/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வளமான எதிர்காலத்திற்கு சில வழிமுறைகள்...
/
வளமான எதிர்காலத்திற்கு சில வழிமுறைகள்...
நவ 08, 2008 12:00 AM
நவ 08, 2008 12:00 AM
நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் போட்டி என்பது தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. எனவே நல்ல வேலை ஒன்றை பெற்று சிறப்பாக செயல்படுவதுதான் உங்களிள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்வில் போற்றத்தக்க சிகரங்களை எட்ட உங்கள் வளர்ச்சியின் வாகனமாக இருப்பது கல்விதான். எனவே நமக்குக் கிடைக்கக்கூடிய மற்றும் பொருந்தக்கூடிய கல்விதான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. சிறப்பான வேலையை எதிர்காலத்தில் பெற சிறப்பான கல்வியே அவசியம். ஒருவருக்கு பொருந்தக்கூடிய படிப்பை தேர்வு செய்வது எப்படி என்னும் கேள்வி நமக்குள் எழுவது இயல்புதான்.இதை தீர்மானிப்பதில் சில பரந்துபட்ட அம்சங்கள்
கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவற்றில் முக்கியமானவை சில.
1. மாணவரின் இயல்பான விருப்பம்.
2. அவரின் கற்கும் திறன்.
3. அவர் குடும்பத்தின் பொருளாதார நிலைமை.
4. படிப்பின் கால அளவு.
5. உயர் கல்விக்கான வாய்ப்புகள்.
6. கல்வி நிறுவனம் அமைந்துள்ள இடம்.
7. பாலினம்.
8. படித்தவுடன் வேலை பெறும் உறுதித்தன்மை.
இந்த அம்சங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கவே எந்த பெற்றோரும் விரும்புவர். ஆனால், அனைவருக்கும் பொதுவான பதில்களை இதற்கு கூற முடியாது. தனி நபரை பொறுத்து இவை வேறுபடும். தங்களுடைய குழந்தைகளின் அடிப்படை விருப்பத்தைப் பற்றி யோசிக்காமல், நிறைவேறாமல் போன தங்களது கனவுகளை குழந்தைகள் மூலமாக நனவாக்கவே பொதுவாக பல பெற்றோர்களும் விரும்புகின்றனர்.
குழந்தை பிறந்த உடனேயே டாக்டர், இன்ஜினியர், சார்டட் அக்கவுன்டன்ட் ஆக வரவேண்டும் என்றே சில பெற்றோர் முடிவு செய்கின்றனர். இதனால் அக்குழந்தை பெறக்கூடிய சிறந்த வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அடிப்படையில் பிரத்யேகமான விருப்பம் ஒன்றை பெற்றிராத குழந்தையே இல்லை.
ஒவ்வொரு கல்லிலும் ஒரு அழகிய சிற்பம் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. ஒவவொரு குழந்தைக்குள்ளும் உள்ள சிற்பத்தை அடையாளம் கண்டு செதுக்கும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியர் மற்றும் நலம் விரும்பிகளின் கையில் உள்ளது. அவர்களே குழந்தைகளின் சிற்பிகள்.
ஒரு குழந்தைக்கு பொருந்தாத துறையில் அது தள்ளப்படும் போது, தத்தளிக்கத் துவங்குகிறது. வாழ்க்கை முழுவதும் இதை நினைத்து வருந்துகிறது. இதை பெற்றோரும் விரும்புவதில்லை. ஆனால், தங்களது குருட்டுத்தனமான அபிப்ராயங்களால் குழந்தை தடுமாறி தவிப்பதற்கு அவர்கள் காரணமாவதை அவர்களே அறிவதில்லை.
