/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
குறைகிறதா மருத்துவ படிப்பு மீதான ஆர்வம்?
/
குறைகிறதா மருத்துவ படிப்பு மீதான ஆர்வம்?
மார் 13, 2009 12:00 AM
மார் 13, 2009 12:00 AM
ஒரு மருத்துவ மாணவரை உருவாக்க அரசு 10 லட்ச ரூபாய் செலவு செய்கிறது. மற்ற படிப்புகளுக்கு அரசு இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதில்லை.
எனவே, அரசின் செலவில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என அரசு எதிர்பார்ப்பதில் என்ன தவறு என்ற கேள்வி எழுந்துள்ளது.
நம் நாட்டில், 73 சதவீத வரிவருவாய் கிராமங்களில் இருந்துவருகிறது. அவர்களுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டியது அவசியம். ஆனால், மருத்துவக் கல்லூரிகளை நகரங்களில் மட்டுமே திறக்கின்றனர். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று திட்டமிட்டு திறந்து வரும் அரசு நிர்வாகம் கூட நகரப் பகுதிகளிலேயே கல்லூரியை திறக்கிறது.
இதை மாற்றி கிராமப்பகுதிகளில் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலமே கிராமப்பகுதி மக்கள் ஓரளவுக்காவது மருத்துவ வசதிகளைப் பெற முடியும். இதைச் செய்தால் தனியாக கிராம சேவை என்று மாணவர்களை அனுப்பவே தேவையில்லை. மாணவர்களை கிராம சேவை அனுப்புவதால் எவ்வித பலனும் கிராம மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
அரசின் கிராம சேவை திட்டப்படி, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நான்கு மாதம், தாலுகா மருத்துவமனைகளில் நான்கு மாதம், கிராமங்களில் நான்கு மாதம் என பிரிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால் கிராம மக்களுக்கு பலன் இருக்காது.
மருத்துவ மாணவர்களுக்கு சி.ஆர்.ஆர்.ஐ., பயிற்சி என்பது அருமையாக வடிவமைக்கப்பட்ட திட்டம். ஒரு மாணவர் முழுமையான மருத்துவராக அனைத்து துறைகளிலும் அனுபவம் பெற வேண்டியது அவசியம். இந்த அனுபவத்தை இந்த பயிற்சி வழங்குகிறது. மருத்துவம், அறுவைச் சிகிச்சை, குழந்தை பிறப்பு மற்றும் பெண்களுக்கான நோய் தடுப்பு மருத்துவம், சமூக மருத்துவம் என நான்காக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று மாதங்கள் இந்த பயிற்சியில் ஹவுஸ்சர்ஜன்கள் பணிபுரிகின்றனர்.
இதில், வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே அறுவைச் சிகிச்சை பிரிவில் பணியாற்ற வேண்டி வரும். அட்மிஷன் பிரிவில் பணியில் இருக்கும் அன்று மட்டும் 24 மணி நேரம் பணியாற்ற வேண்டி வரும்.
சி.ஆர்.ஆர்.ஐ., பயிற்சியால் தான் மருத்துவ மாணவர்கள் ஒரு முழுமையான மருத்துவ மாணவராகின்றனர். எனவே, இதில் குறைபாடு சொல்வது என்பது பொருத்தமாக இருக்காது என்கின்றனர் மூத்த மருத்துவர்கள்.
மருத்துவ படிப்பை மறுத்தவர்கள்
மருத்துவ படிப்பில் குறைந்த இடங்களே இருப்பதாலும், அப்படிப்பின் மீதான ஆர்வத்தாலும், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர மாணவர்களிடையே போட்டி நிலவுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கவுன்சிலிங்கின் போது, மருத்துவ படிப்பை கைவிட்டு பொறியியல் படிப்பை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொறியியல் படிப்பின் இறுதி ஆண்டிலேயே பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து விடுகிறது என்பதாலும், கைநிறைய சம்பளம் கிடைப்பதாலும், மாணவர்கள் மருத்துவத்தை விட பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு நடந்த பொறியியல் முதற்கட்ட கவுன்சிலிங்கில் 69 மாணவர்கள் மருத்துவ படிப்பை கைவிட்டு பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தனர். இம்மாணவர்கள், மருத்துவ கவுன்சிலிங் மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தங்களுக்கு கிடைத்த எம்.பி.பி.எஸ்., இடங்களை, பொறியியல் கவுன்சிலிங்கில் மீண்டும் ஒப்படைத்து பி.இ., படிப்பில் சேர்ந்துள்ளனர்.
