/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மென்திறன்கள் (சாப்ட் ஸ்கில்) அவசியமா?
/
மென்திறன்கள் (சாப்ட் ஸ்கில்) அவசியமா?
டிச 06, 2008 12:00 AM
டிச 06, 2008 12:00 AM
இன்றைய பணிச் சூழலில் சாப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் தனிநபரின் மென்திறன்களுக்கான முக்கியத்துவம் அதிகமாக உணரப்பட்டு வருகிறது.
ஒரு தனி நபரின் மென்திறன்கள் என்பதில் சுய விழிப்புணர்வு, அறிவார்ந்த சிந்தனை, தலைமை பண்புகள், குழுவினைக் கட்டுப்படுத்தும் திறன், இலகுத் தன்மை, தகவல் பரிமாறும் திறன், கிரியா சிந்தனை, பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், கவனிக்கும் திறன், நாகரிகம், மாற்றங்களை ஏற்கும் திறமை ஆகிய அனைத்துமே அடங்கியுள்ளது.
பொதுவாக இந்த மென் திறன்களை Emotional Intelligence என்று குறிப்பிடுகிறார்கள். ஹார்ட் ஸ்கில்ஸ் எனப்படும் தொழில் திறன்களை பயிற்சி மற்றும் கல்வி வாயிலாகப் பெற்று வேலையில் பயன்படுத்துகிறார்கள்.
எதற்கு இவை தேவை
ஒருவரின் பணியிடத்தில் வெற்றி பெறுபவர்களில் ஐ.கியூ., அல்லது தொழில் ரீதியான திறமை பெற்றவர்களை விட மேலே சொல்லப்பட்ட திறமைகளைத் தேவைக்கேற்ப உபயோகிப்பவரின் எண்ணிக்கை இரு மடங்காக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, பணியில் சேர வரும் நபர்களின் தேவைகளில் முக்கியமானதாக இன்டர்பர்சனல் ஸ்கில் எனப்படும் பிறருடன் பழகும் தன்மை, எழுத்து மற்றும் பேச்சு வாயிலான தகவல் பரிமாற்றம், கடினமான சூழலிலும் பணியாற்றும் தன்மை போன்ற மென்திறமைகளையே பணி வாய்ப்புகளைத் தருபவர்கள் கருதுகிறார்கள்.
அன்றாடம் மாறிவரும் பணிச் சூழல், தொழில்நுட்ப வளர்ச்சி, வாடிக்கையாளரை மையப்படுத்தி இயங்கும் சந்தைகள், தகவல் பரிமாற்றம் அடிப்படையிலான பொருளாதாரம், உலகமயம் போன்றவை காரணமாக சாப்ட் ஸ்கில்களின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஆனால் சாப்ட் ஸ்கில்களை ஹார்ட் ஸ்கில்களுக்கு மாற்றாகக் கருத முடியாது.
இவை இரண்டுமே யாருக்கும் தேவைப்படும் திறன்களாகக் கருதப்படுகிறது.
நல்ல தகுதி வாய்ந்த தொழில் ரீதியிலான ஹார்ட் ஸ்கில் பெற்றவர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் கருவியாகவே சாப்ட் ஸ்கில்கள் திகழ்கின்றன. எனவே எதிர்காலத்தில் பணியிடத்தில் பணித் திறமைகளுடன் சாப்ட்ஸ்கில்களைப் பெற்றவர்களே நல்ல பணியிட முன்னேற்றம் பெற முடியும் என்று சொன்னால் அது மிகையில்லை.