நவ 22, 2008 12:00 AM
நவ 22, 2008 12:00 AM
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது ரெஸ்யூம் எனப்படும் பயோடேட்டாவைத் தருவது அவசியம் என்பதை அறிவோம். விண்ணப்பிக்கும் நபரின் விபரங்கள் தவிர்த்து அந்த வேலைக்கு தான் எப்படி பொருத்தமானவராக இருக்கிறோம் என்ற தகவலைத் தருவதில் ரெஸ்யூம்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ரெஸ்யூம் என்பது உங்களின் திறமைகள், சாதனைகள், அனுபவங்கள், கல்வித்தகுதி ஆகிய அம்சங்களின் சுருக்கமான தொகுப்பாக இருக்க வேண்டும்.
ஒரு ரெஸ்யூமை இப்படித்தான் தயாரிக்க வேண்டும் என்று எந்த நிர்ணயமும் கிடையாது. ஆனால், ஒரு ரெஸ்யூம் என்பது நமக்கு பணிதரவுள்ள நிறுவனத்தைச் சார்ந்தவரை படிக்கத் தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதுவே நமக்கு நேர்காணலுக்கான அழைப்புக்கும் அடித்தளமிடுகிறது.
ஒரு ரெஸ்யூமின் அடிப்படைப் பிரிவுகளைத் தவிர, பணிவாய்ப்பாளரை ஈர்க்கும் விதத்தில் நம்மைப் பற்றிய சில புதிய தகவல்களையும் நாம் தரலாம். ரெஸ்யூமின் இறுதி வடிவத்தை எட்டும் முன், முதலில் ஒரு மாதிரியை நாம் உருவாக்குவதும் கட்டாயம் தேவைப்படும். இனி ரெஸ்மியின் சில பகுதிகளைப் பற்றி பார்ப்போம்.
பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி எண்: இப்பகுதியில் ஒருவர் தன் நிரந்தர முகவரியை தொலைபேசி எண்ணுடன் தர வேண்டும். தற்போது இன்டர்நெட் வசதிகள் பெருகுவதால் விரைவாக தகவல் பெறும் விதத்தில் உங்களின் இ-மெயில் முகவரியையும் குறிப்பிடுவது நல்லது.
குறிக்கோள்: ஒரு ரெஸ்யூமின் முக்கியப் பகுதியாக இருப்பது ‘அப்ஜெக்டிவ்’ எனப்படும் நமது குறிக்கோள் பற்றிய பகுதியாகும். இதில் விண்ணப்பிப்பவரின் குறிக்கோள் என்னவென்று ரத்தினச் சுருக்கமாகவும், அர்த்தத்துடனும் குறிப்பிட வேண்டும். ரெஸ்யூமைப் படிக்கும் பணிவாய்ப்பாளர் இதனை படித்தால் நமது வேலை விருப்புகளைப் பற்றியும், நமது பணியில் நாம் என்னவாக விரும்புகிறோம் என்பது பற்றியும் அறிந்து கொள்ள இப்பகுதி உதவி செய்யும். உங்கள் உபயோகத்திற்காக இங்கு இரண்டு உதாரணங்களை தந்துள்ளோம்.
* Seeking a challenging position with opportunities for career advancement and learning. (பணி முன்னேற்றம் மற்றும் கற்கும் வாய்ப்புகளைத் தரத்தக்க சவால் நிறைந்த பணியை விரும்புகிறேன்.)
* To have a long career in the (particular field), gain further skills and attach the goal of the organisation aiming at mutual growth. (ஒரு குறிப்பிட்ட துறையில் நீண்ட பணியனுபவம் பெறுதல், புதிய திறமைகளைப் பெறுவதுடன் நிறுவனத்தின் இலக்கை அடைந்து இருவருக்கும் வளர்ச்சியை எட்டுதல்).
புரொபைல் - மேலோட்டமான பார்வை:
இப்பகுதி ரெஸ்யூமில் கட்டாயமான பகுதியல்ல என்றாலும் இப்பகுதி மதிப்புவாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் ஒருவரின் ஒட்டுமொத்த திறமைகள் மற்றும் சாதனைகளைப் பற்றிய சுருக்கமான பார்வையாக அமைக்க வேண்டும். இப்பகுதியில் ஒருவரின் தனித்தன்மை மிக்க பலங்கள் (ஸ்டெரங்த்) பற்றி குறிப்பிட வேண்டும்.
இதோ சில உதாரணங்கள் உங்கள் பார்வைக்காக:
*Good knowledge on internet security, ECommerce transactions, system Analysis etc., * More than one year experience in the particular industry.கல்வித்தகுதி: ரெஸ்யூமின் இப்பகுதியில் பட்டப்படிப்பு, சிறப்புப் பிரிவு, படித்த கல்வி நிறுவனங்களின் விவரம், பட்டம் பெற்ற ஆண்டு, பிற பாடங்களின் விபரம், பங்குபெற்ற பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், தொடர்புடைய பாடங்களில் படித்த படிப்புகள், புராஜெக்ட் விபரங்கள் போன்றவற்றைத் தர வேண்டும். கல்வித்தகுதியை அகடமிக், புரொபஷனல் அல்லது டெக்னிகல் என்று பிரித்து தனித்தனியாக தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
பணிப்பாதை அல்லது பணி அனுபவம்: ரெஸ்யூமின் இப்பகுதியில் எங்கு பணிபுரிந்தோம், என்ன பதவிகளை வகித்தோம், என்ன பொறுப்புகளை நிர்வகித்தோம், என்னென்ன சாதனைகள் புரிந்தோம், எவ்வளவு காலம் பணிபுரிந்தோம் போன்ற தகவல்களைத் தர வேண்டும். எங்கு பணிபுரிந்தோம் என்பதையும், பணிபுரிந்த நிறுவனத்தைப் பற்றிய குறுவிபரங்களையும் தரலாம். பணிப் பொறுப்புகளைத் தரும் நேரம், நமது சாதனைகளைப் பற்றிய அழுத்தமான விபரங்களாகிய பணி புராஜெக்ட், இலக்குகளை அடைந்தது ஆகியன பற்றித் தெரிவிக்க வேண்டும். எந்த நாளில் இருந்து துவங்கி எதுவரை பணிபுரிந்தோம் என்றும் குறிப்பிடலாம்.சுய விவரங்கள் - பெர்சனல் புரொபைல்:
நமக்கே உரித்தான விபரங்களாகிய பிறந்த தேதி, நிரந்தர முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, பாஸ்போர்ட் இருந்தால் அதுபற்றிய விபரங்கள், பொழுதுபோக்கு, மொழித்திறன் போன்ற விபரங்கள் இப்பகுதியில் இடம்பெற வேண்டும்.