/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
சூழ்நிலையை உணர்ந்து பணியாற்றும் தகுதியே இப்போதைய தேவை!
/
சூழ்நிலையை உணர்ந்து பணியாற்றும் தகுதியே இப்போதைய தேவை!
சூழ்நிலையை உணர்ந்து பணியாற்றும் தகுதியே இப்போதைய தேவை!
சூழ்நிலையை உணர்ந்து பணியாற்றும் தகுதியே இப்போதைய தேவை!
மே 10, 2009 12:00 AM
மே 10, 2009 12:00 AM
கடந்த சில மாதங்களாகவே உலகப் பொருளாதாரத்தில் தேக்க நிலை நிலவுவதையும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி காரணமாக உலகெங்கும் வேலையிழப்பு, சம்பள வெட்டு போன்றவை அரங்கேறிவருவதையும் பார்த்து வருகிறோம். உலகின் மிகப் பெரிய நிறுவனங்களாகத் திகழ்ந்த நிறுவனங்கள் கூட இந்தப் பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன.
இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை பல அம்சங்களில் சார்ந்திருப்பதால் இந்தப் பிரச்னையின் அதிர்வுகள் இங்கும் காணப்படுகின்றன. உலகப் பொருளாதாரத் தேக்க நிலை இந்தியாவை பெரிதும் பாதிக்கவில்லை என்றாலும் ஐ.டி., மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் இது கடுமையாக பிரதிபலிப்பதைக் காண்கிறோம். ஐ.டி., மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் படிப்பவருக்கு படித்து முடித்தவுடன் வேலை என்ற உத்தரவாதமான நிலை தற்போது இல்லை.
இந்த ஆண்டும் கேம்பஸ் முறையில் வேலைகளுக்கு ஆட்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் கடந்த ஆண்டுகளைப் போல பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களாகக் கருதப்படும் ஐ.ஐ.எம்., போன்ற பிசினஸ் பள்ளிகளில் படித்தவர்கள் கூட அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ற வேலைகள் கிடைக்காததால் மனதளவில் முரண்பாடுகளுடனேயே பணி புரிந்து வருகின்றனர். இதே போல ஐ.டி., மற்றும் மேனேஜ்மென்ட் படிப்புகளைப் படித்து பணிகளில் அமருபவர்களின் சம்பள விகிதங்களிலும் வீழ்ச்சி தான் காணப்படுகிறது. பொருளாதார மந்த நிலை ஏற்படும் போதெல்லால் வேலை வாய்ப்புகளே முதலில் பாதிப்புக்குள்ளாகின்றன. அதேபோல இந்த மந்த நிலையிலிருந்து பொருளாதார வளர்ச்சி காணும் மாறுதலில் வேலை வாய்ப்புகள் தான் இறுதியாகப் பிரச்னைகளை விட்டு வெளிவருகின்றன. இந்தத் தத்துவம் தற்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு கேம்பஸ் முறை பணி வாய்ப்புகளுக்கான சூழல் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தத் தேக்க நிலையையும் தாண்டி இன்று பணி வாய்ப்புகளில் நம்பிக்கை தரும் துறைகளாக சில துறைகள் கணிக்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் இதில் ஒன்று. பொருளாதார மந்த நிலையையும் தாண்டி இந்தியாவில் 6 துறைகளில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் உள்ளன. கல்வி, சுகாதாரம், பார்மா, நுகர்வோர் பொருட்கள், தொலைத் தொடர்பு மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவை இவை. இதில் இன்சூரன்ஸ் துறையின் ஒட்டு மொத்த வளர்ச்சியானது சிறப்பாக இல்லை என்றபோதும் தனியார் நிறுவனங்களின் வருகையும் நிதி முதலீடும் அதிகரித்திருப்பதால் ஊழியர்களின் தேவையும் அதிகரித்தே வருகிறது.
பொருளாதாரப் பிரச்னைகளால் சிறு நிறுவனங்களே கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன என்ற போதும் அவற்றின் எளிதில் மாறிக் கொள்ளும் தன்மை மற்றும் அளவின் காரணமாக இவை வேகமாக வளரத் தொடங்கும் நிலை தற்போது காணப்படுகிறது.
இனிவரும் 2 ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலை தொடரும் வாய்ப்பே அதிகமாகக் காணப்படுவதாக கணிப்புகள் கூறுகின்றன. ஐ.டி., மற்றும் மேனேஜ்மென்ட் துறைகளில் பயிலுபவர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியம். வேலை வாய்ப்பு சந்தை காலத்துக்கேற்ப தொடர்ந்து மாறி வந்துள்ளது.
இன்றைய சூழலின் யதார்த்தமான நிலையை உணர்ந்து தேவைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்பவர்களே நல்ல வாய்ப்புகளைப் பெற முடிகிறது. எனவே தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் உலகளாவிய மற்றும் இந்தியப் பொருளாதார மாற்றத்தின் நிலையை உணர்ந்து பணிகளின் தன்மைக்கேற்ப தங்களை செதுக்கிக் கொள்வதே காலத்தின் கட்டாயமாக உள்ளது.