/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வெளிமாநில மருத்துவ இட ஒதுக்கீட்டை பெற...
/
வெளிமாநில மருத்துவ இட ஒதுக்கீட்டை பெற...
ஏப் 25, 2009 12:00 AM
ஏப் 25, 2009 12:00 AM
உயர்நிலைப் பள்ளியில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்துள்ள மாணவர்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேரலாம்.
மருத்துவ கல்வி நிறுவனங்களில் வெளிமாநில மாணவர்கள் படிக்கும் வகையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இவற்றை நிரப்ப தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழக மாணவர்கள் வெளிமாநில கல்லூரிகளிலும் சேர்ந்து படிப்பதற்கு வசதியாக எந்தெந்த கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் விவசாயம் சார்ந்த படிப்புகளில் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளைப் பற்றியும் பார்ப்போம்.
1. ஆல் இந்தியா பிரி மெடிக்கல்/டென்டல் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்: இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மெடிக்கல்/டென்டல் கல்லூரிகளில் 15 சதவீத இடங்கள் மெடிக்கல்/டென்டல் படிப்புகளில் இந்த நுழைவுத்தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இது ஜம்முகாஷ்மீர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இல்லை.இந்த மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மெடிக்கல்/டென்டல் கல்லூரிகளில் உள்ள மொத்த காலியிடங்கள் அங்கு சேரும் அந்த மாநில மாணவர்களுக்கு தேவைப்படும் இடங்களை விட குறைவாக உள்ளன. எனவே இந்த மாநிலங்களில் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை. இதில் வெற்றி பெறுவதற்கேற்ப மாணவர்கள் சிறப்புப் பயிற்சி எடுக்க வேண்டும். இத்தகைய பயிற்சிகள் நாட்டின் அனைத்து மருத்துவ நுழைவுத்தேர்வுகளுக்கும் பொருந்தும்.
2. ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., (ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்), அன்சாரி நகர், நியூடில்லி -110608, டில்லி. தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வழியாக நிரப்பப்படுகிறது.
3. வேலூர் மற்றும் லூதியானாவில் உள்ள ‘சி.எம்.சி.,’ (கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி): இங்கு மருத்துவம், பிஸியோதெரபி, ஆக்குபேஸனல் தெரபி, நர்ஸிங், மெடிக்கல் லபாரட்ரி டெக்னாலஜி போன்ற பல இளங்கலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இந்த கல்லூரியில் கிறிஸ்தவ மாணவர்களுக்கென இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. சில தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி சான்றிதழ்கள் வழங்குகின்றன. இந்த கல்வி நிதி உதவி சான்றிதழ்களை கிறிஸ்தவ மாணவர்கள் பெற வேண்டுமெனில் ‘பைபிள் நாலெட்ஜ் டெஸ்ட்’ தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
4. ஜிப்மர் (ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்), புதுச்சேரி. நுழைவுத்தேர்வு வழியாக இடம்.
5. ராணுவ மருத்துவ கல்லூரி, புனே (ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ்). இக்கல்லூரியில் 105 மாணவர்கள், 25 மாணவிகள் உட்பட மொத்தம் 130 மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இங்கு சேர கல்விக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இக்கல்லூரி தங்கும் வசதி, உணவு, புத்தகங்கள், சீருடைகள், மாணவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் கல்லூரியில் இருந்து வீட்டுக்கும், திரும்ப கல்லூரிகளுக்கு வருவதற்கும் ஏ.சி.,மற்றும் 3 அடுக்கு இருக்கை வசதி கொண்ட ரயில்களில் பயணம் போன்ற அனைத்தும் இலவசமாக மாணவர்களுக்கு வழங்குகிறது. இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணி புரிவதற்குரிய உடல் திறன் மற்றும் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். இங்கு படிப்பவர்கள் ராணுவ மருத்துவமனைகளில் பணிபுரியலாம்.
6. மருத்துவ அறிவியல் நிறுவனம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரனாசி: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.எ.எம்.எஸ்., (ஆயுர்வேதம்) போன்ற படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தேர்வுகள் நடத்துகிறது.
7.மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா மாவட்டத்தில் உள்ள சேவாகிராமில் செயல்படும் ‘தி மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்’ கல்வி நிறுவனம் மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துகிறது. இதில் காந்திய சிந்தனை பற்றி விரிவாகவும், உயிரியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் கொள்குறி வகையிலும் தேர்வு நடைபெறும். பொதுவாக இந்த நுழைவுத்தேர்வு ஐதராபாத், நாக்பூர், மும்பை, டில்லி போன்ற நகரங்களில் நடத்தப்படுகின்றன.
8. பாரதிய வித்யாபீட பல்கலைக்கழகம்: புனே மற்றும் சாங்லி மாவட்டங்களில் உள்ள இந்த மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களின் வயது மற்றும் கல்வித்தகுதி ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை மிக எளிமையாக உள்ளது.
சில கல்வி நிறுவனங்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படலாம்.
