மார் 07, 2009 12:00 AM
மார் 07, 2009 12:00 AM
பணிகளில் முக்கியமானது என்றும் புனிதத் தன்மை வாய்ந்தது என்றும் கருதப்படும் ஆசிரியர் பணி பற்றிய பார்வைகள் மாறிக் கொண்டே வருகின்றன. ஆசிரியராக விரும்பும் குழந்தைகளை நாம் பார்க்கவே முடிவதில்லை. மாநகரங்களில் வசிக்கும் இளைஞர்களிடம் மட்டுமே ஆசிரியர் தொழிலில் ஈடுபடும் ஆர்வம் உள்ளதாகவும் மிகக் குறைந்த ஊதிய விகிதங்களே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அறியப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கல்வியியல் படிப்பான பி.எட்.,டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவீத அளவுக்கு குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 1980ல் தொடங்கி 1990 வரை இளைஞர்களுக்கான மிகச் சிறந்த பணியாக ஆசிரியப் பணியே அறியப்பட்டது. கிட்டத்தட்ட கடந்த 2000ம் ஆண்டு வரை இதே நிலையே இருந்து வந்தது. ஆனால் பொதுவாக இந்த நிலையில் மாற்றம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் இந்த விகிதம் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. முன்பெல்லாம் ஆசிரியர்களின் நலனைப் பாதுகாக்கும் அளவில் மிக நல்ல ஊதியங்கள் தரப்பட்டதாகவும் தற்போதுள்ள நிலையில் இது பிற துறைகளின் ஊதியத்தோடு ஒப்பிடுகையில் குறைவாகவே இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. மேனேஜ்மென்ட் துறையின் ஊதியத்தோடு ஒப்பிட்டால் இது மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது. ஆசிரியராகப் பணி புரிபவர்கள் தங்களது சம்பளத்தை தங்களோடு படித்து பிற துறைகளில் பணிபுரிவோரின் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து மனச் சோர்வடைகிறார்கள். பிற துறைகளுக்கு ஈடாக கடுமையான பணிபுரிந்த போதும் சம்பளம் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் ஆசிரியர்களின் நிலையானது கீழேயே இருப்பதாக ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இப்படி ஆசிரியர்கள் மனச் சோர்வுக்குத் தள்ளப்படுவதாலேயே பள்ளிகளில் வன்முறைக் கலாசாரம் உருவாகிறது என்றும் கூறப்படுகிறது. ஆசிரியர்கள் அடித்து மாணவர்கள் இறப்பது போன்ற நிகழ்வுகளுக்கும் கூட இது போன்ற உளவியல் ரீதியான காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஆசிரியர்களுக்கு தரப்படும் போது ஆசிரியர் தொழிலின் மீதான மதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்.சி.இ.ஆர்.டி., மற்றும் டில்லி பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இது தொடர்பான முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஒரு ஆண்டு பி.எட்., படிப்பானது 2 ஆண்டு படிப்பாக மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. பி.எட்., படிப்பில் சேரும் ஆண் : பெண் விகிதம் தற்போது 20 : 80 என உள்ளது. இதை மாற்றி அதிகமான மாணவர்களை பி.எட்., படிப்பில் சேரச் செய்யும் முயற்சிகளும் முழு வீச்சில் உள்ளன.