள் பங்குபெறும் 'நீட்’ தேர்வில் ஏறத்தாழ 60 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்யும் அதேநேரத்தில், மிக நல்ல தொழில் வாய்ப்பும் மருத்துவத்துறையில் உள்ளதால், 'டாக்டர் ஆக வேண்டும்’ என்ற கனவு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அவர்களில் 90 சதவிகித மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
துணை மருத்துவப் படிப்புகள்
எனினும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைத் துறையில் பலவகையான மதிப்புமிக்க வேலை வாய்ப்புக்கள் உருவாகிக் கொண்டே வருகின்றன. ஒருவர் 'பிசியோதெரபிஸ்ட்’ எனப்படும் இயன்முறை சிகிச்சையாளராக படிப்பை துவங்கி, நரம்பியல், விளையாட்டு அறிவியல் போன்ற பல துறைகளில் சிறப்பு பட்ட மேற்படிப்பை படிக்கலாம். காது கேளாதவர்கள், பேச இயலாதவர்கள் ஆகியோருக்கான கல்வியை பெறலாம். ஆப்தோமெட்ரிஸ்ட், டேட்டா சைன்டிஸ்ட், உடல்நல தகவல் நிபுணர், ஆக்குபேனல் தெரபிஸ்ட், சிகிச்சை மேலாண்மை நிர்வாகி போன்ற வல்லுநர்களாகும் வாய்ப்பும் பிரகாசம்.
துணை மருத்துவ தொழில்நுட்ப துறைகளில் பட்டங்களை பெற்று, இதய நோய் சிகிச்சை தொழில்நுட்பம், கதிரியக்க தொழில்நுட்பம், ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பம், நரம்பியல் சிகிச்சை தொழில்நுட்பம், சுவாச சிகிச்சை தொழில்நுட்பம், மயக்கவியல் தொழில்நுட்பம், அறுவை சிகிச்சைக்கூட தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேற்கொண்டு சிறப்பு படிப்புகளையும், பயிற்சிகளையும் பெறலாம். பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, சிறார் அறுவை சிகிச்சை ஆகிய துறைகளிலும் தனித்துவம் பெறலாம்.
இன்று, சுற்றுசூழல் மருத்துவ அறிவியல் துறையும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் பட்டம் பெற்றவர்கள், மருத்துவமனைகளில் உடல்நல பாதுகாப்பு மற்றும் தொழில்முறை சார்ந்த உடல்நல சிகிச்சைகளை அளிக்கலாம். மேலும், இந்த துறையில் எம்.எஸ்சி., பட்ட மேற்படிப்பும், பிஎச்.டி., பட்டமும் பெறலாம். ஆகவே, எம்.பி.பி.எஸ்., அல்லது பி.டி.எஸ்., படிப்புகளையும் கடந்து, மருத்துவ சிகிச்சை துறையிலேயே தனிப்பட்ட சிறப்பு மற்றும் மதிப்பு மிக்க பல வாய்ப்புகள் உள்ளன. ஹெல்த்கேர், பைனான்ஸ், எச்.ஆர், ஹெல்த்கேர் குவாலிட்டி என்ற பிரிவுகளில் எம்.பி.ஏ., படிப்பும் உள்ளது.
-டாக்டர் பி.வி. விஜயராகவன், துணை வேந்தர், ஸ்ரீ இராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