மருத்துவக் கல்வியை வெறுக்கும் மாணவர்கள்
கல்வி கற்பது என்பது அறிவைப் பெருக்குவதற்காக என்ற ‘கான்செப்ட்’ மலையேறி ரொம்ப காலம் ஆகிவிட்டது. குறிப்பிட்ட கல்வியை எத்தனை ஆண்டில் படிக்கலாம், படித்து முடித்தவுடன் வேலை கிடைக்குமா, எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று கணக்கு போட்டு விட்டுத்தான் எந்த படிப்பை படிப்பது என்று தேர்வு செய்யும் நிலை வந்து விட்டது.
நான்கு ஆண்டுகள் பொறியியல் படித்தால் ‘கேம்பஸ்’ இன்டர்வியூ மூலமே வேலை கிடைக்கும்; தகவல் தொழில்நுட்ப படிப்பு படித்தால் லட்சங்களில் சம்பளம் பெறலாம் என உயர்கல்வியை தேடும் மாணவர்கள் கணக்கு போட்டு படித்து வருகின்றனர். சேவை நோக்கோடு கூடிய படிப்பாக கருதப்பட்ட மருத்துவப் படிப்பு கூட இப்போது முழுக்க வர்த்தக மயமாகிவிட்டது.
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதில் துவங்கி ஐந்தரை ஆண்டுகளை கடந்து ஒரு மருத்துவராக பணியாற்றச் செல்வது வரை, பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால் தற்போது மற்ற படிப்புகளை விட ‘மவுசு’ குறைந்து வருகிறது. தற்போது மத்திய அரசின் சுகாதாரத்துறை கொண்டுவரவுள்ள கட்டாய கிராம சேவையும் அமல்படுத்தப்படுமானால் கூடுதலாக ஒரு ஆண்டை தாண்ட வேண்டிய அவசியம் மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் மருத்துவம், பொறியியல் ஆகிய இரு கல்லூரிகளிலும் ஒரு மாணவருக்கு இடம் கிடைக்குமானால் மருத்துவத்தை துõக்கி எறிந்துவிட்டு பொறியியலுக்கு ‘ஜே’ போடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்களைப் பட்டியிடுகின்றனர் மருத்துவத் துறையில் பணியாற்றும் அனுபவஸ்தர்கள்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாட வேண்டுமானால், அட்மிஷனுக்கென பல லகரங்களை செலவிட வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மருத்துவப் படிப்பே அவ்வளவு எளிதானது அல்ல. நான்கரை ஆண்டுகள் மருத்துவ ‘தியரி’யை கரைத்துக் குடித்துவிட்டு, ஓர் ஆண்டு ஹவுஸ் சர்ஜனாக பணிபுரிய வேண்டியது கட்டாயம். இதில், சி.ஆர்.ஆர்.ஐ., என்ற (கம்பல்சரி ரொட்டேட்டரி ரெசிடன்சியல் இன்டன்சிப்) என்று ஓராண்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
இந்த பிரிவில் ஹவுஸ்சர்ஜனாக உள்ள ஒருவர் கட்டாயமாக 365 நாள் வேலை பார்க்க வேண்டும். ஏதாவது ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டி வந்தால், அதற்கு பதிலாக கூடுதலாக ஒரு நாள் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்ற வேண்டும். ஓர் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பணிபுரிவது எந்த அளவு சாத்தியம் என்பதை யூகிக்க முடியும். இடைவெளியின்றி தொடர்ச்சியாய் நோயாளியை கவனிப்பதால் ஹவுஸ்சர்ஜன்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.
