/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
தற்போதைய வேலை வாய்ப்புச் சந்தை - ஒரு பார்வை
/
தற்போதைய வேலை வாய்ப்புச் சந்தை - ஒரு பார்வை
மார் 01, 2009 12:00 AM
மார் 01, 2009 12:00 AM
20ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்த நிலையே தற்போது வேலை வாய்ப்புச் சந்தையில் நிலவுகிறது. குறைவான வேலைகளை நிறைய போட்டியாளர்கள் துரத்தும் நிலையே இப்போதும் காணப்படுகிறது. எனவே பணிக்குத் தகுந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிறுவனங்களுக்கு தற்போது அதிக வாய்ப்புள்ளது. சம்பளத்தை நிர்ணயிப்பதிலும் இவர்கள் கையே ஓங்கியிருக்கிறது.
புதிய பணியாளர்களுக்குக் கடுமையான முயற்சிகளின் பின்பே பணி வாய்ப்புகள் கிடைப்பதால் பணியிலமரும்போது எந்தவித முணுமுணுப்புமின்றி குறைவான ஊதியத்தையும் ஏற்றுக்கொள்ளும் போக்கு தற்போது காணப்படுகிறது. ஆனால் கீழ்நிலை, இடைநிலை அலுவலகப் பணிகளில் மட்டுமே இந்த நிலை காணப்படுகிறது. இன்றைய நவீன உலகின் வேலை வாய்ப்பாளருக்கு இது மாதிரியான இயந்திரத்தனமாகப் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்டே தங்களது வாணிப இலக்குகளை எட்டி விட முடியும் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் திறன் வாய்ந்த ஊழியர்களின் விருப்பத்திற்கேற்ற சம்பளமும் தரப்படுகிறது.
செயல்திறன் மற்றும் உற்பத்தி
உலகமே தொழில் வளர்ச்சி கண்டு நவீனமயமாகி வரும் இந்த நாட்களில் நிறுவனங்களின் செயல்பாட்டிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. உலக ரீதியிலான தகவல் தொடர்பு வசதிகள், உயர்கல்வியில் காட்டப்படும் ஆர்வம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் போன்றவை நிறுவனங்களின் செயல்பாட்டில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. நிறுவனங்களின் வெற்றிக்கு அதில் பணி புரியும் ஊழியர்கள் செயல் திறன் மிக்கவர்களாகவும் நிறைந்த உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டு வருகிறது.
நிறுவன விசுவாசம்-மாறும் பரிமாணம்
இன்றைய நிறுவனங்களில் பணிக்குப் புதிதாக ஊழியர்கள் தேர்வு செய்யப்படும் போது நவீன பணித் தேவைக்கேற்ப பணி புரியத் தகுதியுடையவர்களாக இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். பழைய பணியிட நம்பிக்கைகள், நடத்தைகளைத் தவிர்த்து நேர்முக எண்ணங்களுடன் நிறுவனத்தில் பணி புரிந்து உலகச் சந்தையின் போட்டிக்கு மத்தியில் சார்ந்திருக்கும் நிறுவனத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் பணியில் சேரும் போது அவர்களுக்கு நிறுவன விசுவாசம் தேவைப்பட்டது. விடுப்பு, விடுப்பை பணமாக மாற்றிக் கொள்வது போன்ற சலுகைகள் தரப்பட்டன. இளம் வயதில் பணியில் சேர்ந்து ஓய்வு பெறும் வரை அதிலேயே தொடருவது சாதாரணமாக இருந்தது. ஆனால் விசுவாசத்தை விட நிறுவனங்கள் தற்போது எதிர்பார்ப்பது திறன்களைத் தான். இதனால் உற்பத்தித் திறன் அதிகரித்து நிறுவனம் லாபம் ஈட்டுவதே பிரதானமாகிவிட்டது. இதனால் கான்ட்ராக்ட் எனப்படும் ஒப்பந்த அடிப்படையிலான பணி வாய்ப்புகள் இன்று சாதாரணமாகி விட்டன.
ஊதிய விகிதங்கள்-சிதம்பர ரகசியம்
பதவி மற்றும் பணி அனுபவத்தைப் பொறுத்தே பொதுவாக சம்பளம் அல்லது ஊதியங்கள் அமைகின்றன. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் செயல்திறனைப் பொறுத்தே இது தீர்மானிக்கப்படுகிறது. பன்னாட்டு எம்.என்.சி., நிறுவனங்களில் தரப்படும் சம்பளங்கள் ராணுவ ரகசியத்தைப் போல பாதுகாக்கப்படுகின்றன. உடன் பணியாற்றும் ஒருவரின் சம்பளம் அடுத்தவருக்குத் தெரிவதில்லை. புதிதாக பணியில் சேருபவருக்கு ஏற்கனவே பணியிலிருப்பவரை விட அதிக சம்பளம் தரப்படுவதும் சாதாரணம்.
தலைவர்களே இன்றையத் தேவை
முன்பெல்லாம் நிறுவனங்களில் மேலாளர்கள் என்பவர்கள் உடன் பணியாற்றுபவரை நிர்வகிப்பது முக்கியக் கடமையாக இருந்தது. ஆனால் சக ஊழியர்களோடு பணியாற்றும் போது அவர்களுக்கு முன்னுதாரணமாக தலைவர்கள் செயல்படுவது அத்தியாவசியமாகிவிட்டது. நிறுவனத்தின் தேவைக்கேற்ப புதிய திறன்களைக் கண்டுபிடித்து நெட்வொர்க்கிங் பணிகளில் இன்று தலைவர்கள் ஈடுபடுகிறார்கள்.
இன்றைய தேவை இதுதான்...
வெறும் கல்வித் தகுதியால் வேலை கிடைக்கும் என்று நம்பிவிடாதீர்கள். உங்களுக்கான துறையில் கல்வித் தகுதியை மட்டும் பெறுவது பலன் தராது. துறை சார்ந்த நவீன மாற்றங்களை அறிய முற்படுங்கள். எம்.ஏ., வரலாறு படிப்பில் தங்கப் பதக்கம் பெறுவதோடு அடிப்படை கம்ப்யூட்டர் திறன்களைப் பெறுவதே உங்கள் திறன்களை மேம்படுத்தும்.
இன்று நிறுவனங்கள் பல்கலைக்கழக மதிப்பெண்களை பெரிதாக நினைப்பதில்லை. தகவல் தொடர்புத் திறன், ஆளுமைத் திறன், நேர்முக எண்ணம், தலைமைப் பண்புகள் கொண்டவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. இவை உங்களது பயோடேட்டாவில் வெளிப்பட வேண்டும். நேர்முகத் தேர்விலும் குழு விவாதங்களிலும் இவை பிரதிபலிக்கப்பட வேண்டும். மாற்றங்களை எதிர்பார்ப்பதைவிட தேவைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதில் தான் எதிர்காலம் அமைகிறது என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.