/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மருந்தியலில் புதிய படிப்பு ‘பார்ம் டி’
/
மருந்தியலில் புதிய படிப்பு ‘பார்ம் டி’
மே 02, 2009 12:00 AM
மே 02, 2009 12:00 AM
2009 கல்வியாண்டு முதல் சென்னையிலுள்ள கல்லூரிகளில் பார்ம் டி என்ற புதிய மருந்தியல் படிப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தப் படிப்பை இந்திய மருந்தியல் கவுன்சில் அங்கீகரித்துள்ளது.
அமெரிக்காவில் நடத்தப்படும் இதே படிப்பிலுள்ள பாடப் பகுதிகள் சென்னைக் கல்லூரிகளிலும் நடத்தப்படும். பார்ம் டி படிப்பின் மூலமாக மாணவர்களை 4 விதமாகத் தயார்படுத்தும் முயற்சிகள் இருக்கும். மருந்தியலாளராக உருவாக்குவது, மருத்துவருடன் இணைந்து பணியாற்றுவது, புதிய மருந்துகளை உருவாக்குவதில் ஆலோசனைகளை வழங்குவது, மருந்துக்கும் உணவுக்குமிடையேயுள்ள தொடர்பை விளக்குவது போன்ற புதிய முயற்சிகள் இதில் இடம் பெறவுள்ளன.
இதனால் அதிக அளவு நடைமுறைப் பயிற்சி மற்றும் களப் பணிகளை உள்ளடக்கி பாடத்திட்டம் உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்ம் டி படிப்பை 5 மாநிலங்களில் உள்ள 23 கல்வி நிறுவனங்கள் நடத்தவுள்ளன. தமிழ்நாட்டில் 4, ஆந்திராவில் 12, கர்நாடகாவில் 5, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா ஒன்று என்ற எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் இந்தப் படிப்பைத் தரவுள்ளன.
தமிழ்நாட்டில் வேல் மருந்தியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம்., மருந்தியல் கல்லூரி, பி.எஸ்.ஜி., மருந்தியல் கல்லூரி, வினாயகா மிஷன்ஸ் மருந்தியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் முதலாமாண்டு படிப்புகள் தொடங்கவுள்ளன. இந்தக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் 30 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். படிப்பின் இறுதியாண்டின் கடைசி 6 மாதங்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இன்டர்ன்ஷிப்பைக் கொண்டிருக்கும். இந்த இன்டர்ன்ஷிப் காலத்தில் மருத்துவர்களுடன் சேர்ந்து நோயாளிகளைச் சந்திப்பது, மருந்து தொடர்புடைய முக்கியத் தகவல்களை நோயின் தன்மைக்கேற்ப பரிந்துரைப்பது போன்ற பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
ஒரே நோயாளிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளைப் பரிந்துரைக்கும் போது மருந்துகளுக்குகிடையேயுள்ள தொடர்புகளையும் பின் விளைவுகளைப் பற்றிய முக்கிய முடிவுகள் தொடர்புடையதாக இருப்பதால் பார்ம் டி மாணவர்களுக்கு இந்தப் பிரிவுகளில் அதிக அழுத்தம் கொடுத்து பாடப் பகுதிகள் அமையும் என்று மருந்தியல் துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பார்ம் டி படிப்பில் மனித உடற்கூறியல், மருத்துவ பயோகெமிஸ்ட்ரி, ரெமடியல் மேத்ஸ் அண்ட் பயாலஜி, போத்தோபிசியாலஜி, பார்மா சூடிகல் மைக்ரோபயாலஜி, சமூக மருந்தியல், பார்மகாதெராபடிக்ஸ், கிளினிகல் டாக்சிகாலஜி போன்ற பகுதிகளில் பாடம் அமைந்திடும்.
பார்ம் டி முடிப்பவர்களுக்கு கணிசமான வாய்ப்புகள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதுதவிர மருத்துவ மற்றும் மருந்தியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிவாய்ப்புகளும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வாய்ப்புகளும் உள்ளன. பார்ம் டி படிப்பில் சேர அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருப்பதுடன் குறைந்த பட்ச மதிப்பெண்களையும் பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாக உள்ளது.