ஆக 05, 2019 12:00 AM
ஆக 05, 2019 12:00 AM
தற்போதுள்ளது போன்ற பெரும் எண்ணிக்கையில் இன்ஜினியரிங் கல்லூரிகள், முன்பு தமிழகத்தில் இல்லை. என்றாலும், சந்தையின் தேவைக்கு போதுமான அளவில் மட்டுமே இன்ஜினியரிங் பட்டதாரிகளை உருவானர்கள். அன்று, பட்டம் பெற்ற அனைவருக்கும் வேலை எளிதாக கிடைத்தது.
ஆனால், தற்போது இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமாக உள்ளதால், சந்தையின் தேவைக்கும் அதிகமான இன்ஜினியரிங் பட்டதாரிகள் ஒவ்வொரு ஆண்டும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். இச்சூழலில் பட்டம் பெற்ற அனைவருக்கும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு என்பது சாத்தியமில்லாமல் உள்ளது. இந்த நிலை விரைவில் மாற்றும் காணும். தரமான கல்லூரிகள் மட்டுமே காலசுழற்சியில் தாக்கு பிடித்து நிலைத்து நிற்கும். அப்போது, இன்ஜினியரிங் படிக்கும் அனைவருக்கும் தகுதியான வேலை வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.
அதனிடையே, கல்லூரிகள் தாங்களாகவே, காலியாக வாய்ப்பிருக்கும் இடங்களை ஒப்படைத்துவிடுவது நல்லது. 10 பேர் மட்டுமே சேர்ந்த கல்லூரிகளை கூட இன்று பார்க்க முடிகிறது. இவ்வாறு ஏராளமான கல்லூரிகளின் வருகையால், போதிய மாணவர் சேர்க்கை இன்றி கல்லூரி நிர்வாகங்கள் தடுமாறிக்கொண்டிருக்கும் சூழல் வருத்தத்தை அளிக்கிறது. கல்லூரிகளின் வளர்ச்சியை அன்றாடம் தொடர்ந்து உறுதி செய்துகொண்டே இருக்க வேண்டும். கல்லூரியை தொய்வில்லாமல் நடத்துவதோடு, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், ஆய்வகங்களை நவீனமயமாக வைப்பதும், மாணவர்களின் கற்றலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதும் அவசியம்.
அதோடு, இன்ஜினியரிங் பாடத்திட்டத்தை மட்டும் கல்லூரிகள் போதித்தால் போதாது. புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும், சுயமாக தொழில் துவங்கவும், சந்தைப்படுத்தவும் தேவையான திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள, கல்லூரிகள் அவர்களுக்கு உறுதுணையாக இயங்க வேண்டும். இன்று வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே செல்ல, போதிய அரசு திட்டங்கள் இல்லை என்பதும் குறிப்படத்தக்க காரணமாகும். இச்சூழலில் முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் கார், தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற புதுப்புது திட்டங்கள் இன்ஜினியரிங் துறையிலும், மாணவர்கள் மத்தியிலும் எழுச்சியை உருவாக்கும்.
தவறான போக்கு...
இத்தருணத்தில் மாணவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில், சிறப்பாக படித்து, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளை முறையாக வளர்த்துக்கொண்டால் சிறந்த வேலை வாய்ப்பு இன்றுமட்டுமல்ல, என்றுமே நிச்சயம் சாத்தியமாகும். இதை சரியாக புரிந்துகொள்ளாமல், மாணவர்கள் பலரும் 'இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது’ என்று தவறாக கருதி, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு படையெடுக்கின்றனர். இது தவறான போக்கு! இதே நிலை நீடித்தால், இன்றைய இன்ஜினியரிங் கல்லூரிகளின் நிலை, கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் வரும் என்பது எனது கருத்து!
மாணவர்கள் ஒரு தொழில்கல்வியை படிக்கும் போது, அவர்களது தொழில் மற்றும் வேலைக்கான வாய்ப்புகள் அதிகமாகும். அதுவே, கலை அறிவியல் படிப்புகளை ஏராளமான மாணவர்கள் படித்தார்கள் என்றால், அவர்களுக்கு வேலை அளிக்க எந்த தொழிற்சாலைகளும் இல்லை. அதிகபட்சம் ஒரு தொழிற்சாலையில் பி.காம். பட்டதாரிகள் 10 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், தொழில் கல்வி படித்தவர்கள் ஆயிரம் பேருக்கு அங்கே வேலை வாய்ப்பு உருவாகும். இதுதான் யதார்த்தநிலை!
-எஸ்.சேகு ஜமாலுதீன், செயலர், ஆலிம் முகம்மது சலேக் கல்வி நிறுவனங்கள், சென்னை.
