ஏப் 04, 2009 12:00 AM
ஏப் 04, 2009 12:00 AM
தேர்வுகள் இல்லாத படிப்பு என்பது எவ்வளவு மகிழ்ச்சியான அம்சம்? ஆனால் இது எத்தனை பேருக்கு கிடைக்கிறது? தேர்வுகள் இல்லாத பள்ளிகளை பெற்றோரே விரும்புவதில்லை. நம் ஊர்களில் ஒரு சில பள்ளிகள் மட்டுமே தேர்வுகளை நடத்துவதில்லை.
இவற்றிலும் குறைந்தபட்சம் 6 அல்லது 7ம் வகுப்புக்குப் பின்பாவது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இல்லையென்றால் 10ம் வகுப்பில் மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் போது இது போன்ற பள்ளி மாணவர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே தேர்வுகள் தவிர்க்க முடியாதவை தான். தேர்வை நினைத்து பயப்படாதவர் யார்?
படிக்கும் போது குறிப்பிட்ட பாடங்களை மிகக் கடினமானவையாக உணரும் ஒரு சிலருக்கு படிப்பு முடிந்தாலும் அந்த பய உணர்வு மட்டும் மாறுவதில்லை. அவர்களில் பலருக்கு படிப்பு முடிந்து திருமணமாகி குழந்தைகள் படிக்கும் போது கூட இந்த பய உணர்வு மாறுவதில்லை. அந்த பாடத்தில் மகனோ மகளோ சந்தேகம் கேட்டால் அப்போதும் கூட விளக்கம் தர பயந்து விலகும் நிலையே பொதுவாக காணப்படுகிறது. பொதுவாக இது போன்ற பய உணர்வு வருவது கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடங்களில் தான்.
இவை வெறும் பயம் தானா என்றால் பொதுவாக பலருக்கும் வெறும் பயம் தான். ஆனால் சிலருக்கு உளவியல் ரீதியாக மருத்துவம் அல்லது ஆலோசனை தேவைப்படும் அளவுக்கு மாறிவிடுகிறது. அடுத்த நாள் கணிதத் தேர்வு என்றால் அதை நினைத்து ஏற்படும் பயத்தால் நடுக்கம் ஏற்படும் அளவுக்கு பல மாணவர்களுக்கு இது ஒரு தீவிர பிரச்னையாக மாறிவிடுகிறது. இவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை கட்டாயம் தேவை என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாதபோது உடல்நலக் குறைவு கூட ஏற்படலாம்.
எதனால் இந்த பயம் ஏற்படுகிறது என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். தேர்வில் நம்மால் பெற்றோரோஆசிரியரோ எதிர்பார்க்கும் மதிப்பெண் பெற முடியவில்லை என்றால் என்னாவது என்ற பதட்டமே பயமாக மாறுகிறது. சுமாராகப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்களது குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்றால் தான் அடுத்த கட்ட படிப்புக்கு அனுப்ப முடியும் என நினைக்கிறார்கள்.
சராசரிக்கும் மேலாகப் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரோ தங்கள் குழந்தைகள் மிக நன்றாகப் படிக்கும் படி வலியுறுத்துகிறார்கள். பல பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் பெறும் மதிப்பெண்கள் என்பது தங்கள் ஈகோவை திருப்திப் படுத்தும் அடிப்படையாக இருக்கிறது. இது போன்ற குழந்தைகள் பொதுவாக டியூசன் படிக்கிறார்கள்.
அந்த டியூசன் ஆசிரியர்களுக்கோ அடுத்த ஆண்டு நல்ல கூட்டம் வரவேண்டுமென்றால் இந்த ஆண்டு படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்றாக வேண்டும் என்ற நிலை. மாணவர்களுக்கு தாங்கள் படிக்கும் பள்ளி, பெற்றோர் மற்றும் டியூசன் ஆசிரியர் என பல மூலைகளுக்கு இடையே மாட்டிக் கொண்ட மன அழுத்தத்தால் பய உணர்வு அதிகரித்து விடுகிறது.10ம் வகுப்பு மற்றும் +2 படிக்கும் மாணவர்கள் பலரின் பெற்றோரைப் பாருங்கள். தேர்வு நெருங்க நெருங்க, பல மாணவர்களின் அம்மாக்கள்
கடுமையான மன அழுத்தத்தில் புதைந்து விடுகிறார்கள். ஒரு கல்வி ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் குறிப்பிட்ட தேர்வு மூலமாக மட்டும்
ஒரு மாணவரின் திறமையை அறிய முடியுமா என்ற விவாதம் எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
ஆண்டு முழுவதும் வெவ்வேறு முறைகள் மூலமாக மாணவரின் திறமையை அளக்க வேண்டுமே தவிர ஒரு தேர்வின் அடிப்படையில் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுவதை இன்னமும் எதிர்ப்பவர் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவாக இன்றைய சூழலில் தேர்வுக்கு முந்தைய நாள் வரை பாடம் நடத்தும் பள்ளிகளும் இருக்கின்றன. எனவே தேர்வு தேவையா இல்லையா என்ற பகுப்பாய்வும் தொடருகிறது. வெறும் மனப்பாட சக்தியை ஒரு அளவீடா பயன்படுத்துவது தேவையா என்ற கேள்விக்கு கல்வியாளர்கள் தான் விடை தர வேண்டும்.