ஆக 08, 2019 12:00 AM
ஆக 08, 2019 12:00 AM
உணவே மருந்து என்கிற காலம் சென்று, மருந்தே உணவு என்கிற காலத்தை எதிர்நோக்கியுள்ள இன்றைய சூழலில், மருத்துவத் துறையின் முக்கிய அங்கமான, பார்மசியிலும் வாய்ப்புகள் விரிவடைந்து வருகின்றன!
இன்றைய நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால், கிட்டத்தட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்துகள் உள்ளன. கேப்சூல், ஊசி, டானிக், கீரிம், லோஷன் என பல வடிவங்களில் மருந்துகள் இன்று கிடைக்கும் நிலையில், அவற்றை தயாரித்தல், பாதுகாத்தல், வழங்குதல் என பார்மசி படித்தவர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மருந்துகளை மிக துள்ளியமாக கையாளுவது மட்டுமின்றி, மனசாட்சியுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவதே, பார்மசி துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு தேவையான பிரதான குணநலன்கள்.
இந்தியாவை பொறுத்தவரை, எம்.பி.பி.எஸ்., மட்டுமின்றி துணை மருத்துவப் படிப்பான 'பார்மசி’யும் பிரபலம் தான்!
படிப்புகள்:
டி.பார்ம், பி.பார்ம், எம்.பார்ம், பார்ம் டி, பி.டெக். (பார்ம்), எம்.டெக். (பார்ம்), எம்.எஸ்(பார்ம்), எம்.பி.ஏ.,(பார்மசி மேனேஜ்மென்ட்) போன்ற படிப்புகள் உள்ளன.
படிப்பு காலம்:
பார்மசி இன் டிப்ளமோ இரண்டு ஆண்டுகளும், பி.பார்ம்., நான்கு ஆண்டுகளும், எம்.பார்ம்., இரண்டு ஆண்டுகளும், ஆய்வு நிலை படிப்பான பார்ம்.டி, 6 ஆண்டுகளும் கொண்டது.
தகுதிகள்:
பிளஸ் 2 வகுப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை படித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். இளநிலை படிப்பிற்கு பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் நுழைவுத்தேர்வை நடத்தி, அதன் அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, அரசு நடத்தும் கலந்தாய்வில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது.
முதுநிலை படிப்பிற்கு, ‘கிராஜுவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட்’ எனும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரை, மாணவர்களின் முதல் தேர்வாக ஐதராபாத் மற்றும் மொகாலியில் அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பார்மசூட்டிகல் எஜுகேசன் அண்ட் ரிசர்ச் கல்வி நிறுவனம் திகழ்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, பல அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பார்மசி சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.
வேலை வாய்ப்பு:
இத்துறை பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மருந்துகள் உற்பத்தி தொழிற்சாலை, ஆராய்ச்சி மையங்கள், தர பரிசோதனை மையங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்பை பெறலாம். டிரக் இன்ஸ்பெக்டர், அனலிட்டிக் கெமிஸ்ட், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட் போன்ற பணிகளிலும் சேரலாம். இவை மட்டுமில்லாமல், மெடிக்கல் கம்பெனி சார்ந்த ஐ.டி. நிறுவனங்களில், என்கோடிங் வேலை வாய்ப்பும் உள்ளது. சுயதொழில் துவங்கலாம்; மருந்துக்கடையும் ஆரம்பிக்கலாம். முதுநிலை படிப்பு படித்தவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் நிபுணராகவோ அல்லது கல்லூரிகளில் பேராசிரியர்களாகவோ பணி புரியலாம். பார்ம்.டி படித்தவர்கள், வெளிநாடுகளிலும் வாய்ப்புகளை பெறலாம்.
