/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் சீர்திருத்தம்?
/
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் சீர்திருத்தம்?
டிச 20, 2008 12:00 AM
டிச 20, 2008 12:00 AM
இந்தியாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற பெருமை மிகு பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அறிவோம். சிற்சில மாற்றங்களைத் தவிர இத் தேர்வில் கடந்த பல ஆண்டுகளாக பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இத் தேர்வு முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வுகள் குறித்த பரிசீலனையை 2வது நிர்வாகச் சீர்திருத்தக் குழு எனப்படும் Admnistrative Reforms Commission மேற்கொண்டிருந்தது. ஏ.ஆர்.சி., குழுவின் தலைவராக வீரப்ப மொய்லி செயல்பட்டு வந்தார். இந்த அறிக்கை சிவில் சர்விசஸ் தேர்வு முறையில் அதிரடி மாற்றங்களை பரிந்துரைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இதன் 377 பக்க பரிந்துரை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய சாராம்சங்கள் இவை தான்.
* சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்த அறிக்கையில் பணித் திறமை அடிப்படையிலான பணித் தொடர்ச்சி, பொறுப்புகளை நியமித்தல், பணி உயர்வில் மாற்றங்கள் மற்றும் பணிப் பொறுப்புகளில் சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
* ஒவ்வொரு அரசு ஊழியரும் பணி நியமனம் பெறும் போதும் பணியிலுள்ள போதும் பயிற்சிகளில் கலந்து கொள்வது கட்டாயம். இந்தப் பயிற்சிகளை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படும். பணிக் காலத்தில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகளால் மட்டுமே மாற்றங்களைப் புரிந்து கொண்டு சிறப்பான சேவை செய்ய முடியும் என்பதால் பயிற்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
* பணியிலுள்ளவர்களின் திறனை வெளிக்கொணரும் செயல்பாட்டுத் திறனை அளக்கும் Performance Appraisal System என்பது Performance Management System என மாறவுள்ளது.
* சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுதும் பொதுப் பிரிவினருக்கு அதிக பட்சமாக முன்பு போல 3 வாய்ப்புகள் மட்டுமே தரப்படும். தற்போது இது 4 ஆக உள்ளது. ஓ.பி.சி., பிரிவினருக்கு 5 (தற்போது 6) மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 6 (தற்போது 7) என எழுதும் வாய்ப்பு குறைக்கப்படும்.* யு.பி.எஸ்.சி., தேர்வுகளை எழுதுவதிலுள்ள உச்சபட்ச வயது வரம்பும் மாறவுள்ளது. இந்த வரம்பானது பொதுப் பிரிவினருக்கு 30லிருந்து 25 என்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு 33லிருந்து 28 ஆகவும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 35லிருந்து 29 ஆகவும் குறைக்கப்படவுள்ளன. குறைந்தபட்ச வயதான 21ல் எந்த மாற்றமும் பரிந்துரைக்கப்படவில்லை.
* உடல் ஊனமுற்றவர்கள் இனி 6 முயற்சிகளில் யு.பி.எஸ்.சி., தேர்வை எதிர்கொள்ளலாம். தற்போது இதில் இது போன்ற வரையறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* உடல் ஊனமுற்றவர்களில் அனைத்துப் பிரிவினருக்கும் உச்சபட்ச வயது 29 ஆக மாற்றப்படவுள்ளது. தற்போது இப் பிரிவினரில் பொதுப் பிரிவைச் சேர்ந்தவருக்கு 40, ஓ.பி.சி., 43 மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 45 என உச்ச பட்ச வயது வரையறை உள்ளது.
* சிவில் சர்வீசஸ் பணியில் சேர விரும்புபவர்கள் படிக்கக் கூடிய பிரத்யேகப் பட்டப்படிப்பாக பப்ளிக் பாலிசி அண்ட் மேனேஜ்மென்ட் என்பது விரைவில் நிறுவப்படவுள்ளது. இதன் மூலம் முறையான கல்வி முறைக்கு ஆதரவு பெருகும் என்றும் பயிற்சி மையங்களை கட்டுக்குள் வைக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.
* பள்ளிப்படிப்பை முடித்து சிவில் சர்வீசஸ் பணியில் சேர எண்ணம் உடையவருக்கான சிறப்பு அமைப்பு ஒன்றை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
* அரசின் சார்பாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் என்ற கல்வி நிறுவனத்தை நிறுவி பொது நிர்வாகப் பட்டப்படிப்புகளைத் தர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இது தனியார் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்புகளைப் படிக்காதவர்கள் பிரிட்ஜ் கோர்ஸ் எனப்படும் இணைப்புப் படிப்பு ஒன்றை முடித்து பின்பு சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுதலாம். அடுத்த கல்வியாண்டிலேயே சில கல்வி நிறுவனங்களில் இப் படிப்பைத் துவக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.