/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
வேலைகள் குவிந்திருக்கும் மனிதவளத் துறை
/
வேலைகள் குவிந்திருக்கும் மனிதவளத் துறை
மே 16, 2009 12:00 AM
மே 16, 2009 12:00 AM
இந்தியாவில் எச்.ஆர்., எனப்படும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதைக் காண்கிறோம். ஊழியர்களை பணியில் அமர்த்துதல், ஊதிய நிர்ணயம், பயிற்சி தருவது, திறன் மேம்பாடு போன்ற பணிகளை இத்துறையினரே செய்கிறார்கள்.
இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார ஆண்டு வளர்ச்சி விகிதத்துக்கு இணையான 30% வளர்ச்சியை கண்டு வரும் இத்துறை 17 கோடி ரூபாய் மதிப்புடையது. தற்போது இத்துறையில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் மனித வள மேம்பாட்டு நிறுவனங்களும் மான்ஸ்டர்.காம், நௌக்ரி.காம் போன்ற வேலை போர்ட்டல்களும், அடிக்கோ, டீம்லீஸ் போன்ற சிறப்பு வேலை தளங்களும், கெல்லீஸ், மேன்பவர், மாபோய் போன்ற நிறுவனங்களும் கடுமையான போட்டிக்கு மத்தியில் வேகமாக வளர்ந்து வருகின்றன.
அதிகாரி நிலை பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்றே இகான் சென்டர், கார்ன்/பெர்ரி போன்ற நிறுவனங்களும், ஊழியர் தேர்வு பரிசீலனைகளுக்கான தாம்சன், பியர்சன் போன்ற நிறுவனங்களும் டேல்கார்னெகி, பிராங்க்ளின் கோவே போன்ற நிறுவனங்களும், ஆஸ்பயர் போன்ற திறன் மேம்பாட்டு நிறுவனங்களும் இத்துறையில் இயங்கி வருகின்றன. பல்வேறு வெளிநாட்டு எச்.ஆர்., நிறுவனங்களும் இந்தியாவில் களத்தில் குதித்து இந்திய நிறுவனங்களுக்கு கடும் சவாலாக அமைந்து வருகின்றன.
இதனால் எச்.ஆர்., துறை இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. தற்போதைய பொருளாதாரச் சூழலில் ஐ.டி., மற்றும் ரீடெயில் துறைகளில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உருவாகுவதால் இத்துறையில் எதிர்காலம் நம்பிக்கையளிப்பதாகவே இருக்கிறது.
இப்போது இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 10% வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனால் ஐ.டி., பாங்கிங், பைனான்சியல் சர்விசஸ், இன்சூரன்ஸ் துறைகள் அதிக வளர்ச்சியை எட்டியுள்ளன. இது போலவே ரீடெயில், டெலிகாம், ரியல் எஸ்டேட், டூரிசம் போன்ற துறைகளும் அதிக முன்னேற்றம் கண்டுள்ளன. இந்தத் துறைகள் மட்டுமே 2008ம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் வேலை வாய்ப்புகளையும் 2009ம் ஆண்டில் மற்றொரு 9 லட்சம் வேலைகளை உருவாக்கியிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இத்துறைகளில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி, காசாளர், டெல்லர், நிதி மேலாண்மை அதிகாரி, விற்பனை அதிகாரி, கிளைம் பிராசசிங் அதிகாரி போன்ற பணிப் பிரிவுகளுக்கு எண்ணற்ற நபர்கள் தேவைப்படவிருப்பதாக நம்பப்படுகிறது. 2010ல் இவை ஒரு கோடியே 80 லட்சம் வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் என கணிக்கிறார்கள்.
என்ன திறமைகள் தேவைப்படுகிறது?:
இன்றைய நிறுவனங்கள் தங்களது நிறுவனத்துக்கேற்ற பணித் திறன் மற்றும் பரந்த அறிவு, கம்ப்யூட்டர் அறிவு, சைக்கோமெட்ரிக் திறன்கள் இருப்பவரையே பணியில் அமர்த்த விரும்புகின்றன.
* தொடக்க நிலை வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிகளுக்கு ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு, ஆங்கில மொழித் திறன், குரல் வளம் மற்றும் சிறப்பான உச்சரிப்பு, பகுத்தாராயும் திறன் எனப்படும் லாஜிகல் ரீசனிங் திறன்கள், கணிதத் திறன், வாடிக்கையாளருடன் தகவல் பரிமாற்றத் திறன், குழுவாகப் பணி புரிய விருப்பம், பொறுமை, பரிவு போன்ற அடிப்படைத் திறன்களும் குணாதிசயமும் தேவைப்படுகிறது.
* பிற தொடக்க நிலை வேலைகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் தேவை என்பதோடு பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் பொதுவாக விரும்பப்படுவதில்லை. வெகுகாலம் தங்களது நிறுவனத்திலேயே பணி புரிந்து நிறுவனத்தோடு வளர்ச்சியடைபவர்களையே நிறுவனங்கள் விரும்புகின்றன.
* அதிகத் தகுதி உடையவர்களை வேலைக்கு சேர்ப்பதில் நிறுவனங்களுக்கு தயக்கம் உள்ளது. தேசிய அளவில் இயங்கும் ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளியில் கம்ப்யூட்டர் திறன்களைப் பெறுவது விரும்பப்படுகிறது.
சம்பள விகிதங்கள்: மிகத் திறமையானவர்களுக்கு ஊதியம் வழங்குவது ஒரு தடையாக எப்போதும் இருப்பதில்லை. சராசரியான திறன் கொண்டவருக்கு ரூ.7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் தரப்படுகிறது. சம்பளத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல் நிறுவனம் எப்படிப்பட்டது மற்றும் எதிர்கால வாய்ப்புகள் எப்படி போன்றவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்டே இத் துறையில் ஒருவர் தனது எதிர்காலத்தை திட்டமிட வேண்டும்.