9. மணிப்பால் பல்கலைக்கழகம்: கர்நாடக மாநிலத்தின் மணிப்பால் மற்றும் மங்களூருவில் உள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரிகள்.
10. ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட், போரூர், சென்னை- 600 116. - இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., /பி.டி.எஸ்.,/பி.பி.டி.,/பி.எஸ்சி., நர்ஸிங்/பி. பார்ம்/பி.எஸ்சி., ஸ்பீச் அண்டு ஹியரிங் போன்ற பட்டப்படிப்புகள் உள்ளன.
11. அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், தமிழ்நாடு: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., மற்றும் பி.எஸ்சி நர்ஸிங்., போன்ற படிப்புகளுக்கு நுழைவு தேர்வு உள்ளன.
12. ஆல் இந்தியா அக்ரிகல்சுரல் என்ட்ரன்ஸ்: ‘ஐ.சி.ஏ.ஆர்.,’ (இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச்)நிறுவனம் தேசிய அளவில் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு மூலம் பொதுத்துறை கல்வி நிறுவனங்களில் 15 சதவீதம் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதன்மூலம் விவசாயம், தோட்டக்கலை, பாரஸ்ட்ரி, பிஷரிஸ், பட்டுப்பூச்சி வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேரலாம். இந்த ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் 41 மாநில அரசு விவசாய பல்கலைக்கழகங்களும், மத்திய அரசு விவசாய பல்கலைக்கழகமும் (இம்பால்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், விஸ்வ பாரதி மற்றும் நாகலாந்து பல்கலைக்கழகங்கள் போன்ற விவசாயக்கல்வி ஆசிரியர்கள் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் போன்றவை அடங்கியுள்ளன.
அரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தில் உள்ள ‘நேஷனல் டைரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ல் உள்ள பாடப்பிரிவுகளில் ‘டைரி சயின்ஸ்’ என்ற பட்டப்படிப்பில் உள்ள அனைத்து இடங்களுக்கும் இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ‘நேஷனல் டேலன்ட் ஸ்காலர்ஷிப்’ (என்.டி. டி.,) எனப்படும் தேசிய அளவில் கொடுக்கப்படும் உதவித்தொகைகளுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இதில் பெறப்படும் மதிப்பெண்கள் உதவும்.‘ ஐ.சி.ஏ.ஆர்’ மற்றும் ‘எஸ்.ஏ.யு.,’(ஸ்டேட் அக்ரிகல்சர் யுனிவர்சிட்டி) ஆகியவற்றின்கீழ் செயல்படும் எந்த பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் இத்தகைய நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்றிருந்தால் மாதம் தோறும் ‘என்.டி.எஸ்’ ரூ.1000 (ரூ.ஆயிரம் மட்டும்) வழங்கப்படும். வெளி மாநிலங்களில் சென்று படிக்கும் மாணவர்களுக்கும் இத்தகைய உதவித்தொகை வழங்கப்படும்.
13. ஆல் இந்தியா வெட்ரினரி என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை கல்வி நிறுவனங்களில் ‘பி.வி.எஸ்சி., அண்டு ஏ.ஹெச்.,’ (பேச்சிலர் ஆப் வெட்ரினரி சயின்ஸ் அண்டு அனிமல் ஹஸ்பண்ட்ரி) படிப்பில் 15 சதவீத இடங்கள் இந்த நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தகைய பொது நுழைவுத்தேர்வை ‘வெட்ரினரி கவுன்சில் ஆப் இந்தியா’ நடத்துகிறது. இத்திட்டத்தின்கீழ் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலம் இன்னும் வரவில்லை. கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறும் மாணவர்களுக்கு வருமானம் குறைவாக உள்ளது.
மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்றவர்களிடமோ, மருத்துவ நிபுணர்களிடமோ சென்றுதான் நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் இந்த கால்நடை மருத்துவத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் கூட சாதிக்கலாம். இத்துறையில் முதுகலைப்பட்டப்படிப்புகளிலும் மாணவர்கள் சேர்ந்து எளிதில் தேர்ச்சி பெறலாம். இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பலர் சாதனை புரிந்து வருகின்றனர்.
அரசு கால்நடை மருத்துவநிறுவனங்கள், கால்நடைப் பண்ணை, பால் பண்ணை, கோழிப் பண்ணை, பன்றிப் பண்ணைகள், மிருகக்காட்சி சாலைகள், தனியார் கால்நடை மருத்துவமனைகள், ராணுவக் கால்நடை மருத்துவமனைகள், மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விலங்கு பாதுகாப்புத் துறைகள், சரணாலயங்கள், குதிரைப்பந்தயம் நடைபெறும் இடங்கள், கால்நடை உற்பத்தி மையங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு கால்நடை மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. தனியார் நிறுவனங்களில் கால் நடை மருத்துவர்களுக்கு சிறப் பான எதிர்காலம் உள்ளது.
- பி.எஸ்.வாரியார்