/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
தனியார் துப்பறியும் படிப்பு - துறை அறிமுகம்
/
தனியார் துப்பறியும் படிப்பு - துறை அறிமுகம்
மே 30, 2009 12:00 AM
மே 30, 2009 12:00 AM
Private Detective Course எனப்படும் தனியார் துப்பறியும் படிப்புகள் நமக்கு அதிகம் அறிமுகமில்லாத படிப்புகள்.
நமது கற்பனை சார்ந்த உற்சாக வாழ்வில் தனியார் துப்பறியும் நிபுணர்களுக்கு ஒரு இடம் இருக்கிறது. ஆனால் இன்றைய உலகில் பெரும்பாலானவர்களுடன் தொடர்புடையவர்களாக தனியார் துப்பறியும் நிபுணர்கள் மாறி வருகின்றனர். தொழிற்கூடங்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள், திருமண வாழ்வின் கசப்பான நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக துப்பறிவாளர்களை நாடுவது அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.
தொடர்ந்து வளர்ந்து வரும் துறையாக இருப்பதாலேயே பயிற்சி பெற்ற திறனாளர்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் இல்லையென்றாலும் இத்துறையில் இன்று முறையான பயிற்சி தரக்கூடிய நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.தகுதிகள்
இந்தியாவில் தனியார் துப்பறிவாளராக செயல்பட எவ்வித உரிமமும் (லைசென்ஸ்) பெறத் தேவையில்லை. எனவே இத்துறையில் செயல்பட முறையான குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பது எதுவும் தேவையில்லை. எனினும் இந்தியாவிலுள்ள சில கல்வி நிறுவனங்கள் வழங்கும் துப்பறியும் படிப்புகளுக்கான டிப்ளமோ பெற ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதுமானது.
துறைப் படிப்புகள்
இத்துறையில் பின்வரும் படிப்புகள் தரப்படுகின்றன.
* ஒரு ஆண்டு டிப்ளமோ
* துப்பறியும் நிறுவனங்கள் நடத்தும் சிறப்புப் பயிற்சி
கிரிமினாலஜி மற்றும் பாரன்சிக் சயின்ஸ் பட்டப்படிப்பு மற்றும் இதில் டிப்ளமோ படித்திருப்பவர்கள் இப்படிப்புகளைப் படிப்பதைக் காண்கிறோம்.
பயிற்சி நிறுவனங்கள்
துப்பறியும் துறைப் படிப்புகளை இந்தூரிலுள்ள கிறிஸ்தவக் கல்லூரியும், புதுடில்லியிலுள்ள தேசிய தனியார் துப்பறியும் கல்வி நிறுவனமும் தருகின்றன. இத்துறையின் சிறப்புப் படிப்புகளை புதுடில்லியிலுள்ள ஏ.சி.இ., டிடெக்டிவ்ஸ் இந்தியா இன்டர்நேஷனல் செக்யூரிட்டிஸ் நிறுவனமும் ஆல் இந்தியா பிரைவேட் டிடெக்டிவ்ஸ் கூட்டமைப்பும் லான்சர்ஸ் நெட்வொர்க் லிமிடட் நிறுவனமும் தருகின்றன.
சில தகவல்கள்
விழிப்புணர்வு, வேகம், தீர்க்கமான மற்றும் தர்க்கரீதியான சிந்தனை இருப்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கேற்ற துறை தான் இது. இத்துறையில் சிறப்புப் படிப்புகளைப் படிப்பதன் மூலமாக தனி நபரின் திறமைகள் மேம்படுவதோடு சிந்தனையும் மெருகேறுகிறது. இது அவர்களின் தொழில் மேம்பாட்டுக்கு உதவியாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு துப்பறியும் நிபுணரின் பணியை ஏஜென்சிகளும் தனி நபர்களும் அதிகமாக இன்றைய கால கட்டத்தில் நாடுவதால் துப்பறியும் நிபுணர்கள் பொதுவாக பின்வரும் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஒரு குடும்பம் தொடர்புடைய உடமைகள், உயில் போன்றவற்றைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. திருமணம், குழந்தைகளின் பராமரிப்பு, விவாகரத்து, பிற உறவினர் குறித்த தகவல்கள் போன்ற குடும்பப் பிரச்னைகளைத் துப்பறிய வேண்டியுள்ளது. நிறுவனங்களுடன் தொடர்புடைய திருட்டு, ஏமாற்றுதல் மற்றும் ஊழியர்களின் துரோகம் போன்றவற்றை அறிய வேண்டியுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்புடைய உளவுப் பணிகளான டெண்டர்களை சமர்ப்பிப்பது, காப்பிரைட், பணிக்கு முன்னும் பின்னும் ஊழியர்களின் விபரங்கள் போன்றவற்றை துப்பறிய வேண்டும். இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்னும் இதழியல் பிரிவும் இத்துறையில் படித்தவருக்கு சிறப்பான பணியைத் தருகிறது. தேசிய உளவுப் பணிகளில் இத்துறையின் திறனாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. மிகவும் திறமை பெற்ற துப்பறியும் நிபுணர்கள் தங்களுக்கென்றே சொந்த உளவு நிறுவனங்களை தொடங்கலாம்.
வெளிநாடுகளிலுள்ள புகழ் பெற்ற துப்பறியும் நிறுவனங்கள் அனைத்துமே இந்தியாவிலும் செயல்பட பதிவு செய்துள்ளதுடன் இங்கும் அவை தான் பிரசித்தி பெற்று திகழ்கின்றன. எனவே இங்குள்ள திறனாளர்களுக்கு வெளிநாடுகளில் பணி புரியும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.
துப்பறியும் துறையில் புதிதாக இணையும் ஒருவருககு மாதம் 4 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை தொடக்கத்தில் சம்பளம் கிடைக்கிறது. குடும்பத் தகராறு தொடர்பான பிரிவில் இயங்குபவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவர்கள் மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.