மே 23, 2009 12:00 AM
மே 23, 2009 12:00 AM
இன்றைய நவீன உலகின் மன அழுத்தங்களையும் நோய்களையும் தீர்ப்பதில் இந்தியாவின் வேதம் தொடர்பான அறிவியல் பெரிதும் உதவி வருவது நாம் அறிந்ததே.
இந்தியாவின் நகர்ப்புறங்களில் இயங்கும் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் இதனைக் கருத்தில் கொண்டு யோகா மற்றும் தியானம் ஆகிய பிரிவுகளில் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. இத் துறையில் தொழில் ரீதியான பயிற்சிகளை வழங்கும் நோக்கத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகமும் சில கல்லூரிகளும் யோகா தெரபி, வேத கலாச்சாரம், தியானம் போன்ற பிரிவுகளில் வரும் கல்வியாண்டு முதல் பயிற்சிகளைத் தரவுள்ளன.
ஜெய்ப்பூரிலுள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் வேதம் தொடர்பான அறிவியலில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளையும் குறுகிய கால படிப்புகளையும் அறிமுகம் செய்யவுள்ளது. நிறுவனங்களில் ஊழியர்களின் உடல் நிலையைப் பராமரிப்பது மற்றும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது போன்ற காரணங்களுக்காக யோகா பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதே போல ஒவ்வொரு முன்னணி கல்வி நிறுவனமும் வேதம் தொடர்பான அறிவியலை பாடத்திட்டத்தில் சேர்க்க ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
கல்வி நிறுவனங்களின் இந்த முயற்சி பயிற்சி பெற்ற வேத அறிவியல் வல்லுனர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் புதிய பணி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போது வேலை வாய்ப்புச் சந்தையில் இத் தொழில் வல்லுனர்களுக்கு அதிகமான கிராக்கி நிலவுகிறது. இந்த முயற்சி நல்ல பணி வாய்ப்புகளை உருவாக்குவதோடு நமது பண்டைய வேத அறிவியலைப் பாதுகாக்கவும் உதவும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
யோகாவில் சான்றிதழ் படிப்புகளை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத் துறை நடத்தி வருகிறது. இநத் முயற்சி மாணவர்களிடமும் தனியார் கல்லூரிகளிலும் மிக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத் துறை உடல் நிலையையும் வளமான எதிர்காலத்தையும் இணைத்து வழங்குவதாக இதில் இணைய விரும்பும் மாணவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பொறியியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரிகளில் யோகா பயிற்சி பாடத்திட்டத் தோடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பிட்ஸ் பிலானி போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களும் இந்த முயற்சியில் இறங்குவதும் நோய் தீர்ப்பது போன்ற காரணங்களுக்காக நமது வேத அறிவியல் உலகெங்கும் புகழ் பெற்று வருவதும் இத்துறைக்கு மிக நல்ல எதிர்காலம் உள்ளது என்பதையே காட்டுகிறது.