குரு குல பாணியில் மருத்துவமனையையே வீடாக நினைத்து பணியாற்ற வேண்டிய கட்டாயம். அப்படி, எம்.பி.பி.எஸ்., முடித்து தனியார் மருத்துவமனைகளில் ‘டியூட்டி’ டாக்டராக பணிக்கு சேர்ந்தால் கிடைக்கும் சம்பளம், அதிகபட்சம் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே. மற்ற படிப்புகளோடு ஒப்பிடுகையில் நாங்கள் அதிக ஆண்டுகள் படிப்பில் செலவழிக்கிறோம். ஆனால், அதற்கு கிடைக்கும் சம்பளமோ மிகக் குறைவாக உள்ளது.
அரசு மருத்துவராக வேண்டுமானால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி பாஸ் ஆக வேண்டும். அரசு டாக்டரின் அடிப்படை சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே. தற்போதைய நிலையில் எம்.பி.பி.எஸ்., மருத்துவர் என்றால் பாமரன் கூட சிகிச்சை எடுக்க மறுக்கும் நிலை உள்ளது.
எனவே கட்டாயம் மருத்துவ உயர்கல்வி படித்தாக வேண்டிய அவசியம். அப்படி உயர்கல்வி படிக்க வேண்டுமானால் அதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வில் கடந்த ஆண்டு வரை அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இருந்தது. இது தற்போது 98 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு சதவீதத்தில் அரசு பணியில் இல்லாத எத்தனை டாக்டர்கள் நுழைவுத் தேர்வை எழுதி, தேர்வாகி, உயர்கல்வி கற்க முடியும்?
எனவே, உயர்கல்விக்கு தனியார் கல்லூரிகளை நாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. நன்கொடை, கட்டணம் என மேலும் பல லட்சங்களை முதலீடு செய்தால் தான் மருத்துவ உயர்கல்வி கற்று சிறப்பு மருத்துவராக முடியும். மத்திய அரசின் திட்டப்படி, நான்கரை ஆண்டு மருத்துவ படிப்பு, ஒரு ஆண்டு ஹவுஸ்சர்ஜன் சேவை, அதன் பிறகு ஒரு ஆண்டு கிராம சேவை செய்தால் மட்டுமே மருத்துவர் என்று கவுன்சிலில் பதிவு செய்யப்படும். சான்றிதழும் கிடைக்கும். கிராமத்தில் வசிப்பவர்களுக்கு எங்களை சிகிச்சை அளிக்க அனுப்புகின்றனர்.
டாக்டர் சான்றிதழ் பெறாத எங்களைக் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சரியான முறையா? அவர்களுக்கு மட்டும் பயிற்சி டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளிப்பது சரியா?
கிராம சேவையாற்றும் எங்களுக்கு அரசு சர்வீஸ், உயர்கல்வியில் சீனியாரிட்டி கொடுக்க அரசு முன்வர வேண்டும். கிராமங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை என்றால் ஐந்தரை ஆண்டுகள் படிப்பு முடிந்ததும் அங்கேயே ‘போஸ்டிங்’ போட வேண்டியதுதானே.
மருத்துவப் படிப்பிற்காக ஏற்கனவே ஐந்தரை ஆண்டு செலவழித்து விட்டு, அதன் பின் ஒரு ஆண்டு கிராம சேவைக்கு போனால் மேலும் ஒரு ஆண்டு ‘சீனியாரிட்டி’ போகிறது. இந்த இழப்பை எப்படி ஈடு செய்ய முடியும்? என்பது போன்ற கேள்விகள் மருத்துவ மாணவர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது. மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டியது அவசியம். கடைக்கோடி கிராமத்தவர் வரை இந்த சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
அடிப்படை தேவையான மருத்துவம் படிப்பதில் ஆர்வம் குறைகிறது என்றால் அதை உணர்ந்து குறைபாடுகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை. இதைச் செய்தால் மட்டுமே அனைவருக்கும் மருத்துவ சேவை என்ற, அரசின் குறிக்கோள் நிறைவேறும்.