மார் 28, 2009 12:00 AM
மார் 28, 2009 12:00 AM
அன்றைய மன்னராட்சி காலத்திலேயே ஜெம் எனப்படும் அரிய வகைக் கற்களை செல்வத்தின் அடையாளமாகவும் இறைவனை அலங்கரிக்கும் பொருளாகவும் உபயோகிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
கற்களை ராசிக்காக பயன்படுத்தி அபூர்வமான முன்னேற்றம் கண்டதாகப் படித்திருக்கிறோம். உலகின் பலபகுதிகளிலும் இவை உபயோகப்படுத்தப்பட்டாலும் பாதிக்கும் மேற்பட்ட வைரம் உள்ளிட்ட கற்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விலைமதிப்பு மிக்க கற்களாகிய வைரம், வண்ணக்கல், முத்து, செயற்கைக் கற்கள் போன்றவற்றைப் பற்றிய படிப்பே ஜெம்மாலஜி எனப்படுகிறது. புவி தொடர்புடைய அறிவியலின் உட்பிரிவாகத் திகழும் இத்துறையினர் ஜெம்ஸ்டோன் மற்றும் நகைத் தொழில் பிரிவுகளில் சிறப்பான பணியாற்றுகிறார்கள். விலைமதிப்பு மிக்க கற்களைப் பற்றிய அறிவியல்பூர்வமான இத்துறையில் தோற்றம், குணாதிசயங்கள் மற்றும் இயற்கையான ரத்தினக் கற்களை அடையாளம் காணுதல் போன்றவற்றைப் பற்றிப் படிக்கின்றனர்.
ஜெம்மாலஜி படிப்புகளைப் படிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பொதுவாக இத்துறை சார்ந்த படிப்புகள் குறுகிய காலப் படிப்புகளாகவே உள்ளன. ஜெம்மாலஜி தொடர்பான பெரும்பாலான புத்தகங்கள் ஆங்கில மொழியிலேயே இருப்பதாலும் தகவல் பரிமாற்றத்தின் தேவை காரணமாகவும் இத்துறையில் சிறப்புப் பெற நல்ல ஆங்கில மொழித் திறன் அவசியமாகத் தேவைப்படுகிறது.
இத்துறையில் இணைய விரும்புபவர்களுக்கு வடிவமைக்கும் திறனும், தரத்தின் மேல் தவறாத ஈடுபாடும் தேவைப்படும். மிக நல்ல கவனிக்கும் திறன், கை மற்றும் கண்களுக்கு இடையேயான ஒருமைப்பாடு, விபரங்களை அறியும் திறன், மிகப் பொறுமையாக கவனம் செலுத்தும் திறன் போன்றவை கூடுதல் தேவைகளாக உள்ளன.
முழுமை பெறாத அல்லது வெட்டப்பட்டு தயார் செய்யப்பட்ட கற்களை மைக்ரோஸ்கோப் மூலமாகவும் பிற நவீன உபகரணங்கள் வாயிலாகவும் ஆய்வக ஜெம்மாலஜிஸ்டுகள் சோதிக்கின்றனர். ஆபரண நகைத் துறையில் இத்துறையினருக்கு எந்த நேரத்திலும் பணி வாய்ப்புகள் தயாராகவே கிடைக்கின்றன. நாம் எங்கு பணிபுரிய விரும்புகிறோமோ அங்கேயே வணிகம் செய்யும் வாய்ப்புகளை திறமை வாய்ந்த ஜெம்மாலஜிஸ்டுகள் பெறுகின்றனர்.
இத்துறையிலுள்ள பலரும் சுய வேலை வாய்ப்பாகவோ அல்லது பெரிய நிறுவனங்களின் கீழோ புரிகின்றனர். இத்துறையினருக்கு நகை வாங்குவது, அப்ரைஸர், ஆய்வக ஜெம்மாலஜிஸ்ட், ஏலம் போடும் நிறுவனங்களின் நிபுணர், சில்லறை நகை விற்பனையாளர் என்று ஏராளமான பிரிவுகளில் பணி வாய்ப்புகள் உள்ளன.
அனைவரின் எதிர்காலத்தையும் ராசிக்கற்களின் வாயிலாக சிறப்பாக மாற்ற முடியும் என்று கூறும் ஜெம்மாலஜிஸ்டுகளின் எதிர்காலம் மிகச் சிறப்பாகவே உள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான இயற்கையிலேயே அரிய வகைக் கற்கள் உள்ளன என்பதோடு இவற்றை ஆபரண நகைத் துறையில் அதிகமாக பயன்படுத்துவதும் காலத்துக்கேற்ற மாற்றம் கண்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் ஜெம்மாலஜி துறைக்கான வாய்ப்புகள் பெரிதும் விரிவுபட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்பூர் இத்துறைக்காக அறியப்படுகிறது. உலகளவில் பாங்காக் நகரம் இத்துறையில் பிரசித்தி பெற்ற நகரமாகும். தற்போது உலகளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் இந்திய ஜெம்மாலஜி துறை சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்திய ஜெம்கள் நல்ல கிராக்கியைப் பெற்றுள்ளன.
இத்துறையில் பணியாற்றுவோர் பிரபலமான நகைக்கடைகளில் ஒரு பகுதியாக செயல்படலாம். அந்த நகைக் கடையில் விற்கப்படும் கற்களின் தரத்தைப் பரிசோதிப்பவராகவும் சான்றளிப்பவராகவும் செயல்பட முடியும். நிறம், தரம் மற்றும் வெட்டிய தன்மை ஆகியவற்றைப் பொறுத்து கற்களைத் தரம் பிரிக்கும் பணிகளிலும் ஈடுபட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த நூற்றாண்டில் இந்திய ஜெம் மற்றும் ஆபரண நகைத் துறைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் திறமை படைத்த பணியாளர்களுக்கு சிறப்பான பணி வாய்ப்புகளும் உலகளாவிய அங்கீகாரமும் கிடைப்பதும் நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது.
கலைத் தன்மை கொண்ட பணிகளில் ஈடுபடுபவர்கள் பணியின் முதல் நிலையிலேயே மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்து நல்ல ஊதியம் பெற முடியும். வெளிநாடுகளில் இத் துறையில் இணைபவர்கள் ஆரம்ப நிலையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பளம் பெறுவதையும் காண்கிறோம்.