/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இந்திய ஐ.டி., நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்கள்
/
இந்திய ஐ.டி., நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்கள்
மார் 14, 2009 12:00 AM
மார் 14, 2009 12:00 AM
அமெரிக்காவில் நிலவும் மந்தமான பொருளாதார நிலை குறிப்பாக இந்திய ஐ.டி., நிறுவனங்கள் இப்பிரச்னையின் தீவிரத்தை உணரத் தொடங்கியுள்ளன.
ஐ.டி., நிறுவனங்களின் சந்தை சரிவதும் அவற்றின் வருவாயில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் பற்றிய தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த நிலையால் ஐ.டி., நிறுவனங்கள் அவை ஏற்கனவே பெற்றுள்ள லாபத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் வளர்ச்சி காண்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாயில் பாதியளவு பெரும்பாலும் அமெரிக்கப் பிராந்தியத்திலிருந்தே பெறப்பட்டது. அமெரிக்க நிறுவனங்கள் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள நிலையில் ஐ.டி., நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தில் தள்ளுபடி செய்வது, ஒப்பந்த தொகையை விட குறைவாகப் பெற்றுக் கொள்வது போன்ற தாராளமயமாக்கலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் அவுட்சோர்சிங் பணிகளுக்கு எதிரான நிலையைக் கொண்டதாக இருக்கிறது. இதுவும் ஐ.டி., துறையை மேலும் மேலும் பிரச்னைகளுக்கு உள்ளாக்கக் கூடியதுதான். ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் தொடர்ந்து முன்னேற்றம் என்று அசுர வளர்ச்சி கண்டு வந்த ஐ.டி., துறையானது எத்தனையோ பிரச்னைகளை கடந்து வந்துள்ளது.
ஆனால் தற்போது இத்துறை பொலிவிழந்து காணப்படுவதையும் நாம் காண முடிகிறது. உலக வங்கியின் கணிப்பின்படி 2009ல் உலகப் பொருளாதாரம் 0.9 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என்றும் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் பகுதிகளில் இது 0.5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாயில் 85 முதல் 90 சதவீதம் வரையிலான வருவாயை இந்த பகுதியே தந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் உலக வங்கியின் சமீபத்திய கணிப்புகள் இந்தியாவுக்குக் கவலை தருகிறது.
பொருளாதாரச் சிக்கலின் பிடியிலிருந்து தப்புவதற்காக சர்வதேச நிறுவனங்கள் மறுசீரமைப்பு, நிறுவனங்களை வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதனால் இந்திய ஐ.டி., நிறுவனங்களில் டாப் 5 நிறுவனங்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. சர்வதேச வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்திய ஐ.டி., நிறுவனங்கள் இந்த மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தும் கட்டாயத்திலிருக்கின்றன. தற்போதைய சூழலால் சர்வதேச நிறுவனங்களோடு மேற்கொள்ளப்படும் புதிய ஒப்பந்தங்களில் கடுமையான நிபந்தனைகளுக்கும் நமது ஐ.டி., நிறுவனங்கள் உள்ளாகின்றன. இதனால் இவற்றின் வளர்ச்சி விகிதம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
வருவாய்க் குறைப்பு, பணிவாய்ப்புக் குறைவு, அவுட்சோர்சிங் சரிவு, நிறுவன மறுசீரமைப்பு என பல்முனைத் தாக்குதல்களை இந்திய ஐ.டி., நிறுவனங்கள் ஒரே சமயத்தில் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இதனாலேயே இன்று பல ஐ.டி., நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு போன்ற சிக்கன நடவடிக்கைகள் பரவலாகியுள்ளன. புதிதாகப் பணிக்கு ஆள் சேர்ப்பதில் வெட்டு, பணியில் ஏற்கனவே இருப்பவருக்கு சலுகை ரத்து, வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள கடும் போராட்டம் என்ற சிக்கல்களுக்கு நடுவே ஒரே ஒரு ஆறுதலை இவை சந்திக்கின்றன.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே வரும் நிலையில் ஐ.டி., நிறுவனங்களின் குறையும் வருவாயை ஓரளவு இது சரிக்கட்டும் என்று கூறப்படுகிறது. இது தவிர கூடுதல் செலவினங்களைக் குறைப்பது, செலவுகளைக் கட்டுப்படுத்துவது, புதிய சந்தைக்கான வழிமுறைகளை ஆய்வு செய்வது என்ற நம்பிக்கையோடு இந்திய ஐ.டி., துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது மட்டுமே ஐ.டி., துறையில் தனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்பும் நமது இளைஞர்களுக்கான ஒரே நம்பிக்கைக் கீற்றாக அமைகிறது.