மே 09, 2019 12:00 AM
மே 09, 2019 12:00 AM
விளை நிலங்கள் வெகுவாக குறைந்துவரும் நிலையில், தொழில்நுட்ப ரீதியாக வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் வேளாண்மையை மேம்படுத்தலாம்.
உலகத்தரத்தில் வேளாண்மை படிப்பை வழங்கும் நோக்கத்தோடு, கோவையில் துவக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீட்டின் படி, 68வது இடத்தையும், இந்தியப் பல்கலைக்கழக தரவரிசையில் 44வது இடத்தையும், மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.
இப்பல்கலைக்கழகம், 10 இளநிலைப் பட்டப்படிப்புகளை 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது.
வழங்கப்படும் இளநிலைப் படிப்புகள்
பி.எஸ்சி.,-(ஹானர்ஸ்) அக்ரிகல்ச்சர்- 3,105 இடங்கள், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) ஹார்ட்டிகல்ச்சர்-360 இடங்கள், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) புட், நியூட்டிரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்-45 இடங்கள், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) பாரஸ்ட்ரி-45 இடங்கள், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) செரிகல்ச்சர்-30 இடங்கள், பி.டெக்., -அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்-110 இடங்கள், பி.டெக்.,-பயோடெக்னாலஜி-55 இடங்கள், பி.எஸ்.,-அக்ரிபிசினஸ் மேனேஜ்மெண்ட்-45 இடங்கள், பி.டெக்.,-புட் டெக்னாலஜி-55 இடங்கள், பி.டெக்.,-எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங்-55 இடங்கள்.
கல்வித்தகுதி:
12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். பொதுவாக, இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும் என்றாலும், சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான கல்வித்தகுதி தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம்.
சிறப்பு இடஒதுக்கீடு:
முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் சந்ததியினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு உண்டு.
மாணவர் சேர்க்கை முறை:
12ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்டிபண்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆன்லைனில் நடைபெறும். சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கு மட்டும் தனியாக நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். எனினும், அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
www.tnau.ac.in/ugadmission.html