குழந்தையின் ஆர்வம் மற்றும் விருப்பம் அறியப்படுவது எளிய சில முறைகளால்தான். தற்போது, சில நிறுவனங்கள் இதற்கான சைக்கோமெட்ரிக் தேர்வுகளை நடத்துகின்றன. இணையத்தளங்களும் இதில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு ஆன்லைனில் மாணவர்கள் விடையளித்தால், அதிலிருநது அவர்களது அடிப்படை ஆர்வம் எதில் உள்ளது என்பதை இவை அடையாளம் காட்டுகின்றன. இந்த சேவைக்கு சில இணையத்தளங்கள் கிரெடிட் கார்டு மூலமாக கட்டணம் வசூலிக்கின்றன. சில தளங்களில் இச்சேவையை இலவசமாகப் பெறலாம்.
இச்சேவையை தரும் சில தளங்கள்:
- acareertest.com
- analyzemycareer.com
- assessment.com
- colorwize.com
- humanmetrics.com
- jvis.com
- queendom.com
கணிதம், உயிரியல், வேதியியல், கம்யூட்டர் அடிப்படைகள் ஆங்கிலம், பொது அறிவு மற்றும் இயற்பியல் ஆகியவற்றில், எதில் உங்கள் குழந்தை இயற்கையாகவே ஆர்வம் கொண்டுள்ளது என்பதை அறிய www.indiastudychannel.com\questions என்னும் தளம் மிகவும் உதவும். இதைப் போலவே www.psychometricsuccess.com என்பதும் அருமையான இணையத்தளம் ஆகும்.
இதுபோன்ற ஆன்லைன் தேர்வுகளில் கலந்துகொள்ள கடுமையாக தயார் செய்ய வேண்டியதில்லை. பள்ளிக் கணிதம் மற்றும் அறிவியலை லேசாகப் புரட்டினால் போதும். இத்துறை வல்லுனர் ஒருவரிடம் நேரடியாகச் சென்றும் இதை அறியலாம்.இயற்கையான ஆர்வம், விருப்பம் மற்றும் மனநிலையானது ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. சிலர் எண்களோடு உறவாட விரும்புகின்றனர். சிலர் மக்களோடு கலந்திடவும் பேசவும் விரும்புகின்றனர். பிறருக்கு உதவுவதே சிலருக்கு மகிழ்ச்சியை தருகிறது. வேறு சிலருக்கு ராணுவப் பணியே லட்சியமாகிறது. சிலருக்கு கம்ப்யூட்டர்கள் உத்வேகம் தருகின்றன.
இன்னும் சிலருக்கு பயிற்றுவித்தலே பசியை போக்குகிறது. ஏர்லைன் பைலட் ஆவதே சிலரின் கனவு என்றால் வேறு சிலருக்கு அக்கவுண்டிங் என்பது அவசியமாகிறது. இசையில் ஆர்வம் இல்லாதவருக்கு இசையே படிப்பாவதும், கணக்கில் நாட்டம் இல்லாதவருக்கு இன்ஜினியரிங் இலக்காவதும் எதிர்மறை விளைவுகளையே தந்திடும். எனவே இதை தவிர்ப்பது அவசியம்.
கணிக்கும் திறன், சவால் மனப்பாங்கு, கிரியேடிவிட்டி வண்ணங்களில் ஆர்வம், புதுமைகளில் நாட்டம், மொழிப்பசி, டிஜிட்டல் திறன் ஆகியவை ஒருவரின் துறையை தேர்வு செய்வதில் உதவும் காரணிகள் ஆகும். பரந்துபட்ட மனித மனதின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் இவை காட்டுகின்றன.
இதை அலட்சியம் செய்து ஒரு குழந்தையின் இலக்கை தீர்மானித்தால் பயணம் எளிதாகிறது. ஆனால், அத்துறையில் குழந்தை மிளிர்வது சாத்தியமில்லாதாகி விடும். தவிர ஒருவர் ஒரே விருப்பத்தை பெற்றிருப்பார் என்றும் கருதமுடியாது. பிற அம்சங்களை வரும் வாரங்களில் விரிவாக பேசுவோம்.

